நம் பாரத தேசத்தில் உடற்பிணிகளுக்கு நல்மருந்தாகி, பிணிகளைப் போக்கி ஆரோக்கியமுடன் திகழச் செய்யும் திருத்தலங்கள் நிறையவே உண்டு. இப்படி நமக்கு ஆரோக்கியமான வாழ்வைத் தரும் ஆலயங்களில் ஒன்று ஊட்டத்தூர். ஊற்றத்தூர் என்று கல்வெட்டில் இருந்த பெயர் பேச்சு வழக்கில் ஊட்டத்தூர் ஆகிப் போனது. அதுதான் திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடிக்கு அருகே உள்ள மிகத் தொன்மையான ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜ கோபுரம் உள்ளது. இது ஒரு பாடல் பெற்ற திருத்தலம்.
ஊட்டத்தூரின் மேற்கே உள்ள சோளேஸ்வரம் என்னும் கோயிலை நிர்மாணித்த ராஜராஜ சோழன் அடிக்கடி அப்பகுதிக்கு வருவது வழக்கமாக இருந்த சமயம், ஒரு முறை மன்னர் வருகைக்காகப் பாதையை சரி செய்யும் பணியில் மண்வெட்டியால் புல் செதுக்கும்பொழுது ஓரிடத்தில் இரத்தம் வரவே இச்செய்தி மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது. மன்னர் வந்து சோதித்தபோது அங்கே சிவலிங்கத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார். பின்னர் அந்த சுயம்புலிங்கத்திற்கு அந்த இடத்திலேயே கோயில் ஒன்றை எழுப்பினார். இன்றும் மண்வெட்டியால் வெட்டப்பட்ட வடு சிவலிங்கத்தில் தலைப்பகுதியில் காணப்படுகிறது. இங்கே சிவபெருமானுக்கு சுத்தரத்தினேஸ்வரர், தூயமாமணீஸ்வரர், மாசிலாமணி என்னும் திருநாமங்கள் உண்டு. இந்தத் தலத்தின் அம்பாள் அகிலாண்டேஸ்வரி. இக்கோயில் தீர்த்தம் சிவபெருமான் சன்னிதிக்கு எதிரிலேயே அமைந்துள்ளது. இதற்கு பிரம்ம தீர்த்தம் என்று பெயர்.
இங்கே பஞ்சநதனக்கல் என்னும் அரிய வகைக் கல்லில் செய்யப்பட்ட எட்டு அடி உயர நடராஜப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பக்கத்தில் சிவகாமசுந்தரி அம்மன். இந்த பஞ்சநதனக்கல்லுக்கு மிகுந்த மருத்துவ சிறப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பஞ்சநதனக் கல்லால் ஆன நடராஜப் பெருமான் சிறுநீரகம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் அறவே போக்கி அருள்பவர். இதற்கு இங்கே வந்து நம்பிக்கையுடன் வழிபட்டு தங்கள் சிறுநீரகப் பிரச்னைகளிலிருந்து விடுபட்டதால் நன்றி செலுத்த நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களே சாட்சி. சிறுநீரகக் கோளாறுகள் உள்ளவர்கள் எப்படி பரிகார பூஜை செய்ய வேண்டும் என்னும் விளக்கம் கோயிலில் அளிக்கப்படுகிறது.
சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, கோயிலிலேயே கிடைக்கும் வெட்டி வேரை ஒரு கிலோ வாங்கி அதை 48 துண்டுகளாக்கி, மாலையாகக் கோத்து நடராஜருக்கு அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்னர் அந்த மாலையை பிரசாதமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். கோயிலில் அமைந்திருக்கும் பிரம்ம தீர்த்த நீரை 5 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு கேனில் எடுத்துச் செல்ல வேண்டும். இந்தத் தீர்த்தம் எத்தனை நாட்களானாலும் கெடவே கெடாது என்பது இதன் சிறப்பு.
வீட்டுக்குச் சென்றதும் தினமும் இரவில் பிரம்ம தீர்த்தத்தை ஒரு குவளையில் நிரப்பி, வெட்டிவேர் மாலையில் இருந்து ஒரு துண்டை எடுத்து அந்த தீர்த்தத்தில் போட்டு ஊற விட வேண்டும். மறுநாள் காலையில் வெட்டிவேர்த் துண்டை எடுத்து விட்டு, அந்த தீர்த்தத்தைப் பருக வேண்டும். இப்படித் தொடர்ந்து 48 நாட்கள் பருகி வர, சிறுநீரகக் கோளாறுகள் அறவே நீங்கி, ஆரோக்கியம் பெறலாம் என்பது ஐதீகம்.
பெண்கள் மட்டும் வீட்டு விலக்காகும் நாட்களில் இந்தத் தீர்த்தத்தைப் பருகக் கூடாது. 48 நாட்கள் முடிந்ததும் அந்த வெட்டி வேர்த் துண்டுகளை நீர் நிலைகளில் சேர்த்து விட வேண்டும். இப்படி 48 நாட்கள் பரிகாரம் செய்து பிணி தீர்ந்தவர்கள், மறுபடியும் கோயிலுக்கு வந்து நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
சிறுநீரகக் கோளாறுகள் உள்ள சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் இங்கே வந்து பக்தியுடனும் நம்பிக்கையுடனும் வழிபட்டு நோய் நீங்கி ஆரோக்கியம் பெற்றதை இங்கே வந்து சொல்கிறார்கள் என்கிறார்கள் கோயிலில் உள்ளவர்கள்.
நாமும் ஒருமுறை இந்தத் தலத்திற்குச் சென்று ஐயன் சுத்தரத்தினேஸ்வரரையும், ஆடல்வல்லான் நடராஜப் பெருமானையும் தரிசித்து உடற்பிணிகளோடு மனப் பிணிகளும் நீங்கிட வரம் பெற்று வருவோம்.