நவக்கிரக நாயகர்களில் முக்கியமான சனீஸ்வரருக்கு உரிய உலோகம் – இரும்பு, அதி தேவதை – எமன், நவரத்தினம் - நீலம், தானியம் - எள், வாகனம் – காகம், மலர் - கரும்பு வளை, சமித்து – எருக்கு, சனீஸ்வரர் நிறம் – கருப்பு, தந்தை – சூரியன், தாய் – சாயாதேவி, மனைவியின் பெயர்- நீலாதேவி.
நவக்கிரகங்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் வெவ்வேறு திசை நோக்கி இருப்பர். சனீஸ்வரர் மேற்கு திசை நோக்கி இருப்பார்.
தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரர் சுயம்புவாக தோன்றியவர். லிங்க வடிவில், பெரிய உருவில் தனித்து காட்சி தருகிறார்.
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இக்கோவில் நள தீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரரை வழிபட்டால் நம்முடைய துன்பங்கள் யாவும் நீங்கும். நள மகாராஜன் இங்குள்ள சனீஸ்வரரை வழிபட்டுதான் சனி தோஷம் நீங்க பெற்றான்.
மகாராஷ்டிரா மாநிலம் சனி சிங்கனாபூர் எனும் ஊரில் சனீஸ்வரர் சுயம்புவாக, ஐந்தே முக்கால் அடி உயரத்தில், கருப்பு நிறத்தில் காட்சி தருகிறார்.
வாலாஜா அருகில் உள்ள வன்னிவேடு எனும் ஊரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் ஒற்றைக் காலில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீஸ்வரர் கோவில் பிரகாரத்தில் சூரியனும், சனீஸ்வரரும் வழக்கத்திற்கு மாறாக, நேருக்கு நேர் பார்த்தவாறு காணப்படுகிறார்கள்.
ஜெய்ப்பூர் செல்லும் வழியில் வேன்வீட்டா எனும் ஊரில் சனி பகவான் கோவில் உள்ளது 8 கிரகங்கள் வரிசையாக இரண்டு பாகங்களாக காணப்படுகின்றன. சனீஸ்வரர் மிகப்பெரிய உருவில் எருமை வாகனத்தில், கிரகங்களுக்கு முன்னால் அமர்ந்து உள்ளார்.
விழுப்புரம் திருக்கோவிலூர் அருகில் 17 கி மீ தூரத்தில் உள்ள கல்பட்டு எனும் ஊரில் உள்ள சனி பகவான் கோவிலில் இடது காலை பீடத்தின் மீதும், வலது காலை வாகனத்தின் மீதும் வைத்தவாறு சனீஸ்வரர் நின்ற காலத்தில் காட்சி தருகிறார்.
சென்னை ஆதம்பாக்கம் விஸ்வரூப ஸ்ரீ சர்வ மங்கள சனீஸ்வர பகவான் கோவிலில் சனீஸ்வரர் ஆறடி உயரத்தில் கம்பீரமாக காட்சி தருகிறார். இது வட திருநள்ளாறு என்று போற்றப்படுகிறது.
சிவபெருமானை சனீஸ்வரர் வழிபட்ட தலங்கள் திருநெல்லிக்கா, திருக்கொள்ளிக்காடு, திருநள்ளாறு ஆகிய ஆகும்.
திருவாரூர் தியாகராஜ சுவமி கோவிலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஈஸ்வர வாசல். திருக்கொள்ளிக்காட்டில் இருந்து திருநள்ளாறு சென்று நள மகாராஜனை பிடிக்க சனீஸ்வரர் செல்லும்போது இரவு நேரம் வந்து விட அவரது காக வாகனத்திற்கு கண் தெரியாமல்போக, அங்குள்ள சங்கரநாராயணன் கோவிலில் தங்குகிறார்.
மறுநாள் காலை சனீஸ்வரர் புறப்படும்போது அங்குள்ள விருத்த கங்கா நதியில் நீராடி அனுஷ்டானங்கள் செய்கிறார். அதனால் இத்தலம் சனீஸ்வர வாசல் ஆனது. ஏழரை சனி, அஷ்டம சனி பாதிப்புக்குள்ளானவர்கள் இங்கு வந்து இந்த நதியில் நீராடி, வன்னி இலைகளால் சனி பகவானை அர்ச்சித்து நீல மலர்கள் சாத்தி வழிபட சனி தோஷங்கள் நீங்கும். சனீஸ்வர வாசல் தளம் திருப்பள்ளி முக்கூடல் திருநள்ளாறு, திருவாரூர் ஆகிய தலங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.
சனிதோஷம் நீங்க கோவில்களில் நவக்கிரக சன்னதியில் சனீஸ்வர தீபம் ஏற்றலாம். இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் விட்டு, சிவப்பு, கருப்பு, வெள்ளை நிறத்திரிகள் இட்டு விளக்கேற்றி சனீஸ்வரனை வழிபடலாம்.