சோழசிம்மபுரம் என்று அழைக்கப்பட்டு தற்போது சோளிங்கர் என்றழைக்கப்படும் திவ்ய தேச திருத்தலத்தில் பெருமாள் யோக நரசிம்மராக அருள்பாலிக்கிறார். இத்தலத்தைப் பற்றிய சுவாரசியமான சில தகவல்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.
நூற்றியெட்டு வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் மூலவர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒரே குன்றாலான பெரிய மலையின் மீது யோக லட்சுமி நரசிம்மரும், அமிர்தவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.
வைகுந்தம், திருப்பாற்கடல், திருவேங்கடத்திற்கு நிகரானதாகக் கருதப்படும் இத்தலம், மூன்றாம் நூற்றாண்டில் பராங்குச சோழனால் கட்டப்பட்டதாகும்.
சோளிங்கரின் புராணப் பெயர் கடிகாசலம் ஆகும். ஆழ்வார்கள் திருக்கடிகை என்று அழைத்தனர். ஆச்சாரியார்கள் சோழசிம்மபுரம் என்று அழைத்தனர். தற்காலத்தில் இவ்வூரானது சோளிங்கபுரம், சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.
சோளிங்கர் தலத்தின் விமானம் சிம்ஹ சோஷ்டாக்ருதி விமானம் எனப்படுகிறது.
வைணவத் தலங்களில் மூலவரின் கருவறையிலேயே உத்ஸவ திருமேனிகளையும் தரிசிக்கலாம். ஆனால், இத்தலத்தின் உத்ஸவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இரு தேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் உள்ளது.
பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இந்நாளில் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வது மிகவும் விசேஷசமாகக் கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் உத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது.
யோக நரசிம்மராக கண் மூடிய நிலையில் இருக்கும் மூலவர் கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருளுவதாக ஐதீகம்.
ஸ்ரீ யோக நரசிம்மருக்கு சோளிங்கரை தவிர பல இடங்களில் கோயில்கள் உள்ளன. ஆனால், யோக ஆஞ்சனேயருக்கு இங்கு மட்டுமே கோயில் உண்டு.
சோளிங்கரில் முதலில் லட்சுமி நரசிம்ம ஸ்வாமியை தரிசனம் செய்து விட்டுப் பிறகு ஆஞ்சனேயரை தரிசிப்பது ஐதீகம்.
யோக ஆஞ்சனேயர் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். ஒரு கரத்தில் சங்கு, மற்றொரு கரத்தில் சக்கரம். மற்ற இரு திருக்கரங்களில் ஜப மாலைகள் உள்ளன.
சோளிங்கர் தலத்தில் வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகின்றன.
பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமனுஜர், மணவாள மாமுனிகள் முதலான ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் இத்தலத்தினை தரிசனம் செய்துள்ளார்கள்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இது 65வது திவ்ய தேசமாகும். இத்தலத்தினை நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் முதலானோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்கினால் குழந்தையின்மை, திருமணத் தடைகள், வியாபார நஷ்டத்தினால் ஏற்படும் கஷ்டங்கள் முதலான பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம். நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பதும் ஐதீகம். வியாழக்கிழமைகளில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி லட்சுமி நரசிம்ம ஸ்வாமியை தரிசித்தால் வேண்டியதெல்லாம் கைகூடும்.
சென்னையில் இருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவிலும் வேலூரிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவிலும் சோளிங்கர் அமைந்துள்ளது.