‘பக்தி’ என்பது மொழி, மதம், நாடு இனம் ஆகியவற்றையெல்லாம் கடந்தது. கடவுள் மீது யார் பக்திக்கொண்டாலும் அவர்களை தன்னுடைய பிள்ளையாகவே கருதி பாதுகாப்பார். இதற்கு மீனாட்சியம்மன் மட்டும் விதிவிலக்கா என்ன? மீனாட்சியம்மனின் மீது பக்திக் கொண்ட ஆங்கிலேயர் ஒருவரின் கதையை பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம்.
இந்தியாவில் பிரிட்டிஷ் அதன் ஆட்சியை முழுமையாக நிறுவியிருந்த நேரம். அப்போது மதுரைக்கு ஆட்சியராக நியமிக்கப்பட்டு மதுரைக்கு வந்தவர் Rous peter. பிரிட்டிஷ் ஆட்சி எப்படியிருந்தது என்று நமக்கு தெரியும். நம்முடைய கலாச்சாரத்திற்கு மதிப்பு கொடுக்காமல் தான் வைத்ததுதான் சட்டம் என்று இருக்கும் ஒரு கொடுங்கோல் ஆட்சி நடந்தது.
ஆனால் Rous peter மிகவும் நல்லவர். இங்கிருக்கும் மக்களுடன் மிகவும் நன்றாகவே பழகினார். அவர் அனைவரையும் சமமாக பார்த்து ஆட்சி நடத்துவதை பார்த்த மக்கள் இவருடைய ஆட்சி முறை பண்டிய மன்னனின் ஆட்சியை போல இருப்பதாக கருதிய மக்கள் அவரை ‘பீட்டர் பாண்டியன்’ என்று அன்பாக அழைத்தார்கள்.
மதுரை முழுவதும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பும் அவரிடமேயிருந்தது. அதனால் கோவிலுக்கு அடிக்கடி செல்வார். அப்போது கோவிலின் பிரம்மாண்டத்தையும், மீனாட்சியம்மனின் சிறப்பையும் கேட்டு ஆச்சர்யம் அடைந்தார். மீனாட்சியம்மனின் மீது அளவு கடந்த பக்தியை வைத்திருந்தார் Rous peter.
ஒருநாள் இரவு Rous peter அவருடைய மாளிகையில் நன்றாக படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுமி Rous peter ஐ வந்து எழுப்புகிறாள். அவரை எழுப்பி, ‘வா! உடனேயே மாளிகையை விட்டு வெளியே போகணும்’ என்று அவரது கையை பிடித்து வெளியே கூட்டிச் செல்கிறார்.
இரண்டு பேரும் மாளிகையை விட்டு வெளியே சென்றதும் ஒரு பெரிய இடி மாளிகையின் மீது விழுந்து மாளிகை தரைமட்டமாகி விடுகிறது.
இதை பார்த்த Rous peter க்கு ஒரே ஆச்சர்யம். நம்முடைய அறையை உள்பக்கம் தானே தாழ்ப்பாள் போட்டிருந்தோம். எப்படி இந்த சிறுமி உள்ளே வந்தாள். யார் இந்த சிறுமி என்று பார்க்கிறார். நம் உயிரை காப்பாற்றிய இந்த சிறுமிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.
அந்த சிறுமியின் காலை பார்க்கிறார். அவள் கால்களில் ஷூ, செருப்பு என்று எதுவுமேயில்லை. சிறுமி வெறுங்காலில் நடந்து சென்று கொண்டிருக்கிறாள். இவரும் அந்த சிறுமி பின்னாடியே போய்க்கொண்டிருக்கிறார். அந்த சிறுமி மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் சென்று மறைந்துவிடுகிறார். அப்போது தான் Rous peter க்கு புரிகிறது அவருடைய உயிரை காப்பாற்றியது அந்த மதுரை மீனாட்சியம்மன் தான் என்பது.
தன் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சியம்மனுக்கு காணிக்கை ஏதேனும் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறார் Rous peter. அப்போது அந்த சிறுமி வெறுங்காலுடன் வந்தது நினைவுக்கு வர, ஒரு ஜோடி தங்க ஷூவை காணிக்கையாக செலுத்துகிறார். இந்த தங்க ஷூக்களில் 412 மாணிக்கங்கள், 72 மரகத்தங்கள், 80 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது. இன்றுவரை இந்த ஜோடி ஷூக்கள் ‘பீட்டர் பாதகம்’ என்று அழைக்கப்படுகிறது. குதிரையில் வலம் வர அம்மனுக்கு சிரமமாக இருக்குமேயென்று நவரத்தினங்களால் ஆன சேனத்தை காணிக்கையாக கொடுத்தார் Rous peter.
தன்னுடைய கடைசி நாட்களை மீனாட்சி பட்டிணத்திலேயே கழித்தார் Rous peter. மதுரையிலேயே காலமானவர் மதுரையல் உள்ள St.George தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். ‘தான் இறந்தால் தன்னுடைய முகம் மதுரை மீனாட்சியம்மனை பார்த்தவாறு இருக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அதேபோலவே, அவருடைய உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இதுவே பக்திக்கு நாடு, இனம், மொழி தேவையில்லை என்பதை நிரூபித்த உண்மை சம்பவம்.