பூமிக்கு அடியில் இருந்து சுயம்புவாகத் தோன்றிய 400 வருட பழைமையான மாரியம்மன் கோயில் எங்கிருக்கிறது தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் இருக்கிறது. இந்தப் பகுதியை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு லிங்கம நாயக்கர் என்பவர் ஆட்சி புரிந்து வந்தார். ஒரு சமயம் அவருடைய அரண்மனையில் பால் தட்டுப்பாடாக இருந்தது. இதனால் பக்கத்து ஊரிலிருந்து தினமும் ஒருவர் பால் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் செல்வார். அப்படி ஒரு நாள் பால் கொண்டு வரும்போது களைப்பாக இருக்கிறது என்று அவர் பால் குடத்தை கீழே வைத்துவிட்டு பக்கத்தில் இருக்கும் மரத்தடியில் படுத்து ஓய்வெடுத்தார்.
தூங்கி எழுந்து பார்த்தப்போது பால் குடம் காலியாக இருந்தது. இப்படியே தினமும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இதைப் பற்றி மன்னரிடம் கூற, மன்னர் உடனேயே அந்த இடத்தை தோண்டும்படி உத்தரவிட்டார். அந்த இடத்தை தோண்டும்போது வானத்தில் கருடன் வட்டமிட ஆரம்பித்தது. வேலையாட்கள் கடப்பாறையில் பூமியில் குத்தியதும் இரத்தம் பீரிட்டு வந்தது.
அந்த இடத்தைத் தொடர்ந்து தோண்டும்போது கையில் உடுக்கை, வேலாயுதத்துடன் அம்மன் அமர்ந்த நிலையில் இருப்பதை பார்த்து லிங்கம நாயக்கர் ஆச்சர்யமடைந்தார். அம்மனுக்கு அதே இடத்தில் மஞ்சள் நீராட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அச்சமயம் மேகங்கள் ஒன்றுதிரண்டு பலத்த மழை பெய்ததால் அம்மனுக்கு ‘மாரியம்மன்’ என்ற பெயர் வந்தது.
பிறகு லிங்கம நாயக்கர் அம்மனுக்கு அங்கேயே ஒரு கோயில் கட்டி வழிப்படத் துவங்கினார். இரத்தம் வந்த அம்மன் சிலை பிரதிஷ்டையானதால் இத்தலம் இரத்தம் என அழைக்கப்பட்டு பிற்காலத்தில் மருவி ‘நத்தம்’ என்று ஆகியதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் அம்மன் அன்னத்தின் மேல் அமர்ந்து அசுரனை மிதித்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கே பக்தர்கள் குழந்தை வரம், அம்மை போன்ற பிரச்னைகள் தீர வேண்டிக்கொண்டு வழிபடுகிறார்கள்.
பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறியதும் தீச்சட்டி எடுத்தல், கழுமரம் ஏறுவது, கரும்பு தொட்டில் கட்டுவது போன்ற நேர்த்திக்கடன்களைச் செய்கிறார்கள். அமாவாசையன்று உலுப்பக்குடி கரந்தன் மலையில் வற்றாது இருக்கும் கன்னிமார் தீர்த்தத்தை எடுத்து வருவதிலிருந்து திருவிழா தொடங்கி 16 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.