'கந்தன் எனும் பெயரைச் சொன்னாலே கஷ்டங்கள் விலகி ஓடும்!’ என்பார்கள். அதர்மத்தை அழிக்கவும், அன்பு நெறி நின்று அறவழியில் செல்வோரை ஆற்றுப்படுத்தவும் அவன் என்றுமே தயங்கியதில்லை! அதனால்தான் குல தெய்வங்கள் வேறாக இருந்தாலும் இஷ்ட தெய்வமாக முருகனை ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம்! அதிலும் சூர சம்ஹாரத்தன்று, திருச்செந்தூரில் கடல் அலைகளே மனித சமுத்திரத்தைக் கண்டு வெட்கித் தலைகுனிந்து கடலுக்குள் திரும்பும் அதிசயம் ஆண்டுதோறும் நிகழ்வதைக் காணலாம்! ஆணவத்தை அழித்துத் தத்துவத்தைப் போற்றி நிலைநாட்டும் புண்ணியத் திருவிழாவே சூரசம்ஹாரம்!
ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்பை முக்கியமாகக் கருதி செயல்படுவது இயல்பே! பாம்புகள், நாய்கள் அதிகமுள்ள இடங்களில் நடமாடுபவர்கள் கைகளில் கம்புகள் வைத்திருப்பார்கள். செல்வமும், அரசியல் செல்வாக்கும் கொண்டவர்கள் சுய பாதுகாப்புக்காகத் துப்பாக்கிகள் வைத்துக் கொள்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அரசே இசட் ப்ளஸ் (z plus) பாதுகாப்பு வரை வழங்குகிறது! கம்பு இல்லாமலோ, துப்பாக்கி இல்லாமலோ, பாதுகாப்பாளர்கள் இல்லாமலோ சிக்கிக் கொண்டால் சில நேரம் நம் கதி அதோகதிதான்!
சிலருக்கோ பாதுகாப்பு, அதாவது கவசம் உடலுடனே சேர்ந்து விடுகிறது கர்ணனை போன்ற புண்ணியவான்களுக்கு!கவச, குண்டலங்கள் கர்ணனை காத்ததாகவும், அதனாலேயே அவற்றை இந்திரன் சூது வழியில் கவர்ந்ததாகவும் வரலாறு விளம்பும்!போருக்குச் செல்பவர்கள் போர்க் கவசங்கள் அணிந்தே போரிடச் செல்கிறார்கள். இவையெல்லாமே புறக்கவசங்கள்! அகக்கவசம் ஒன்றுண்டு! அதுதான் நம் கந்தர் சஷ்டி கவசம்!
இந்தக் கவசத்தை மனதில் ஏந்தி விட்டால் புறக் கவசங்கள் எதுவுமே நமக்குத் தேவையில்லை! இந்தக் கவசம் மனதில் பதியப் பதிய, உள்ளம் தூய்மையாகும்; எண்ணங்கள் அறவழி செல்லும்; நல்லதையே நாளும் சிந்திக்கும்; அமைதி ஒன்றே ஆழ்மனதில் குடியிருக்கும்! ‘துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித் தோங்கும்…’ என்று தொடங்கி, ‘சரணம் சரணம் சரவண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்’ என்று முடியும் இந்தப் பாக்களுக்குள், பாலன் தேவராய சுவாமிகள் பலவற்றையும் சேர்த்து, அமிர்த பானமாக ஆக்கித் தந்து சென்றுள்ளார்!
முன்னதாக, முருகக் கடவுளின் இயல்பை, அழகை வர்ணிக்கும் அவர், நடுநடுவே மாலா மந்திரங்களையும் (மாலா - மகத்தான, மாலை போன்ற மந்திரங்கள்) நமக்காக இணைத்துத் தருகிறார்! அடுத்து, நம் அவயவங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கூறி, அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வேல் காக்க வேண்டுமென்று விண்ணப்பிக்கிறார்! அதாவது, நாம் இறைவனிடம் விண்ணப்பிக்க, சொல்லிக் கொடுத்துள்ளார்!
மருத்துவத் துறையில் முதலில் பொது மருத்துவமாக இருந்தது பின்னர் எலும்புக்கு, நரம்புக்கு, பல்லுக்கு என்றெல்லாம் பிரிந்ததற்கு முன்னோடியாக அவர் திகழ்கிறார். அதன் பிறகு, பில்லி, சூனியம் போன்றவை நீங்கவும்,பலவித நோய்கள் தாக்காதிருக்கவும் வேண்டச் செய்கிறார்!
அறுபடை வீடுகளில் வாழும் முருகனை ஆடிப் பாடி வணங்க வேண்டியது குறித்தும், உற்சாகமே உள்ளத்துக்கு மருந்து என்பதையும் விளக்குகிறார்! உயிருக்கும், உடலுக்கும் உண்மைக் கவசமாக விளங்கும் இதனை எளிதாகப் பாராயணம் செய்யலாம்! முதல் தேவை, ஆர்வம்! அடுத்து, உள்ளங்கையில் அடங்கும் பாக்கட் புத்தகம்! உங்களால் விரைவில் மனப்பாடம் செய்ய முடியுமானால், அதற்கேற்றாற்போல் இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்! ஒரு வாரம், ஒரு மாதம், ஓர் ஆண்டு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்!
மாதம் என்றால், இந்தக் கிருத்திகையில் ஆரம்பித்து அடுத்த கிருத்திகை! ஒரு நாளைக்கு 4 வரிகள் என்றோ, ஒரு பக்கம் என்றோ உங்கள் வசதிக்கேற்பத் திட்டமிடுங்கள்! பாக்கட் புத்தகம் எப்பொழுதும் உங்கள் கூடவே இருக்கட்டும். தனியான பயணங்களின்போது மனப்பாடம் செய்யலாம். முன்பு மனனம் செய்ததை ஞாபகப்படுத்திப் பார்க்கலாம். மறந்ததை உடனே புத்தகத்தைப் பார்த்து நினைவில் கொண்டு வரலாம்!படுக்கையில் படுத்தவுடன் பாராயணம் செய்ததைச் சொல்லலாம்! நடைப் பயணத்தின்போது மனதுக்குள் சொல்லிக் கொள்ளலாம்! களைப்பு தெரியாது!
அப்புறமென்ன? பாராயணம் செய்யுங்கள்! அடுத்த சூரசம்ஹாரத்தின் போதாவது பாராயணம் செய்ததைப் பக்குவமாய் முருகன் காதுகளில் ஓதி உயர்வடைவோம்! உற்சாகம் மிகக் கொண்டு, உள்ளமும் மனதும் உறுதி மிகப்பெற்று, சண்முகன் புகழ் பாடி சங்கடங்கள் நீங்கி வாழ்வோம்!