திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் திருக்கோயில் 
தீபம்

ஆண்கள் மட்டும் நீராடும், ‘எம தீர்த்தக்குளம்’ உள்ள ஆலயம் தெரியுமா?

பொ.பாலாஜிகணேஷ்

ஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில், கீரமங்கலம் வழித்தடத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம் திருத்தலம். சிவபெருமானை அதிகமாக நேசிக்கும் அடியவர்கள் தவறாமல் உச்சரிப்பது, ’திருச்சிற்றம்பலம்’ எனும் வாசகமாகும். மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல திருவாசகத்தை சிவபெருமானே எழுதியதாகவும், அதன் முடிவில் தன்னுடைய பெயரை, ‘திருச்சிற்றம்பலம்’ என்று எழுதியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. அத்தகையச் சிறப்பு வாய்ந்த இந்த நாமத்தை உச்சரித்து பலன் பெற்றவர்கள் ஏராளம்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலத்து மண்ணை உடலில் பூசிக்கொண்டாலே முக்தி கிடைக்கும் என்கிறார்கள். அப்படிப்பட்ட திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் லிங்கத் திருமேனியாகக் காட்சி தரும் சிவபெருமான், பெரிய நாயகி உடனாய புராதனவனேஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் கொடிமரம் இல்லை. ஆலயத்தின் வெளியே நந்திகேஸ்வரர், அவருக்கு எதிர்புறம் வடக்கு பகுதியில் இரட்டை விநாயகர் சன்னிதி உள்ளது. லிங்கத் திருமேனியில் சிவபெருமான் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு பார்த்தும் வீற்றிருக்கிறார்கள்.

உள்பிராகாரத்தின் வடக்கில் மகாகணபதி, தனது தும்பிக்கையை வடக்குபுறமாக சாய்த்து வித்தியாசமான கோலத்தில் காணப்படுகிறார். இது ஒரு அபூர்வமான அமைப்பாகும். மேலும், மகாலட்சுமி, வள்ளி - தெய்வானை உடனாய முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, சப்த கன்னியர்கள், சண்டிகேஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மன், துர்கை மற்றும் பைரவர், சூரியன், சந்திரன், நவக்கோள்களுடன் கூடிய லிங்கத் திருமேனி என பல்வேறு கடவுளர் சிலைகளை ஆலயம் முழுவதும் நம்மால் காண முடியும். இந்த ஆலயத்தின் தலவிருட்சம் வில்வ மரமாகும். ஆடி, மார்கழி மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் இந்த ஆலயத்தில் திருமணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடந்தபடியே இருப்பதைக் காணலாம்.

இத்தல இறைவனின் பெயரைப் போலவே, இந்தக் கோயிலின் அமைப்பும், உருவச் சிலைகளும் புராதன காலத்தைச் சேர்ந்தவை போல் காட்சி தருகின்றன. இந்த ஆலயமானது திருமணத் தடை அகற்றும் பரிகாரத்தலமாக திகழ்கிறது.

எமன் சன்னிதி: சிவ தரிசனத்தை முடித்து வெளியே வந்தால், கிழக்கு நோக்கி 15 நிமிட நடைப்பயணத்தில் எமதர்மன் சன்னிதி அமைந்துள்ளது. கையில் சூலாயுதம், பாசக்கயிறு, மந்திரக்கோல் தாங்கி, வலது காலை மடக்கி, இடதுகாலை தொடங்கவிட்ட நிலையில் எமதர்மன் காட்சி தருகிறார். இந்த எமதர்மனை தரிசித்தாலே பாவங்கள் விலகிவிடுவதாக நம்பிக்கை. சனிக்கிழமை தோறும் பகல் 1.30 முதல் 3 மணி வரை, எமகண்ட நேரத்தில் ஆயுள் விருத்திக்கான பூஜைகள் இங்கு செய்யப்படுகின்றன.

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர, மரண கண்டம், விபத்துகள் நீங்க, பகை விலகவும் இந்த சன்னிதியில் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கீற்றுக் கொட்டகையில் சுதை சிற்பமாக இருந்த எமதர்மனுக்கு, தற்போது கற்சிலை வடித்து வைக்கப்பட்டுள்ளது. அவரைச் சுற்றி பரிவார தெய்வங்கள் உள்ளனர்.

எமன் சன்னிதிக்கு தெற்கு பகுதியில் ஆண்கள் மட்டும் நீராடும், ‘எம தீர்த்தக்குளம்’ அமைந்துள்ளது. இக்குளத்தில் பெண்கள் யாரும் நீராடுவது இல்லை. அதேபோல், துக்க நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்துகொண்ட ஆண்களும் இந்தக் குளத்தில் நீராடுவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT