முருகப்பெருமான் ஒரே நாளில், காலையில் குழந்தையாகவும், மதியவேளையில் இளைஞனாகவும், மாலையில் முதியவனாகவும் மூன்று ரூபமாகக் காட்சித் தரும் கோவில் எங்குள்ளது தெரியுமா? அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
சென்னையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆண்டார் குப்பம் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் 900 ஆண்டுகள் பழமையான பால சுப்ரமணிய சுவாமி கோவில்தான் அந்த புகழ்பெற்ற கோவிலாகும். அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பட்ட ஸ்தலங்களுள் இதுவும் ஒன்றாகும். சிறுவாபுரி முருகன் கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலே இக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் உள்ள முருகப்பெருமான் காலையில் குழந்தையாகவும், மதியம் இளைஞனாகவும், மாலை நேரத்தில் முதியவராகவும் வாழ்க்கையின் மூன்றுப்படி நிலைகளோடும் காட்சித் தருவதாக சொல்லப்படுகிறது.
முருகப்பெருமான் நாடாண்டு, படையாண்டு ஆண்டியாக காட்சித் தந்து குடியேறிய இடமே ஆண்டியர் குப்பம் என்று அழைக்கப்பட்டு இன்று ஆண்டார் குப்பம் என்று அழைக்கப்படுகிறது. புதுவீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோவிலுக்கு வந்து செங்கல் அடுக்கி வைத்து வேண்டிக்கொண்டால், நிச்சயமாக வீடு கனவு நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
முருகப்பெருமான் கிழக்கு நோக்கி பாலசுப்பிரமணியனாக நின்றக்கோலத்தில் காட்சித் தருகிறார். இவருடைய வல இடமாக வள்ளி, தெய்வாணை என இரண்டு தேவியர்களுக்கும் தனிசன்னதி அமைந்துள்ளன.
இக்கோவிலின் தலவரலாறாக சொல்லப்படுவது, ஒரு முறை பிரம்மன் கையிலாயம் சென்றபோது அங்கிருந்த முருகனை மதிக்காமல் சென்றுவிட, முருகன் பிரம்மனை அழைத்து அவரை யார் என்று கேட்கிறார். அதற்கு பிரம்மன், 'தான் படைக்கும் தொழில் செய்யும் கடவுள் பிரம்மன்' என்று ஆணவமாக கூறுகிறார். அவரிடம் முருகன் ‘ஓம்’ என்னும் பிரணவ மாந்திரத்தின் பொருள் கேட்கிறார்.
அது தெரியாமல் பிரம்மதேவன் முழிக்க அவரை சிறையில் அடைத்துவிட்டு தான் படைக்கும் தொழிலை செய்யத் தொடங்குகிறார். இதனால், இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தவாறு அதிகாரத் தோரணையோடு முருகன் இத்தளத்தில் காட்சியளிக்கிறார்.
ஒருமுறை முருகனை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர் இங்கு நீராட இடமிருக்கிறதா? என்று அங்கிருந்த சிறுவனிடம் கேட்கிறார். அப்போது ஆண்டிக்கோலத்தில் இருந்த சிறுவன் தன் கையில் இருந்த வேலாயுதத்தை தரையிலே குத்தியதும் நீர் பெருக்கெடுத்ததாம். ஆண்டிக்கோலத்தில் இருந்த சிறுவன் முருகனாக காட்சி தந்தார். அந்த வேலாயுதத்தால் உருவான தீர்த்தம் 'வேலாயுத தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.
இக்கோவிலின் தலவிருட்சமாக சரக்குன்றை மரம் உள்ளது. முருகப்பெருமானை வேண்டினால், நினைத்தக் காரியம் நிறைவேறும். முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தும், சந்தனக்காப்பு கட்டியும், மொட்டையடித்தும், காவடியேந்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.