வாராஹி அம்மன் 
தீபம்

காவல் தெய்வம் வாராஹி அம்மனின் புகழ் பெற்ற திருக்கோயில்கள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ப்த மாதர்கள் என அழைக்கப்படுபவர்கள் பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி மற்றும் வாராஹி ஆகியோர் ஆவர். இவர்களில் வாராஹி என்பவள் லலிதா பரமேஸ்வரியின் நால்வகை படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள். தேவி மகாத்மியத்தில் நீண்ட ஆயுளுக்காக வாராஹி தேவியை வழிபட பரிந்துரைக்கப்படுகிறது. நேபாளத்தில், ‘பராஹி’ என்று அழைக்கப்படும் இவள், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில், ‘தண்டினி’ என்று போற்றப்படுகிறாள். வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் புகழ் பெற்ற திருக்கோயில்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

* விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு என்னும் ஊரில் அஷ்ட வாராஹி கோயில் உள்ளது. இது உலகிலேயே வாராஹி அம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாகக் கருதப்படுகிறது. இங்கு மகாவாராஹி, ஆதிவாராஹி, ஸ்வப்ன வாராஹி, லகு வாராஹி, உன்மத்த வாராஹி, சிம்ஹாரூடா வாராஹி, மகிஷாரூடாவாராஹி, அஸ்வாருடா வாராஹி ஆகிய அஷ்ட வாராஹிகளும் அருள்பாலிக்கின்றனர்.

* தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள நரிப்பட்டி என்ற ஊரில் புகழ் பெற்ற ஒரு வாராஹி அம்மன் கோயில் உள்ளது.

* ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதர் திருக்கோயிலுக்கு அருகில் வாராஹி அம்மனுக்கு தனிக் கோயில் அமைந்துள்ளது. மங்கள மகாகாளி என்ற பெயரில் மிகப் புராதனமான சுயம்பு மகா வாராஹி அம்மன் கோயில் இது. இந்த சுயம்பு வாராஹி அம்மனை ஆதிவாராஹி என்றே போற்றுகிறார்கள்.

* தஞ்சாவூர் பெரிய கோயிலில் வாராஹிக்கு என்று தனி சன்னிதி உள்ளது. கைகளில் ஏர் கலப்பையும், உலக்கையும் கொண்டு இவள் காட்சி தருகிறாள்.

* பண்ருட்டியில் உள்ள திருவதிகை பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் வாராஹி அம்மனுக்கு தனிச் சன்னிதி உள்ளது.

* சென்னை சோழிங்கநல்லூர் பிரத்தியங்கரா திருக்கோயிலில் வாராஹி அம்மன் சிறப்பாக எழுந்தருளி அருள்பாலிக்கிறாள்.

* கங்கை கரையில் உள்ள காலராத்ரி கோயிலில் இரவில் மட்டுமே வாராஹிக்கு வழிபாடு செய்யப்படுகிறது. பகலில் இக்கோயில் மூடப்பட்டிருக்கும்.

* ஒரிசா மாநிலம், கோனார்க்கிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சௌராசியில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வாராஹி கோயில் உள்ளது.

* வாரணாசியில் வாராஹி, ‘பாதாள பைரவி’யாக வழிபடப்படுகிறாள்.

* காஞ்சிபுரம் காமாட்சி அன்னையின் இடது புறத்தில் வாராஹி தேவி அருள்பாலிக்கிறாள். வாராஹி அம்மனின் எதிரில், ‘சந்தான ஸ்தம்பம்’ உள்ளது. இந்த ஸ்தம்பத்தை பிரதட்சணம் செய்ய பக்தர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

* மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோயிலில் தனிச் சன்னிதியும், கோலவிழி அம்மன் மற்றும் முண்டகக்கண்ணி அம்மன் கோயில்களில் வாராஹி அம்மன் சப்த மாதர்களுடனும் காட்சி தருகிறாள்.

* காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் 15 கிலோ மீட்டர் தொலைவில் திருமால்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் பள்ளூர் ‘அரசாலை அம்மன்’ எனும் சுயம்பு வாராஹி அம்மன் கோயில் உள்ளது.

* கேரளாவில் திருவனந்தபுரம் பெட்டாவில் உள்ள, ‘ஸ்ரீ பஞ்சமி தேவி கோயில்’ ஒரு புகழ் பெற்ற கோயிலாகும். திருச்சூரில் உள்ள அந்திக்காட்டில் உள்ள ஆலும்தாழம்
ஸ்ரீ வாராஹி கோயில் உள்ளது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT