ஜெனகை மாரியம்மன் 
தீபம்

நாற்பத்தெட்டு கிராம மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் ஜெனகை மாரியம்மன்!

மாலதி சந்திரசேகரன்

னிதனுக்கு எந்தக் குறை இருந்தாலும் பகவானிடம் முறையிடுவதுதான் வழக்கம். அதுவும் உடம்பு என்று வந்துவிட்டால் பகவானின் காலடியே சரணம் என்று பழியாகக் கிடப்போம். சிலர் அவர்கள் குலதெய்வத்தை வேண்டிக் கொள்வார்கள். இன்னும் சிலர் பகவானுக்கு அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று நேர்ந்து கொள்வார்கள். ஒரு ஊருக்கே ஒரு தெய்வம் குலதெய்வமாக போற்றி வழிபடும் அளவிற்கு இருக்க முடியுமா?ஆம் இருக்கிறது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில், சோழவந்தானில் அமைந்துள்ளது  ஜெனகை மாரியம்மன் திருக்கோயில். சோழவந்தான் மற்றும் சுற்றி இருக்கும் நாற்பத்தெட்டு  கிராம மக்களுக்கும் இக்கோயில் மாரியம்மனே குலதெய்வமாக திகழ்கிறாள் என்றால் மிகையில்லை.

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இத்திருக்கோயில், முன்னர் ஜன காயம்பதி, சதுர்வேதிமங்கலம், சோழாந்தக சதுர்வேதிமங்கலம், ஜனநாத சதுர்வேதிமங்கலம் என்கிற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. ஜனக மகராஜா, தனது புத்திரியான ஜானகியை, ஸ்ரீமந் நாராயணனுக்கு மணம் செய்து கொடுப்பதற்காக, இப்பதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நாராயண பெருமாளைக் குறித்துத் தவம் இருந்து தங்கி இருந்ததால், பின்நாட்களில் ஜானகியைப் போற்றும் விதமாக ஜனகை என்றாகி, ஜெனகை ஆனது.

இக்கோயிலின் கருவறையில் நின்ற கோலத்தில் ரேணுகா தேவி அம்பாள் சந்தனமாரி என்கிற பெயரிலும், அமர்ந்த நிலையில் இரண்டடி உயரத்தில் ஜெனகை மாரியம்மன் சுயம்பு மூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார்கள். கருவறையில் ரேணுகா தேவி வீற்றிருப்பதற்கு ஒரு புராணக் கதை உண்டு. அதையும் பார்ப்போம்.

ஜெனகை மாரியம்மன் கோயில் கோபுரம்

ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா தேவியானவள், கணவரின் பூஜைக்காக,  தினமும் ஆற்றங்கரைக்குச் சென்று அங்கு இருக்கும் மண்ணாலேயே ஒரு பானை செய்து, வருவது வழக்கம். ஒரு நாள் ரேணுகா தேவி அவ்வாறு நீர் எடுக்கச் சென்றபொழுது  வான வீதியில் பறந்த ஒரு கந்தர்வனின் நிழல் நீரில் தெரிந்தது. அதைப் பார்த்து, ‘கந்தர்வர்கள் இத்தனை அழகானவர்களா?’ என்று ஒரு வினாடி யோசித்த சமயத்தில், மண்ணால் பானை செய்ய முடியாமல் உதிர்ந்து போனது.

இதை ஞானக்கண் மூலம் அறிந்துகொண்ட முனிவர், தனது மகன் பரசுராமனைக் கூப்பிட்டு தாயின் தலையைக் கொய்து வரும்படி கூறினார். தாயின் தலையைக் கொய்யச் சென்ற சமயம் தடுத்து நின்ற ஒரு பெண்ணின் தலையையும் வெட்டி வீழ்த்திவிட்டு, தந்தையின் கட்டளையை நிறைவேற்றிய கதையை அநேகர் அறிவோம். தந்தை கூறிய விதமே செய்த பரசுராமருக்கு, ‘உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்’ என்று கூறியபொழுது தாய்க்கு உயிர் பிச்சை கொடுக்கும்படி வேண்டி நின்றார் பரசுராமர். உடனே முனிவர் தனது கமண்டலத்தில் இருந்த நீரைக் கொடுத்து, ‘வெட்டிய உடலையும் தலையையும் சேர்த்து வைத்து,  நீரைத் தெளித்தால் உன் தாய் உயிர் பெறுவாள்’ என்று கூறினார். ஆனால், பரசுராமரை தடுத்து நிறுத்திய பெண்ணின் தலையோடு தனது தாயின் உடலை தவறுதலாகப் பொருத்தியதால் அவ்வுருவம் ராட்சதக் குணங்களைக் கொண்டது.

துஷ்ட சக்தியை அடக்கும் விதமாக இத்தலத்தில் மாரியம்மன் சாந்த ஸ்வரூபியாக அருள்பாலிக்கிறாள். எண்ணற்ற நோய்களை குணப்படுத்தும் ஒரு தெய்வமாக இந்த அம்மன் போற்றப்படுகிறாள். முக்கியமாக, அம்மை நோய் கண்டவர்கள் இக்கோயிலுக்கு வந்து, இங்கு இருக்கும் கிணற்றில் நீராடி, அம்மனுக்கு அர்ச்சனை செய்து, அர்ச்சகர் தரும் தீர்த்த பிரசாதத்தை உட்கொண்டு மனம் உருக வேண்டிக் கொண்டால் எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று கூறுகிறார்கள். அந்தத் தீர்த்தத்தில் தல விருட்சமான வேம்புவின் நீர், அம்மனின் பிரசாதமாக மஞ்சள் மற்றும் சில மருத்துவ குணங்கள் கொண்ட தழைகள் சேர்க்கப்படுவதால் சர்வரோக நிவாரணியாக இந்தத் தீர்த்தம் கருதப்படுகிறது. இதனால் இந்தக் கோயில், ‘மருத்துவக் கோயில்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது. ‘கோயிலிலேயே மருத்துவச்சி இருக்கும்பொழுது வெளி மருத்துவர் எதற்கு?’ என்று ஊர் மக்கள் கூறுகிறார்கள்.

இதில் அதிசயமான சம்பவம் என்னவென்றால், நவராத்திரி சமயம் விஜயதசமி அன்று, வைகை ஆற்றில் அம்பு போடும் திருவிழாவின் பொழுது ஒவ்வொரு வருடமும் மழைத்தூறல் பூமியில் விழுவது மறுக்க முடியாத உண்மையாகும். மதுரையில் இருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில் அருள்பாலிக்கும் இந்த மாரியம்மனை அவசியம் ஒரு முறை எல்லோருமே தரிசிக்க வேண்டும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT