Murugan temple 
தீபம்

"சஷ்டியை நோக்க" எனும் திருச்செந்தூர் கவசம் எவ்வாறு உருவானது தெரியுமா?

மும்பை மீனலதா

ல்ல அருட்கவியாகிய ஸ்ரீ தேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கி பாடினார். எதற்காக இந்தக் கவசத்தை பாடினார்? காரணம்?

ஒரு சமயம் சுவாமிகள் கடும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.

வாழ்க்கையே வெறுத்துப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார். அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான ஸ்ரீ தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார். 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவைகள்தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும். ஸ்ரீதேவராய சுவாமிகள் ஒவ்வொரு படை வீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.

கவசம் என்பது என்ன?

கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள தலை மற்றும் மார்பு பகுதிகளில் கவசம் அணிந்து கொள்வார்கள்.

அதேபோல,  கந்த சஷ்டி கவசம்,  தீமைகள், துயரங்கள்,  நோய் நொடிகள் போன்ற பலவற்றிலும் இருந்து நம்மைக்- காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.

சஷ்டியை நோக்க சரவணபவனார்.

சுவாமிகள் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த, 'சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்' என்று தொடங்கும் கவசம்.

இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம்  இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு,  பாடப்பட்டு வருகிறது. 

ஆறு கவசங்களையும் ஒருங்கே பாடுவது சிறப்பைத் தருமென்றாலும், அநேகர், "சஷ்டியை நோக்க சரவணபவனார்" கவசத்தை ஆறு தடவைகள் பாடுகின்றர்.

கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்கிவிடும். மேலும்,  கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் ஏராளமான பலன் கிடைக்குமென்பது உண்மை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கந்த சஷ்டி கவசந்தனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும்,  கந்தன் மனமுவந்து அருள்புரிவார்.

உபரித் தகவல்:

பாம்பன் சுவாமிகளும் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்கையில்,  தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தனுக்கு அரகரோகரா!

வேலனுக்கு அரகரோகரா!

முருகா சரணம்!

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT