மீன் குளத்தி பகவதி அம்மன் 
தீபம்

அற்புதம் செய்யும் மீன் குளத்தி பகவதி அம்மன் கோவில்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், கோயம்புத்தூரிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் பல்லசேனா எனும் இடத்தில் மீன் குளத்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

கேரள பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் வடக்கு மற்றும் மேற்கு திசையில் நுழைவாயில்கள் உள்ளன. தேக்கு மரத்தால் செய்யப்பட்ட கொடி மரத்தை செப்பு தகடு கொண்டு அலங்கரித்துள்ளனர்.

இக்கோவிலில் சப்த மாதர்கள், பரமேஸ்வரன், பைரவர், கணபதி, வீரபத்ரர், துர்க்கை, சாஸ்தா, பிரம்ம ராட்சஸ் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கோவிலுக்கு வெளியே பெரியகுளம் ஒன்று உள்ளது. இதில் நிறைய மீன்கள் காணப்படுகின்றன.

இங்கு முக்கிய பிரார்த்தனைகளாக சோறூட்டல், தங்கத் தாலி, சுயம்வர புஷ்பாஞ்சலி, மலர் வழிபாடு, சரஸ்வதி மந்திர பூஜை, சந்தனம் சாற்றுதல், வெடி பூஜை போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன‌.

மீன் குளத்தி பகவதி அம்மன்

சித்திரை மாதம் அஸ்த நட்சத்திர நாளில் அம்மனை இங்கு பிரதிஷ்டை செய்ததால் அந்நாளையே அம்மனின் பிறந்த நாளாக கருதி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 

இங்கு மாசி மாதத்தில் 8 நாட்கள் மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது‌. ஓட்டன் துள்ளல், கதகளி போன்ற ஆட்டங்களின் மூலம் புராணக் கதைகள் சொல்லப்படுகின்றது.

இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு திருமணப் பேறு, குழந்தை பாக்கியம் மற்றும் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் என்கின்றனர். தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இங்குள்ள குளத்தில் நீராடி அம்மனை தரிசிக்க விரைவில் குணம் அடைவார்கள் என்று சொல்கின்றனர். இங்கு வந்து வழிபடும் வணிகர்களுக்கு அவர்களின் வணிகம் பெருகி செல்வ செழிப்பு உண்டாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

மீன் குளத்தி பகவதி அம்மன்

தல வரலாறு:

ல நூற்றாண்டுகளுக்கு முன் சிதம்பரத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு கொடிய பஞ்சம் ஏற்பட்ட போது மக்கள் வாழ பல இடங்களை நாடிச் சென்றனர். அதில் ஒரு குடும்பம் கையில் ஓலைக்குடையுடன் ஒரு மூட்டையையும் ஏந்தியபடி தங்கள் குலதெய்வமான மீனாட்சி அம்மனை சென்று தரிசித்து விட்டு தங்கள் வியாபாரம் நடைபெற ஏற்ற இடத்தை தேடிக்கொண்டு இந்த பாலக்காட்டில் உள்ள பல்லசேனா என்ற கிராமத்தை அடைந்தனர். 

ஒவ்வொரு முறையும் வியாபாரம் செய்ய வெளியூர் செல்லும் சமயம் மதுரை மீனாட்சி அம்மனை சென்று வணங்கி பின் செல்லும் பழக்கத்தை கொண்டிருந்த வைர வியாபாரியான இவர் ஒரு முறை கோவிலுக்கு செல்லும் முன் குளத்தில் இறங்கி குளிக்கச் சென்றார். அச்சமயம் கையில் கொண்டு சென்றிருந்த ஓலைக்குடை மற்றும் மூட்டையை படியில் வைத்துவிட்டு குளித்துவிட்டு வரும்போது திடீரென ஒரு எண்ணம் தோன்றியது.  தனக்கு வயதாகிவிட்டால் இவ்வளவு தூரம் சென்று பார்க்க முடியுமா தெரியவில்லையே என்று மனம் கலங்கியவராய் குளித்து முடித்து ஓலைக்குடையையும் மூட்டையையும் எடுக்க எவ்வளவோ முயன்றும் அதனை எடுக்க வரவில்லை. காரணம் அறிய ஜோதிடரை அணுக அவர் மதுரை மீனாட்சி அம்மன் இங்கு குடி கொண்டுள்ளதாக கூறவும் அங்கேயே கோவில் அமைத்து வழிபட தொடங்கினர். குடையில் குடியிருந்த காரணத்தால் அந்த இடத்திற்கு "குடமந்து" எனப் பெயர் வந்தது. 

மீன்கள் குதித்து விளையாடிக் கொண்டிருந்த குளத்தின் அருகில் இந்த அம்மன் தோன்றியதால் அவளுக்கு "மீன் குளத்தி பகவதி அம்மன்" என பெயர் வந்தது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT