திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யும்பொழுது அவருடைய கண்களை மட்டும் சரியாக பார்க்க முடியாதபடி நாமம் இட்டு மறைத்திருப்பதை கவனித்ததுண்டா? அதற்கான உண்மையான காரணம் என்னவென்பதைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.
உலகிலேயே திருப்பதி வெங்கடாசலபதி கோவில்தான் பக்தர்கள் அதிகமாக வந்து செல்லும் கோவிலாக கருதப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இக்கோவில் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் வெங்கடாசலபதிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் உள்ள பெருமாளின் கண்களுக்கு தெய்வீக ஆற்றல் இருப்பதாக நம்பப்படுகிறது. ஏழுமலையானின் கண்களில் இருந்து வரும் சக்தி வாய்ந்த கதிர்வீச்சை மனிதர்களால் தாங்க முடியாது என்பதால்தான் திருப்பதி ஏழுமலையானின் கண்கள் நாமம் போட்டு மறைக்கப்பட்டுள்ளது.
ஆனால், வியாழக்கிழமை மட்டும் திருப்பதி பெருமாளின் கண்கள் திறந்திருக்கும். இதற்கான காரணம் என்னவென்றால், வியாழக்கிழமை காலை பெருமாளுக்கு ‘திருப்பாவாடை சேவை’ நடைபெறும். இதை ‘அன்ன கூடோத்ஸவம்’ என்று சொல்வார்கள். வியாழக்கிழமை காலை ஆறு மணிக்கு திருப்பதி ஏழுமலையான் அணிந்திருக்கும் ஆபரணங்களையெல்லாம் களைந்து விடுவார்கள். பின்பு பெருமாளுக்கு இடப்படும் நாமத்தின் அளவை நன்றாக குறைத்து கண்கள் நன்றாக தெரியும்படி செய்வார்கள்.
வெங்கடேச பெருமாளுக்கு எதிராக மலைப்போல புளியோதரையை குவித்து வைப்பார்கள். இந்த புளியோதரையை நேராக கருவறையில் உள்ள பெருமாளுக்கு நிவேதனமாக படைப்பார்கள். வியாழக்கிழமையின் அபிஷேகத்தின்போது திருப்பதி ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்பது ஐதீகம்.
வியாழக்கிழமை அன்று திருப்பதி ஏழுமலையானின் கண்களை பக்தர்கள் நன்றாக தரிசனம் செய்ய முடியும். வியாழக்கிழமை பெருமாள் அணிந்திருக்கும் ஆபரணங்களை சுத்தம் செய்வதற்காக கழட்டும் பொழுது அணிகலன்கள் சூடாக இருக்குமாம்.
அன்ன கூடோத்ஸவத்தின்போது பெருமாளின் முன்பு மலைப்போல புளியோதரையும் இதர இனிப்பு பண்டங்களான பாயசம், லட்டு, ஜிலேபி, அப்பம் மற்றும் தேங்காய், பூ, சந்தனம், குங்குமம், ஆகியவை நெய்வைத்தியமாக பெருமாளின் முன்பு படைக்கப்பட்டிருக்கும். மந்திரங்கள் ஒலிக்க, ஏற்கனவே போடப்பட்டிருக்கும் பெரிய நாமத்தை எடுத்துவிட்டு சிறிதாக நாமம் போடப்படும்.
இதனால், பெருமாளின் பார்வை நேராக மனிதர்களின் மீது விழாமல் நேராக புளியோதரையின் மீது விழும்படி அமைத்திருப்பார்கள். எனவே அவரின் பார்வையின் வீரியம் குறையும் என்று நம்பப்படுகிறது. புளியோதரை ஒரு திரைப்போல செயல்பட்டு பக்தர்களை காப்பதாக சொல்லப்படுகிறது.