கோபி தாலவ், துவாரகையில் இருந்து பேட் துவாரகா செல்லும் வழியில், 20 கி.மீ. தொலைவிலும், நாகேஷ்வர் ஆலயத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது. கண்ணனை தரிசித்து மகிழக் கோபிகையர் வருகை தந்து மகிழ்ந்த இடம் இது.
’தாலவ்’ என்றால் குளம் என்று பொருள். கோபியர்கள் பயன்படுத்தியதால் இந்த குளத்துக்கு, ‘கோபி தாலவ்’ என்று பெயர். குளத்தின் கரையில் மஞ்சள் வண்ணத்தில் மணல் இருக்கிறது. இதை, ‘கோபி சந்தனம்’ என்று சொல்கிறார்கள்.
இந்த இடத்தில் பௌமாசுரன் என்ற அரக்கனைக் கொன்று, அவனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த 16,000 இளவரசிகளைக் கண்ணன் மீட்டெடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. விடுவிக்கப்பட்ட கோபிகா இளவரசியர்கள் கண்ணன் மேல் விருப்புற்று மணம் முடிக்க நினைத்ததால் இந்த இடத்துக்கு, ‘கோபி தாலவ்’ எனப் பெயர் ஆயிற்று.
கண்ணனின் இளமைக் கால லீலைகளுக்கும் குறும்புகளுக்கும் இந்த இடத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. பிருந்தாவனத்து கோபிகையரோடு நடனமாடுவது கண்ணனுக்கு மிகவும் விருப்பமானது. துவாரகாவுக்குக் கண்ணன் இடம் பெயர்ந்த பிறகு அந்தப் பிரிவை கோபிகையர்களால் தாங்க முடியவில்லையாம். அவரைத் தரிசிக்க ஒரு பௌர்ணமி நாளில் இங்கு வருகின்றனர்.
‘வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்
பாயசீருடைப் பண்புடைப் பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே’
எனப் பெரியாழ்வார் சொன்னது போல மகிழ்கின்றனர்.
கண்ணனுடன் நடனம் ஆடிக் குதூகலிக்கின்றனர். இந்தக் குளத்தில் நீராடுகின்றனர். அதன் பிறகு இந்த மண்ணிலேயே தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு, தங்கள் கண்ணனுடன் நிரந்தரமாகக் கலந்துவிடுகின்றனராம். அவர்கள்தான் இங்கே மஞ்சள் வண்ண மணலாக மாறிவிட்டனராம். ஏற்கெனவே குளத்தின் கரையில் இருக்கும் மணல் மஞ்சள் வண்ணத்தில் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா? காரணம் இதுதான்! இந்த மஞ்சள் மணலை எடுத்துக் கிருஷ்ண பக்தர்கள், தங்கள் உடலில் நாமம் போன்ற குறிகளை இட்டுக்கொள்கிறார்கள்.
இங்கிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் அவரது வாழ்வில் நடைபெற்ற பல சம்பவங்களைச் சித்திரமாகத் தீட்டி இருக்கிறார்கள். ஆலயத்துக்குள் புகைப்படம் எடுப்பதை அனுமதிக்கிறார்கள் என்று சொல்வதைவிடப் புகைப்படம் எடுப்பதைக் கண்டுகொள்வதில்லை. அதனால் ஆசை தீர நிறையப் படங்கள் எடுக்கலாம்.
சிறிய உணவகங்களும் இங்கு இருக்கின்றன. அதில் சுவை மிகு அவல் தாளித்துத் தருகிறார்கள்!