ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி 
தீபம்

நெமிலி ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் 24 கிலோமீட்டர் தூரத்திலும் அரக்கோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது நெமிலி என்னும் சிற்றூர். இங்கு பாலா பீடம் அமைந்துள்ளது. இது கோவில் அல்ல பாலாவின் இல்லம்.

முன்னொரு காலத்தில் பண்டாசுரன் என்னும் அசுரன் லலிதாம்பிகையோடு போரிட்டு தோற்க, அவன் புத்திரர்களையும் அழித்தால்தான் தேவர்களுக்கு நிம்மதி என லலிதாம்பிகை தன்னிலிருந்து ஒன்பது வயது பாலாவாக தன் மகளை தோற்றுவிக்கிறாள். லலிதாவின் மகளான பாலாம்பிகை தேரில் ஏறி புறப்பட்டு பண்டாசுரனின் புத்திரர்களை தோற்கடித்தாள். பின் லலிதாம்பிகையுடன் மகள் ஐக்கியமானாள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பாலா ஒரு சமயம் நெமிலியில் வசித்து வந்த சுப்ரமணிய ஐயர் அவர்களின் கனவில் தோன்றி தான் ஆற்றில் வரப்போவதாகவும் தன்னை எடுத்து வந்து வீட்டில் வைத்து வணங்கும்படியும் கூற கண் விழித்தவர் அருகில் உள்ள குஸஸ்தலை ஆற்றுக்கு சென்று தேடி வந்தார். இரண்டு நாட்கள் சென்று தேடியும் கிடைக்காமல் போக மூன்றாம் நாள் அவர் கையில் சுண்டு விரல் அளவே உள்ள பாலாம்பிகை சிலை கிடைக்க அதை தன் வீட்டிலேயே பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார். வீடே கோவிலானது. பின்னாளில் அதுவே பாலா பீடம் என அழைக்கப்படுகிறது. 150 ஆண்டுகளாக, நாலு தலைமுறைகளாக இந்த இடத்தில் வீற்றிருந்து அருள் மழை பொழியும் இவளை காண பக்தர்கள் தினம் வந்த வண்ணம் உள்ளனர்.

ஸ்ரீ பாலாம்பிகை

கைகளில் ஜெபமாலையும் புத்தகமும் ஏந்திக்கொண்டு அபய வரத முத்திரைகளை காட்டி அருள் புரியும் ஸ்ரீ பாலாம்பிகையை பற்றி கருவூர் சித்தர் பாடியுள்ளார். குழந்தை வடிவில் பாலா வீற்றிருப்பதால் குழந்தைகள் விரும்பும் சாக்லேட் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இங்கு யாரும் தன் வேண்டுதல்களை நிறைவேற்றித் தர இது செய்கிறேன் அது செய்கிறேன் என்று வேண்டு வதில்லை. இங்கே உண்டியல் கூட கிடையாது. காஞ்சி மகா பெரியவர், கிருபானந்த வாரியார் அவர்கள், புவனேஸ்வரி சுவாமிகள் என பல மகான்கள் பாலா பீடம் வந்து இவளை தரிசித்துள்ளனர். நவராத்திரி சமயத்தில் வந்தவள் என்பதால் நவராத்திரி உற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தினம் ஒரு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் இவள் நவமி அன்று நடைபெறும் மகிஷாசுர வதம் வைபவத்தை காண நிறைய பக்தர்கள் குவிகிறார்கள். திருமணத்தடை நீக்கி அருள்பவள் இவள். குழந்தை வரம் கிடைக்கவும், கண் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கவும் வேண்டி வந்து நிற்கும் பக்தர்கள் தங்கள் குறைகள் தீர்வதாக கூறுகின்றனர். தினம் காலை 9 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7:00 மணி வரையிலும் பாலா பீடம் பக்தர்களுக்காக திறந்திருக்கிறது.

பாலாம்பிகை ஸ்லோகம்:

அருண கிரண ஜாலா ரஞ்சிதா சாவகாசா 

வித்ருத் ஜப படீகர் புஸ்தகா பீதி ஹஸ்தா

இதர கர வராட்யா புஹ்ல கஹலார சமஸ்தா

நிவசது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT