தீபம்

பிறவிப் பிணி தீர்க்கும் கைசிக ஏகாதசி!

மாலதி சந்திரசேகரன்

ரு வருடத்தில் பலவிதமான விரதங்கள் இந்துக்களால் அனுஷ்டிக்கப்படுகின்றன. அம்மாதிரி விரதங்களில் மிகவும் சிரேஷ்டமான விரதமாகக் கருதப்படுவது,
ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கு உகந்த ஏகாதசி விரதம்தான். ஒரு வருடத்தில் வளர்பிறை ஏகாதசி 12, தேய்பிறை ஏகாதசி 12 என்று மொத்தம் 24 ஏகாதசிகள் வழக்கமாக அமையும். சில சமயங்களில், அதிகப்படியாக 25ஆவது ஏகாதசி அமைவதும் உண்டு. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் கூறப்பட்டுள்ளது. ஏகாதசி நாட்களில் விரதம் இருந்து ஸ்ரீமந் நாராயணனைத் துதித்து, மறுநாள் துவாதசியில் விரதத்தை முடிப்பது மிகச் சிறந்த பலன்களைத் தருவதாகும்.

இந்த ஏகாதசிகளில் உன்னதமான ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்பது எல்லோரும் அறிந்த விஷயம்தான். அதற்குச் சமமாக, நம்முடைய சகலவிதமான பாவங்களையும் போக்கி நம்மை பகவானின் திருப்பாதங்களில் சேர்க்கும் ஒரு ஏகாதசி எதுவென்றால், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிதான். இதற்கு, ‘கைசிக ஏகாதசி’ என்கிற பெயரும் உண்டு.

திருநெல்வேலியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் திருக்குறுங்குடி என்னும் வைஷ்ணவ திவ்ய தேசம் அமைந்துள்ளது. இந்த திவ்ய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாளுக்கு, 'வடிவழகிய நம்பி' என்னும் திருநாமம் ஆகும். திருக்குறுங்குடி மலை அடிவாரத்தில் பாணர் குலத்தைச் சேர்ந்த, 'நம்பாடுவான்' என்னும் ஏழை பக்தன் வாழ்ந்து வந்தான். பெருமாளின் தீவிர பக்தனான அவன், ஏகாதசி விரதத்தை மிகக் கடுமையாக அனுஷ்டித்து வந்தான். ஏகாதசி அன்று நீர் கூட அருந்தாமல் சுத்த உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில் திருக்குறுங்குடி சென்று  அங்குள்ள புஷ்கரணியில் நீராடி, மனதால் பெருமாளை தியானம் செய்து கொண்டு,
(தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்ததால் அவனுக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லாமல் இருந்தது) அவர் புகழை ' கைசிக பண்' (இந்நாளில் பைரவி ராகம் என்று கூறப்படுகிறது) மூலம், தன்னுடைய சொந்த சாகித்தியம் கொண்டு, யாழ் மீட்டி, பகவானைப் புகழ்ந்து இசைத்து, தனது ஏகாதசி விரதத்தை முடித்துக் கொண்டு,  அதன் பிறகு உணவு உண்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தான்.

ஒரு முறை கார்த்திகை மாதத்தில் வளர்பிறை ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று எப்பொழுதும் போல் அழகிய நம்பியை போற்றி, பண் இசைத்துப் பாடுவதற்காக வழக்கமாகச் செல்லும் காட்டுப்பாதை வழியே சென்று கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு மரத்தின் மீது அமர்ந்திருந்த பிரம்ம ராட்சதன் அவனைப் பிடித்துக் கொண்டது.

" எனக்கு மிகுந்த பசியாக இருக்கிறது. நான் உன்னை சாப்பிட போகிறேன்" என்று அவனிடம் கூறியது.

"என்னை விட்டுவிடு. நான் ஏகாதசி விரதம் இருந்து, மறுநாள் துவாதசியன்று திருக்குறுங்குடி பகவானைப் போற்றி பாடி பின்பு உணவு அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இன்று துவாதசி.  நான் பெருமாளை சேவித்து விட்டு வந்து விடுகிறேன். பிறகு என்னை நீ உண்ணலாம்" என்றான்.

"மிருகங்களின் வார்த்தைகளைக் கூட நம்பி விடலாம். ஆனால், மனிதனின் வார்த்தையை நான் நம்பத் தயாராக இல்லை. நான் பத்து நாட்களாக உண்ணாமல் மிகுந்த பசியில் இருக்கிறேன். இன்று உன்னை உண்ணப் போகிறேன்" என்றான் ராட்சதன்.

பிரம்ம ராட்சதனின் வார்த்தைகளைக் கேட்ட நம்பாடுவான், அதனிடம் பதினெட்டு விதமான கடுமையான பாவங்களைக் கூறி, " நான் சொன்ன வார்த்தையை நிறைவேற்றத் தவறிவிட்டால், நான் கூறிய பதினெட்டு பாவங்களுக்கும் என்னென்ன தண்டனைகள் கிடைக்குமோ, அவை அத்தனையும் எனக்குக் கிடைக்கட்டும். உன்னை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன். பெருமாளை சேவித்து விட்டு வந்து விடுகிறேன்" என்று கூறியதில் பிரம்ம ரட்சதன் திருப்தி அடைந்து தனது பிடியைத் தளர்த்தி, அவனைப் போக அனுமதித்தது.

நம்பாடுவான் மிகுந்த சந்தோஷம் அடைந்து, திருக்குறுங்குடியை நோக்கி வேகமாகச் சென்றான். புஷ்கரணியில் நீராடி, "இன்றுடன் எனது ஏகாதசி விரதத்தை முடித்துக் கொள்கிறேன். இன்றாவது நீ எனக்கு அனுக்கிரகம் செய்யக்கூடாதா? தாழ்ந்த குலத்தில் பிறந்ததால் உன்னை தரிசிக்க முடியவில்லையே" என்று மனம் உருகி வேண்டிக் கொண்டான்.

பக்தனின் ஆத்மார்த்த வேண்டுதலுக்கு மனமிரங்கிய, பெருமாள், கருவறையை மறைத்துக் கொண்டிருந்த கொடி மரத்தை சற்று விலகி இருக்கும்படி அருள்பாலித்து, நம்பெருமானுக்கு தனது திவ்ய தரிசனத்தைக் காட்டி அருளினார். (இன்றும் திருக்குறுங்குடி திவ்ய தேசத்தில் கொடிமரம் விலகி இருப்பதைக் காண முடியும்.)

கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக நேராகக் காட்டுக்குச் சென்றவனை சோதிக்க விரும்பிய பெருமாள், ஒரு கிழவன் போல் ரூபம் எடுத்து அவனைப் போகாமல் தடுப்பதற்கு என்னென்ன சாத்தியக்கூறுகள் உண்டோ அத்தனையையும் சொல்லி, அவனுடைய மனசை மாற்றப் பார்த்தார். ஆனால், எதற்கும் நம்பாடுவான் அசைந்து கொடுப்பதாக இல்லை.

கொடுத்த வாக்குப்படி திரும்பி வந்த நம்பாடுவானைக் கண்ட பிரம்ம ராட்சதன் மிகவும் ஆச்சரியமடைந்தது. அப்படிப்பட்ட ஒரு சத்தியசந்தனை உண்பது தனக்கு மேலும் பாவத்தைக் கூட்டும் என்று பயம் வந்ததால் அவனது காலில் விழுந்து நமஸ்கரித்து, "முற்பிறவியில் நான் ஒரு அந்தணனாகப் பிறந்திருந்தேன். செய்த பாவத்துக்காக, சாபம் பெற்று இப்படி ஒரு பிரம்ம ராட்சத உருவில் இருக்கிறேன். இதுவரை உன்னைப் போல் ஒரு சத்தியசந்தனை நான் சந்தித்தது இல்லை. எனக்கு பாவ விமோசனத்தை உன்னால்தான் கொடுக்க முடியும். இன்று காலை நீ பெருமாளுக்கு சமர்ப்பித்த கைசிகப் பண்னின் பலனை எனக்கு அளித்துவிட்டால் போதும். நான் சாப விமோசனம் பெற்று விடுவேன்" என்று கூறியதும், நம்பாடுவானும், பெருமாளை வேண்டிக் கொண்டு பிரம்ம ராட்சதனிடம் தான் பெற்றபலன்களை முழுவதுமாக அளிப்பதாகக் கூறினான்.

உடனே பிரம்ம ராட்சதன் சாப விமோசனம் பெற்று முக்தியை அடைந்தான். பிறகு சில காலம் நம்பாடுவான் பெருமாளுக்கு தொண்டுகள் புரிந்து பெருமாளின் சரணார விந்தங்களை அடைந்தான் என்பது கதை.

த்தனையோ பக்தர்களின் கதைகள் இருக்க, இந்த கைசிகப் பண்ணைப் பாடிய பக்தனின் கதை மட்டும் ஏன் பிரபலமாகப் பேசப்படுகிறது? ஸ்ரீ மகாவிஷ்ணு
தச அவதாரத்தில், வராக அவதாரம் எடுத்த பொழுது பூமி பிராட்டிக்கு தானே தன் பக்தனைப் பற்றி கூறியதால் இந்த கதை, ‘கைசிக புராணம்’ என்று எல்லோராலும் போற்றப்படுகிறது. வராக புராணத்தில் கைசிக மாகாத்மியம் என்னும் தலைப்பில் இந்தக் கதை விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

கைசிக ஏகாதசி தினத்தன்று, இந்தக் கதையை சொல்பவர்கள், கேட்பவர்கள், படிப்பவர்கள் அனைவருமே சகல பாவங்களில் இருந்தும் நிவர்த்தி பெற்று, நற்கதியை அடைவார்கள் என்று ஸ்ரீ வராக பெருமாளே கூறியிருக்கிறார். மேலும், செய்த பாவத்தினால் துர்பிறப்பினால் அவதியுறுபவர்கள் அதிலிருந்து விமோசனம் பெறுவார்கள்.

கைசிக ஏகாதசி நன்னாளான அன்றைய தினம், ‘கீதா ஜெயந்தி’ என்றும் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. ஏனென்றால், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, குருக்ஷேத்ரத்தில், அர்ஜுனனுக்கு கைசிக ஏகாதசி தினத்தில்தான் ஸ்ரீ பகவத் கீதையை அருளியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதனால் இன்றைய நாளில்,
ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னிதியில், ஆறு முறைகள் ஸ்ரீ பகவத் கீதை பாராயணம் செய்யப்படுகிறது.

108 திவ்ய தேசங்களில், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் முதன்மையான திவ்ய தேசமான திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீ அரங்கநாத பெருமாளுக்கு, கைசிக ஏகாதசி அன்று 365 பட்டு வஸ்திரங்கள், 365 முறைகள் சார்த்தப்பட்டு, ஒவ்வொரு முறையும் ஆரத்தி காண்பிக்கப்படுகிறது. ஏனென்றால், அந்த வருடத்தில் பூஜை முறைகளில் ஏதாவது அறியாமல் தவறு நேர்ந்திருந்தால் அதை மன்னித்து ஏற்றுக் கொள்வதற்காக பகவானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

நாளை (3.12.2022) கைசிக ஏகாதசி தினம். இந்த ஸ்ரேஷ்டமான நாளில் அனைவரும் ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு, கைசிக புராணத்தை மனதில் உள்வாங்கி, ஸ்ரீ வராக பெருமாள், ஸ்ரீ பூமி பிராட்டியை வணங்கி அவர்களது அருளைப் பெறுவோமாக.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT