திருவாலங்காடு ... Image credit - youtube.com
தீபம்

காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்த திருத்தலம்!

இந்திராணி தங்கவேல்

'அரங்கில் அண்டமுற நிமிர்ந்த அருளிய நாயனார்'

திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையின் வழித்தடத்தில் அமைந்துள்ளது இந்தத் திருவாலங்காடு திருத்தலம். இத்திருத்தத்தின் கிழக்கில் உள்ள ராஜகோபுரம் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. 

ரத்தினசபை:

இறைவனால் 'அம்மையே 'என்று அழைத்துச் சிறப்பிக்கப்பெற்ற காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்து நடராசரின் திருவடிக்கீழிருந்து சிவானந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் திருத்தலமே' வடாரண்யம்' என அழைக்க பெரும் திருவாலங்காடு திருத்தலம் ஆகும். இறைவன் காளியுடன் ஊர்த்தவ நடனம் ஆடிய திருத்தலமாகவும், நடராஜ பெருமாள் திரு நடனம் புரியும் பஞ்ச சபைகளில் ரத்தின சபையாகவும் சிறப்புற்று விளங்குவது இத்திருவாலங்காடு அருள்மிகு வட ஆரண்யேஸ்வரர் திருக்கோயில் ஆகும். 

கமலத்தேர் சிறப்பு:

இத்திருக்கோயிலின் தலவிருட்சம். ஆலமரமாகும். தீர்த்தம் முத்தி தீர்த்தம் .தீர்த்தக் கரையில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. நான்கு கால பூஜையும் ஆருத்ராவும்  சிறப்பாக நடைபெறுகின்றன. இங்குள்ள கமலத்தேர் எங்கும் இல்லாத சிறப்புப் பெற்றது. அழகிய வடிவில் தாமரை மலர்ந்தது போன்ற அமைப்பு உடையது இந்த கமலத்தேர். காலை 7 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 முதல் 8 மணி வரையும் தரிசனம் செய்ய உகந்த நேரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன .இவை விசேஷமான தினங்களில் மாறுதலுக்கு உட்பட்டதும் கூட. 

தெய்வங்கள்:

உள் பிரகாரங்களில் சித்தி விநாயகர் ,சுப்பிரமணியர் ,அகோர வீரபத்திரர், நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, பஞ்சலிங்கங்கள், சூரியன், சந்திரன், பெருமாள், நவக்கிரகம் ஆகியோர் உள்ளனர். 

திருத்தலப் பெருமைப் பற்றி பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்கள். மேலும் காரைக்கால் அம்மையார், பட்டினத்தடிகள், அருணகிரிநாதர், கட்சியப்ப சிவாச்சாரியார், ராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் முதலான பல அருளாளர்களும் இத்திருத்தலத்தைப்

பற்றி பாடி பரவசமடைந்து உள்ளனர். திருவாலங்காட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழையனூர், சத்தியத்திற்காக தம் உயிரை தந்து புகழ் கொண்ட வேளாளர் பெருமக்களால் பெருமை கொண்டு விளங்குகின்றது. வேளாளர்கள் தீப்பாய்ந்த மண்டபம் இன்றும் திருவாலங்காட்டுத் திருத்தலத்தில் இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

கல்வெட்டு:

மிகவும் பழமையான இத்திருக்கோயிலில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டில் நடராஜ பெருமானின் பெயர் 'அரங்கில் அண்ட முற நிமிர்ந்தருளிய நாயனார் 'என்று கூறப்பட்டுள்ளது.

பிரார்த்தனை:

நடனத்தில் சிறப்பு பெற விரும்புபவர்கள் தரிசிக்க வேண்டிய திருத்தலம் இது. கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்க தரிசிக்க வேண்டிய தலமாகவும் இது விளங்குகிறது. காளி தேவியை வணங்கிய பின்னர் மூல வரை வணங்கினால் முழு பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை . ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தில் தரிசனம் செய்தால் எல்லா வகையான சிறப்பும் கிடைக்கும் என்கிறது இத்தலத்துப் புராணம். 

காளியின் செருக்கு அடங்கிய கதை:

நடனத்தில் தன்னை மிக்கவர் இல்லை. தானே இறை என செருக்குடன் இருந்தாள் காளி. முஞ்சி கேச கார்கோட முனிவர் வேண்ட, காளியின் செருக்கை அடக்க சிவன் தனது இடது காலை தலைக்கு மேல் உயர்த்தியும், எட்டு கரங்களும் விரித்த சடையுடனும் ஊர்த்தவ தாண்டவம் புரிந்து காளியின் செருக்கை அடக்கினார். கால் தூக்கி ஆட பயந்த காளி தன் செருக்கு அடங்கி குளக்கரையில் சென்று ஒதுங்கினாள்.

காரைக்கால் அம்மையார் அமர்ந்த கோலத்தில் உள்ள திருக்கோயில்:

ஊர்த்துவ நடனம் புரிந்த நடராஜன் தரிசனத்தை சிவனின் பாதம் பட்ட ஊரில் தன் பாதம் படக்கூடாது என அஞ்சி தலையால் நடந்து வந்த காரைக்கால் அம்மையார், அவரது திருவடியில் கீழ் வாழும் பெருமை பெற்ற திருத்தலம் திருவாலங்காடு திருத்தலம் ஆகும். காரைக்கால் அம்மையார் இறைபக்தியில் ஒன்றி உடல் மெலிந்து நாதன் தாள் புகழ் பாடும் பாவணையில் அமர்ந்த கோலத்தில் உள்ள திருத்தலம் ஆகும். காரைக்கால் அம்மையார் கால்பதியாத ஊரில் சென்று நடராஜரையும் நாணிய மங்கையையும் கண்டு திருவடி தொழுவோம். வேண்டியதைப் பெறுவோம்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT