Anmiga katturai 
தீபம்

வாசற்படியில் உட்காராதே, நிற்காதேன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா?

ம.வசந்தி

வாசற்படியில் உட்காராதே, நிற்காதே என்பது மட்டும்தான் பல பேருக்கு தெரியும். அதற்கான காரணம் என்ன என்று கேட்டால் பெரியவர்கள் சொன்னார்கள் நான் அதை கடைப்பிடிக்கிறேன் என்பது மட்டும்தான் பதிலாக இருக்கும். அதற்கான விளக்கம்தான் இந்தப் பதிவு.

தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம். ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலஷ்மியும் வாசம் செய்வது போல, தலைவாசல் கதவில் குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஒருவருடைய குலதெய்வம் அவரவர் வீட்டின் கதவில்தான் குடியிருக்கும்.

அதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் கதவை சத்தமில்லாமல் திறக்கவும், மூடவும் கூறியதோடு அடிக்கடி எண்ணெய்விட்டு சுல பமாக மூடும்படி வைத்திருப்பார்கள். குழந்தைகள் கதவின் தாழ்ப்பாளை ஆட்டும் பொழுது பெரியவர்கள் அதட்டுவதை நாம் கேட்டிருப்போம். 

வீட்டின் தலை வாசலில் இருபுறங்களிலும் விளக்கு ஏற்றி வைப்பது ஏனென்றால்அந்த இரண்டு புறங்களிலும் கும்ப தேவதைகள் அமர்ந்திருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த தேவதைகளை குளிர்விக்கவே அப்பகுதியில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. அவர்களை வணங்குவதற்காகவே வீட்டின் தலைவாசலை குள்ளமாக வடிவமைத்து வைத்திருப்பார்கள். அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டிற்குள் நுழையும் முன் கும்ப தேவதைகளை வணங்கி செல்லுவதற்குதான் இவ்வாறு உயரம் குறைவாக முந்தைய காலங்களில் கதவுகள் வடிவமைக்கப்பட்டன.

அதுபோல் நாம் கோயில்களில் வாசல்படியை மிதிக்காமல் தாண்டி உள்ளே செல்கிறோமோ அதேபோல்தான் வீடு என்னும் கோவிலில் வாசல் படிகளை தாண்டி உள்ளே செல்லவேண்டும். நம் வீட்டின் நிலைவாசல் படிகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வழிபடுவதும் இந்த தேவதைகளுக்குதான்.

அத்தகைய தெய்வீக சக்தி வாய்ந்த இந்த நிலைவாசல் படியை மிதித்துக் கொண்டு உள்ளே செல்லக் கூடாது. அது போல் ஒருபோதும் நிலைவாசல் படியில் அமரக் கூடாது. வீட்டின் தலை வாசலில் மகாலட்சுமிகளும், கதவில் குலதெய்வமும் வாசம் செய்வதால் அந்த இடத்தில் தலை வைத்து படுக்கக் கூடாது,  அது போல் தலைவாசலில் கால் வைத்து நிற்கக் கூடாது. அங்கு நின்று தும்முவது, தலை வாருவது போன்றவற்றை செய்யக்கூடாது.

இதுபோன்ற சில தவறுகளை வீட்டில் செய்தால் பணவரவு கட்டாயம் தடைபடும். வீட்டின் உள்ளவர்களுக்கு மன நிம்மதி கெடும். கெட்ட சக்திகளும் உள்ளே நுழைவதற்கு வசதியாக அமைந்து விடும். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் நம்முடைய குலதெய்வம்தான். சில சமயங்களில் நமக்கு தெரியாமல் நாம் சில நேரங்களில் நமக்கு வரும் ஆபத்துக்கள் விலகியதை அடுத்து தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிட்டது என்று கூறுவோம்.

நம்முடைய பல கஷ்டங்களில் இருந்தும் நம்முடைய குலதெய்வம் தான் பாதுகாப்பாக மற்றும் துணையாக இருந்து காப்பாற்றும் ஆதலால் இதுவரை நாம் தெரியாமல் இத்தகைய தவறுகளை செய்திருந்தால் இனிமேல் தலைவாசலில் இத்தகைய தவறுகள் செய்யாமல் இருப்பதுதான் மிகவும் நல்லது. நமது வீட்டின் தலைவாசல் என்ற நிலைவாசல் படியில் மஞ்சள் குங்குமம் இட்டு மாலை நேரங்களில் விளக்கு வைத்து வழிபடுவோம். இவையெல்லாம்தான் வாசற்படியில் அமரக் கூடாததற்கு காரணமாகும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT