Nupura ganga origin Image Credits: Maalaimalar
தீபம்

அழகர்கோவில் நூபுர கங்கை எங்கிருந்து வருகிறது தெரியுமா?

நான்சி மலர்

ழகர் கோவிலில் இருக்கும் நூபுர கங்கை தீர்த்தம் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வருவதாக நம்பப்படுகிறது. பல ஆராய்ச்சிகள் மேற்க்கொண்டும் இதுவரை இந்த தீர்த்தம் உற்பத்தியாகும் இடம் எதுவென்று யாராலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

நூபுர கங்கைக்கு ஒரு புராணக்கதை உள்ளது. விஷ்ணு பகவான் வாமன அவதாரம் எடுத்தபோது விண்ணையும், மண்ணையும் அளப்பதற்காக விண்ணுலகத்தில் ஒரு காலையும், மண்ணுலகத்தில் ஒரு காலையும் வைப்பார். விண்ணுலகத்தில் பாதம் வைக்க செல்லும்போது பிரம்மா தன்னுடைய கமண்டலத்திலிருந்து கங்கை நீரை ஊற்றி விஷ்ணுவின் பாதத்தை வரவேற்றார்.

அந்த கங்கை நீர் பெருமாளின் கணுக்காலை தொட்டு சில துளிகள் அழகர்மலையில் விழுந்ததாக சொல்லப் படுகிறது. அன்று முதல் இன்று வரை அழகரின் திருவடியில் பெருகிவரும் புண்ணிய நதியாக திகழ்கிறது. கணுக்காலுக்கு சமஸ்கிருதத்தில் ‘நூபுரம்’ என்ற பெயர் உண்டு. அதனால்தான் இந்த தீர்த்தத்திற்கு நூபுர கங்கை என்ற பெயர் வந்தது. இந்த ஓடைக்கு தமிழில் ‘சிலம்பாறு’ என்ற பெயரும் இருக்கிறது. சிலம்பு என்பது கணுக்காலை குறிக்கும். திருமாலின் கணுக்காலை தொட்டு பூமியில் விழுந்த தீர்த்தம் என்பதால்தான் இதற்கு நூபுர கங்கை என்ற பெயரும் வந்தது.

நூபுர கங்கை தீர்த்தக்கரையில் உள்ள பெண் காவல் தெய்வம் ராக்காயி. இந்த அம்மனை அமாவாசையில் வழிபடுவது நன்மையளிக்கும். இத்தீர்த்தத்தில் அமாவாசையன்று நீராடி ராக்காயி அம்மனை வழிபட்டால் முன்னோர் சாபம் நீங்கும் என்கின்றனர். மல்லிகை கொடிகள் சூழ்ந்திருப்பதால் ராக்காயி அம்மன் வீற்றிருக்கும் மண்டபத்திற்கு ‘மாதவி மண்டபம்’ என்ற பெயர் வந்தது.

இந்த நூபுர கங்கை தீர்த்தத்தில் இரும்புசத்தும், தாமிர சத்தும் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. நோய்கள் தீர்க்கும் சக்தி கொண்டதாக இத்தீர்த்தம் விளங்குகிறது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது சிலம்பாறு என்று அழைக்கப்படுகிறது. சோலைமலையின் கீழ் வீற்றிருக்கும் அழகரின் அடிகளில் வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது. ஆற்றின் நீரின் ருசியும், ஆற்று நீரால் உருவாகும் தானியங்களில் ருசியும் மிகுந்து இருப்பதால் இதற்கு ‘தேனாறு’ என்ற பெயரும் உண்டு.

அழகர்கோவிலுக்கு சற்றே வடக்கே போனால் உத்திரநாராயணவாபி என்கிற தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தத்தை கொண்டுதான் அழகர் கோவில் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகமும், சமையலும் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அழகருடைய திருமஞ்சனத்திற்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் தூரத்திலிருந்து நூபுர கங்கை தீர்த்தம் கொண்டுவரப் படுகிறது.

அழகர் மதுரைக்கும்-வண்டியூருக்கும் போய் தங்கியிருப்பார். அப்போதும் நூபுரகங்கை கொண்டுவரப்பட்டுதான் அழகருக்கு திருமஞ்சனம் நடைப்பெறுகிறது. வேறு நீரில் அழகரை நீராட்டினால் அவருடைய உருவம் கருத்துவிடும். அதனாலேயே நுபுரகங்கையால் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. ஏனெனில் அழகரின் திருமேனி அவரஞ்சி என்ற அரிய வகை தங்கத்தால் ஆனது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி தினத்தன்று ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி தைலக்காப்பு திருமஞ்சனம் கண்டருளி பக்தர்களுக்கு எல்லா மங்களமும் அருள்கிறார்.

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அடிக்கடி ஜெல்லி மிட்டாய் சாப்பிடுபவரா நீங்க? போச்சு போங்க..! அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா?

கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

SCROLL FOR NEXT