சென்னை கந்தகோட்டம் முருகன் கோவில் பாரிமுனை பகுதியில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஐந்து நிமிட நடையில் கோவிலை அடையலாம். மூலவர் கந்தசாமி. உற்சவர் முத்துக்குமாரர். வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் அற்புதமான திருத்தலம். இக்கோவிலின் தலவிருட்சம் மகிழ மரம். தீர்த்தம் சரவணப் பொய்கை. ஐந்து நிலை கோபுரங்களை கொண்டது இக்கோவில்.
தல பெருமை:
உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடி மரத்துடன் வீற்றிருக்கிறார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார். விசேஷ நாட்களில் இவருக்கே பிரதான பூஜை நடத்தப்படுகிறது. குளக்கரை விநாயகர் சித்தி, புத்தியுடன் தனி சன்னதியில் காணப்படுகிறார். சரவணப் பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் உள்ளார். அவருக்கு வலப்புறத்தில் லட்சுமி தேவியும், இடப்புறம் சரஸ்வதி தேவியும் உள்ளனர்.
பிரார்த்தனைகள்:
பால்குடம், பால் காவடி, திருக்கல்யாண உற்சவம், முடி காணிக்கை ஆகியவை சிறந்த பிரார்த்தனைகளாக உள்ளன. செவ்வாய்க்கிழமைகளில் விசேஷமாக பன்னீர் அபிஷேகம் நடைபெறும் நேரத்தில் சுவாமியை வழிபட ஐஸ்வர்யம் பெருகும், குடும்பம் ஒற்றுமையுடன் சிறந்து விளக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தல சிறப்பு:
முருகப் பெருமான் இவ்விடத்தில் தானாகவே விரும்பி வந்தவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மிகச் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தனித்தனி சன்னிதிகளில் உள்ளனர். மூலவருக்கு நேராக வாயில் கிடையாது. அவருக்கும் கொடி மரத்திற்கும் இடையே துளைகளுடனான சுவர் மட்டும் உள்ளது.
தல வரலாறு:
சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த பொழுது கனத்த மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் அவரால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. எனவே அங்கேயே ஒரு மடத்தில் தங்க, அன்றிரவு சிவாச்சாரியார் கனவில் காட்சி தந்த முருகன் அருகில் உள்ள புற்றில் தான் குடி கொண்டிருப்பதாகவும் தனக்கு கோயில் கட்டும்படியும் கூறி அருளினார். கண் விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன் சிலை இருப்பதைக் கண்டு அந்த சிலையை எடுத்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டார். வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பிறகு சிலையை எடுக்க முயற்சிக்க முடியவில்லை எனவே அந்த இடத்திலேயே கோவிலை கட்டினார்.
நேர்த்திக்கடன்:
இக்கோயிலில் தினமும் கோமாதா பூஜை நடைபெறுகிறது. இங்குள்ள பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வணங்க நோய்களும், தோஷங்களும் நீங்குவதாக கூறப்படுகிறது. இங்குள்ள சரவணப் பொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைத்து நோய்கள் நீங்க வேண்டிக் கொள்கின்றனர்.
திருவிழாக்கள்:
கந்த சஷ்டி திருவிழா, ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், வைகாசி வசந்த உற்சவம், தையில் பதினெட்டாம் நாள் பிரதான திருவிழா போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோவில் காலை 6:00 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.