ஏகாதசி நாட்களில் விரதம் இருக்கிற சமயம் பால், மோர் இப்படி உப்புப் போடாத நீர் ஆகாரத்தை கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம் என்பது விரத விதியிலேயே இருக்கிறது. அதனால், ஏகாதசி விரத நாளன்று கொஞ்சம் பால் மட்டும் எடுத்துக்கொள்வார் காஞ்சி மகாபெரியவர்.
ஒரு சமயம் அவர் முகாமிட்டிருந்த இடத்தில் மின்சாரம் பழுது பார்த்துக்கொண்டிருந்தார் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ஒருவர். அன்ற ஏகாதசி. காலையில் வேலையை ஆரம்பித்தவர் உச்சிப்பொழுது நெருங்கியும் அப்படி இப்படி நகராமல் வேலை செய்துகொண்டிருந்தார். இதை கவனித்துக்கொண்டிருந்த மகாபெரியவா, "அந்த ஆசாமி பாவம். எதுவுமே சாப்பிடாம வேலை பார்த்துண்டு இருக்கான். சாப்டுட்டு வந்து வேலை செய்யச் சொல்லு" என்று பக்கத்தில இருந்த சீடனிடம் சொன்னார்.
அதைக் கேட்ட அந்த ஆசாமி, "சுவாமி, இன்னிக்கு ஏகாதசி. நான் பச்சைத் தண்ணி கூட குடிக்க மாட்டேன். அதனால நீங்க வருத்தப்படாதீங்க!" என்று சொன்னான்.
அதைக் கேட்ட மகாபெரியவர் ரொம்பவே பதறிட்டார். "ஒரு சாமான்யன் நிர்ஜலமா உபவாசம் இருக்கிறான். சன்யாசி நான் பால் குடிச்சுண்டு இருக்கேனே. இது தப்பில்லையோ!" என்று சொல்லிட்டு, அன்றிலிருந்து ஏகாதசி ஏகாதசி நாட்களில் தாம் கொஞ்சம் பால் குடித்துக்கொண்டு இருந்ததையும் நிறுத்திவிட்டு நிர்ஜல உபவாசத்தை அனுஷ்டிக்க ஆரம்பித்தார். அதுவும் எப்படித் தெரியுமா?
ஏகாதசி அன்றைக்கு நிர்ஜல உபவாசம். மறுநாள் பாரணை பண்ணணும் இல்லையா? சாஸ்திரப்படி துவாதசி அன்னிக்கு ஸ்ரவண நட்சத்திரம் அமைஞ்சுட்டா அன்னிக்கும் துளி ஜலம் கூடக் குடிக்கக் கூடாது. அதனால அன்னிக்கும் உபவாசத்தைத் தொடர்வார் மகாபெரியவா. மறுநாள் பிரதோஷம். அன்றைக்கு பகல்ல சாப்பிடக் கூடாது. சாயந்திரம் சிவ பூஜைக்குப் பிறகுதான் சாப்பிடலாம். அதேசமயம் பிரதோஷம் ஞாயிற்றுக்கிழமையில அமைஞ்சுட்டா, சூரியன் அஸ்தமனமான பிறகு சாப்பிடக் கூடாது. அதனால அன்னிக்கும் உபவாசம்தான். நாலாவது நாள் மாத சிவராத்திரி. அதனால் அன்றைக்கும் உபவாசம். ஆக, தொடர்ந்து நான்கு நாட்கள் ஒரு துளி நீர் கூட அருந்தாமல் விரதம் அனுஷ்டிப்பார் பரமாசார்யா.
ஒரு சமயம் அவர் இப்படி விரதம் அனுஷ்டிப்பதைப் பார்த்துவிட்டு, "இத்தனை கடுமையா விரதம் இருக்கேளே பெரியவா? இப்படி உடம்பை வருத்திக்கறது அவசியமா?" என்று கேட்டார் சீடர் ஒருவர்.
அதற்கு பரமாசார்யா, "இத்தனை ஆசாரத்தை, அனுஷ்டானத்தைக் கடைப்பிடிச்சும் வேளா வேளைக்குப் பசியெடுக்காத நிலை எனக்கு இன்னும் வரலயே" என்றார்.
உலகத்துக்கே படியளக்கற பரமேஸ்வரனே பசி தாங்க முடியாம அன்னபூரணியிடம் பிட்சை எடுத்ததா புராணம் சொல்கிறது. ஆனால் பரமாசார்யா, அந்த அன்னபூரணியே வந்து அன்னமிடறேன்னு சொன்னாக்கூட வேண்டாம் என்று சொல்லி உபவாசம் இருக்கிறதுக்கு விரும்பினார் என்கிறபோது அவரோட பெருமையை என்னவென்று சொல்வது?