Sri Krishna Upadesha 
தீபம்

ஶ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த உத்தவ கீதை!

ராஜமருதவேல்

கிருஷ்ணர் தனது அவதாரத்தை முடிக்கும் தருவாயில், அவர் தனது தேரோட்டியும் சிறுவயதிலிருந்து பழகியவரான உத்தவரை அழைத்து "உத்தவா, இதுவரை நீ என்னிடம் எதுவும் கேட்டதில்லை, இன்று உனக்கு ஏதேனும் வரம் வேண்டுமா? கேள், தருகிறேன்" என்றார்.

அதற்கு உத்தவர், "கிருஷ்ணா என்னால் உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை. நீ எப்படி வாழ வேண்டும் என்று போதனை செய்தாய். ஆனால், நீ அவ்விதம் வாழவில்லை. என் சந்தேகத்திற்கு விளக்கம் சொல்." என்றார். 

அதற்கு கிருஷ்ணர், "கேள் உத்தவா, உனக்கு பதிலளிக்கிறேன்" என்று கூறினார். "நான் உனக்கு சொல்ல இருப்பது அர்ஜுனனுக்கு உபதேசித்த கீதையை போன்றது. உனக்கு நான் உபதேசிப்பவை உத்தவகீதை என்று புகழ்பெறும்" என்றார்.

உத்தவர் "கிருஷ்ணா, முதலில் யார் உண்மையான நண்பர் என்று சொல்?" என்றார். 

அதற்கு "அழைப்பின்றி தேவைப்படும் நண்பனுக்கு உதவி செய்பவனே உண்மையான நண்பன்." என்றார் கிருஷ்ணர்.

"அப்படியானால், நீ ஏன் யுதிஷ்டிரன் சூதாடும் போது தடுக்கவில்லை? அவர்களுக்கு சாதகமாக விளையாட்டை மாற்றவில்லை? பாண்டவர்களான உன் நண்பர்களை காக்கவில்லை? நீ நினைத்தால் போரை தடுத்திருக்கலாமே?" என்றார் உத்தவர்.

அதற்கு கிருஷ்ணர், "யுதிஷ்டிரன் சூதாடும் போது என்னை உதவிக்கு கூப்பிடவில்லை. மாறாக அவன் சூதாடுவதை நான் பார்க்கக்கூடாது என்று இறைவனை வேண்டிக் கொண்டான். அதன் பலனாக நான் அங்கு செல்லவில்லை" என்று கூறினார்.

மீண்டும் உத்தவர் "துரியன் சொல்படி துச்சாதனன் பாஞ்சாலி முடியை பிடித்து இழுத்து வந்து, சபையில் அவளது ஆடையை களைக்க முயன்றான். எங்கும் நடைபெறக் கூடாத கொடுமை அது. அவள் உன்னை உற்ற தோழனாகவும், உன் தங்கையை விட உன்மேல் அதிகாரம் இருப்பதாக நினைப்பவள். அவளை பணையம் வைக்கும் போதாவது நீ காப்பாற்றியிருக்க வேண்டாமா? இது அனைத்தும் நிகழும் என்று உனக்கு முன் கூட்டியே தெரியும் அல்லவா?" என்று கண் கலங்கியவாரே கேட்க,

கிருஷ்ணர், "துரியனிடம் சூதாட பணமும் நாடும் இருந்தது. ஆனால், அவனுக்கு சூதாட தெரியாததால் சகுனியை காய் உருட்ட வைத்தான். துரியன் சகுனியை நம்பியபோது தர்மன் அவன் பக்கம் சூதாட என்னை அழைத்திருக்க வேண்டும். நான் காய் உருட்டினால் தர்மன் தோற்பானா? துரியனிடம் இருந்த விவேகம் தர்மனிடம் இல்லை. துச்சாதனன் திரௌபதியின் முடியைப் பற்றியபோது கூட என்னை நினைக்காமல், அவளும் சபையில் உள்ளவர்களை நம்பி நியாயம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் உடையினை துச்சாதனன் உருவ தொடங்கும் போதும் என்னை அழைக்கவில்லை. இறுதியில் தன் மானம் பறிபோகும் நிலைக்கு வரும் போது தான் என்னை அழைத்தாள். அபயமளித்தேன். இந்த நிலையில் என் தவறு எதுவும் இல்லை." என்றார்.

"அருமையான விளக்கம் கண்ணா; அழைத்தால் தான் கடவுள் வருவாரா? துயரத்தில் உள்ளவர்களுக்கு உதவ, தானாக வரமாட்டாரா?" என்று கேட்டார் உத்தவர்.

கிருஷ்ணரோ "உத்தவா, இந்த வாழ்வு கர்மா அடிப்படையில் இயங்கும். அதில் நான் ஒரு சாட்சி மட்டுமே. கர்ம பலனில் தலையிடுவது கடவுளுக்கு தர்மம் ஆகாது." என்றார்.

உத்தவர் கேட்டார், "அப்படியானால் கடவுளர், நாங்கள் தீய செயல்களை செய்வதை பார்ப்பீர்கள். பாவம் செய்வதை தடுக்க மாட்டீர்கள். பாவத்தினால் நாங்கள் துன்பத்தினை அடையும் போதும் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள் அல்லவா?"

கிருஷ்ணா கூறுகிறார், "உத்தவா, நான் சாட்சியாக இருக்கிறேன் என்பதை உணர்ந்தால் நீ எப்படி தவறு செய்வாய்? எனக்கு தெரியாமல் சூது விளையாட நினைத்தது தர்மனின் அறியாமை. போரினால் பேரழிவு ஏற்படும் என்பதால், அதை தடுக்கவே நான் சமாதான தூது சென்றேன். துரியன் அதை ஏற்கவில்லை, பாண்டவர்களும் போரில் பிடிவாதமாக இருந்தனர். இதில் என் பங்கு என்ன? என்னை நம்பிய அர்ஜூணனை காக்க தேரோட்டியாக இருந்தேன். போரில் நான் ஈடுபடவில்லை. நீங்கள் நல்லது செய்யும் போதும், தவறு செய்யும் போதும் கடவுள் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார் என்பதை உணருங்கள், நம்புங்கள்." என்றார் கிருஷ்ணர்.

நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் தெரியுமா?

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

SCROLL FOR NEXT