ஸ்ரீவாஞ்சியம் 
தீபம்

கங்கை தீர்த்தம் தெரியும். குப்த கங்கை தீர்த்தம் தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம்.  இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை  ஐந்து மணி முதல் ஆறு மணிக்குள் சிவபெருமானும் பார்வதி தேவியும் அஸ்திரதேவரோடு பிரகாரவலம் வந்து குப்தகங்கையின் கிழக்கு கரையில் ஆசி வழங்கி அருள்வார்கள். கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

எமதர்மனின் பாசப்பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது. அத்தகைய மரண பயத்தை அடியோடு போக்கும் திருத்தலம்தான் ஸ்ரீவாஞ்சியம் எனும் திருவாஞ்சியம் ஆகும். இந்த ஆலயத்தில் வாஞ்சிநாத சுவாமி என்ற பெயரில்  இறைவன் அருள்பாலித்து வருகிறார். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.

ரு சமயம் சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல திருத்தலங்களை காட்டி அதன் சிறப்புகளை  எடுத்துரைத்தபடி வந்த ஈசன், காஞ்சி, காசி, காளஹஸ்தி என பல திருத்தலங்களையும் 
உமயவளுக்கு காட்டிவந்தார். ஸ்ரீவாஞ்சியதின் மகிமையை கூறும்போது, ‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது. இங்குள்ள தீர்த்தமான குப்த கங்கை கங்கையை விடவும் புனிதமானது. இந்த தலத்தில் ஓர் இரவு தங்கியிருந்தாலே கைலாயத்தில் சிவகணமாய் இருக்கும் புண்ணியம் கிடைக்கும்’ என்று கூறினார்.  இதை அடுத்து ஸ்ரீவாஞ்சியத்தில் தங்க உமையவள் திருவுளம் கொண்டாள். எனவேதான் இந்த தல நாயகிக்கு வாழ வந்த நாயகி என்ற பெயர் வந்தது..

ருமுறை லட்சுமிதேவி மகாவிஷ்ணுவிடம் கோபம்கொண்டு  பிரிந்து சென்றாள்.  திருமகள் இல்லாததால் வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் விஷ்ணு. சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்றை கண்டு அதற்கு பூஜை செய்தார். இதை அடுத்து ஈசன் மகாலட்சுமியை அழைத்து வரசெய்து மகாவிஷ்ணுவுடன் சேர்த்து வைத்தார். திரு என்று அழைக்கப்படும் திருமகளை மகாவிஷ்ணு வாஞ்சையால்  விரும்பி சேர்ந்த இடம் என்பதால் இந்த தலம் திருவாஞ்சியம் என்று பெயர் பெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் கணவன் மனைவி இங்கு வந்து இறைவனை வழிபட்டால் ஒற்றுமை  பலப்படும் என்பது நம்பிக்கை.

காசியில் வழங்கப்படுவதுபோல் ஸ்ரீ வாஞ்சியத்திலும் காசி கயிறு எனும் கருப்பு கயிறு வழங்கப்படுகிறது. காசியில் பாவமும் புண்ணியமும் சேர்ந்தே வளர்கின்றன. அதனால் காசியில் நம் பாவங்களுக்கு பைரவர் தண்டனை வழங்குகிறார்.  ஆனால், ஸ்ரீவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கிறது. அதனால் பைரவர் தண்டனை இங்கு இல்லை. இத்தல பைரவர் தண்டத்தைக் கீழே வைத்துவிட்டு தியான நிலையில் யோக பைரவர் ஆக மேற்கு நோக்கி எழுந்துருளி இருக்கிறார்.  நாய் வாகனமும் இங்கு இல்லை. இவரை ஆசன பைரவர் என்று அழைக்கிறார்கள்.

காசி கயிறு எனும் கருப்பு கயிறு

ஸ்ரீவாஞ்சியம் கோயிலின் தல மரம் சந்தன மரம் ஆகும். கிழக்கு பார்த்த ஐந்து நிலை  ராஜகோபுரமானது கம்பீரமாக காட்சி அளிக்கிறது.  இந்த திருக்கோயிலுக்கு வருபவர்கள் முதலில் குப்த கங்கையில்  நீராடி அருகே உள்ள கங்கை கரை விநாயகரை வழிபட வேண்டும். பின்பு தனி சன்னிதியில் உள்ள எமதர்மராஜனை வழிபட்டு பின்னர் அனுக்கிரக விநாயகர், பாலமுருகனை வழிபட வேண்டும். அதன் பிறகு மூலவரான வாஞ்சிநாத சாமியையும் மங்களாம்பிகையையும் தரிசனம் செய்ய வேண்டும்.

அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து நன்னிலம் செல்லும் சாலையில் அச்சுதலமங்கலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது ஸ்ரீவாஞ்சியம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT