Purattasi 
தீபம்

புரட்டாசி பொறந்தாச்சு...!

தா.சரவணா

மது முன்னோர்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பை சொல்லிவிட்டு சென்றுள்ளனர். குறிப்பாக, புரட்டாசி மாதத்திற்கு என்று தனி சிறப்புகள் பல உள்ளன. ஆனால், பலருக்கும் புரட்டாசி மாதம் என்றால் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்பது மட்டும்தான் தெரியும். அதற்கு ஒரு காரணம் உண்டு என பலருக்கும் தெரியாது. புரட்டாசி மாதம் என்பது மழைக்காலத்திற்கு முந்தைய காலமாகும். சூடும், குளிர்ச்சியும் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படும் நிலை இருக்கும். இந்த சூழலில் சூடு அதிகரிக்கும் அசைவ உணவினை உட்கொண்டால், உடலுக்கு கேடு உண்டாகும். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

இதை சாதாரணமாகச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால், கடவுளோடு இணைத்துக் கூறி வைத்தனர். இப்படித்தான் பல விஷயங்களை கடவுளோடும், மதத்தோடும் இணைத்து பல நல்ல விஷயங்களை நமது முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர்.

இன்று புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புரட்டாசி மாதம் முன்னோர்களுக்குரிய புண்ணிய மாதமாகும். இந்த மாதம் பித்ருக்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், மறைந்த நமது முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு இம்மாதம் வருகை தருவதாக ஐதீகம். அதோடு, நாம் செய்யும் வழிபாட்டினையும் ஏற்று, நமக்கு ஆசி வழங்குகிறார்கள்.

புரட்டாசி தேய்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான 15 நாட்கள் அவர்கள் பூமியிலே தங்குவார்கள். இதையே மகாளய பட்சம் என்பர். பட்சம் என்றால் 15 நாட்கள் என்று பொருள். இந்நாட்களில் ஒவ்வொரு நாளும் முன்னோர்களை மனதால் நினைத்து, சிரத்தையுடன் தர்ப்பணம் எனப்படும் எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். முன்னோர் படங்கள் வீட்டில் இருந்தால், படங்களுக்கு பூக்கள் வைத்து நமஸ்கரிக்க வேண்டும். இயன்றவர்கள் படையல் இடலாம். பிறகு முன்னோரை நினைத்து நம்மால் முடிந்த தானங்களைச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

18ம் தேதி பிரதமை திதி, பூரட்டாதி நட்சத்திரம் புதன்கிழமை. இன்று முதல் மகாளய பட்சம் ஆரம்பம். முன்னோர் ஆசி வேண்டியும், பித்ரு சாப நிவர்த்தி வேண்டியும், வம்ச விருத்தி வேண்டியும் தமது பிள்ளைகள் நலன் வேண்டியும் நம் முன்னோருக்கு தர்ப்பணம் தர வேண்டும். பின்னர் பூஜை அறையில் நம் முன்னோரை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு விருப்பமான உணவு படையல் இட வேண்டும். மகாளய பட்சத்தில், ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மகாளய பட்சம் தொடக்கமான முதல் நாளில் முன்னோருக்கு நாம் தரும் தர்ப்பணத்தின் பலனாக, நம் வீடுகளில் பொன், பொருள், செல்வ சேர்க்கை அதிகரிக்கும். இவற்றை விட நம் சந்ததிகளின் தோஷங்கள் எல்லாம் நீங்கும். ஆகையால், மறவாமல் இன்று மகாளய பட்ச தர்ப்பணம் செய்ய வேண்டும். முறைப்படி செய்ய வசதி இல்லாதவர்கள், முன்னோரின் பெயர்களை உச்சரித்து 'காசி... காசி' என்று சொன்னபடியே வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீர் விட்டு கூட திதி பூஜை செய்யலாம். எதுவுமே செய்ய இயலாதவர்கள், தெற்கு திசை நோக்கி தலைக்கு மேல் கை குவித்து, முன்னோரை நினைத்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இன்றைய தினத்தில் பசுக்களுக்கு அகத்திக்கிரையும், பழங்களும் கொடுப்பது, காகத்துக்கு உணவிடுதல் கூடுதல் புண்ணியம் சேர்க்கும்.

முதிர் பெண்களின் மன அழுத்தம் போக்கும் எளிய வழிகள்!

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகை செய்வது எப்படி?

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த 7 ரகசியங்களைக் கற்றுத் தரலாமே!  

திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

SCROLL FOR NEXT