கெய்லாங் சிவன்கோயில் 
தீபம்

கெய்லாங் சிவன்கோயில்!

கல்கி டெஸ்க்

-ராதா பாலு  

சிங்கப்பூர் ஒரு அழகிய நகரம். தமிழ் ஆட்சி மொழியில் ஒன்றாக இருப்பதால் இங்கு தமிழ் மக்கள் மிக அதிகமாக வாழ்கிறார்கள். 1800களில் இங்கு வாழ்க்கை தேடிச்சென்ற மக்கள்  உருவாக்கியவையே இங்குள்ள இந்து தெய்வங் களுக்கான ஆலயங்கள். சுமார் இருநூறு ஆண்டுகள் பழைமையான இக்கோயில்களில் சிறந்த உற்சவங்களும், திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. அவற்றில் ஒன்று ‘கெய்லாங்’ சிவன்கோயில்.

இந்தியக் கட்டடக் கலைஞர்களால் தென், வட இந்திய ஆலய அமைப்புகளை இணைத்து வித்தியாசமாக, தனித்துவமிக்கதாக இவ்வாலயம் எழுப்பப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பும், வெளிறிய பழுப்பு நிறமும் இணைந்த வண்ணத்தில், மூன்று கோபுரங்களுடன், எண்கோண வடிவ கலையழகுடன் பத்து அடிக்கு மேற்பட்ட உயரத்தில் காட்சி தருகிறார் சிவபெருமான்.

அலங்கார வளைவுடன் காணப்படும் நுழை வாயிலில் இருந்து 21 படிகள் ஏறிச் சென்றால் விஸ்தாரமான பெரிய மண்டபம். அழகிய தெய்வீக சிற்பங்களைக் கொண்ட பெரிய தூண்கள். மேல் விதானக் கோலங்கள் கண்கவர் காட்சி. தகதகவெனப் பிரகாசிக்கும் கொடிமரத்துக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நந்திகேஸ்வரரை தொழுது, முன்னே சென்றால் ஸ்ரீவிஸ்வநாதரின் வலப்பக்கம் அமர்ந்திருக்கும் கணபதியை வணங்கி, சிவபெருமானைத் தொழுவோம். சற்று மேலே பார்வையைச் செலுத்த, ஆஹா... எல்லா ஆலயங்களிலும் சுற்றுப் பிராகாரத்தில் காட்சி தரும் 63 நாயன்மார்களும் எண்கோண மண்டப விதானத்தில், வண்ணமயமாகக் கைகூப்பித் தொழுதபடி நின்று இறைவனை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஈசனின் சன்னிதிக்கு நேர் மேலே நடராஜ தரிசனம்.  

விஸ்வநாதப்பெருமான் வெள்ளித் திருவாசியுடன் காட்சி தருகிறார். ஐயனின் இடப்பக்கம் காட்சி தரும் குமரப்பெருமானை வணங்கி, சன்னிதியை சுற்றி வரும்போது மோனத்துடன் தரிசனம் தரும் தட்சிணா மூர்த்தியையும், சுற்றுத் தெய்வங்களையும் வணங்கி அம்மனின் சன்னிதிக்கு வருவோம். இரண்டடி உயர விசாலாட்சி அன்னை சிந்தையைக் கவரும் வண்ணம் தரிசனம் தருகிறாள். ஆலயத்தின் தூய்மையும்,  தெய்வங்களின் சாந்நித்தியமும் தெய்வீகமான அமைதியும், மனதுக்கு புத்துணர்வை கொடுக்கின்றன. நவக்கிரக சன்னிதியையும், நடராஜ சபையையும் வணங்கி கீழே வருவோம்.

கீழே வலப்பக்கம் உள்ள நர்மதேஸ்வரர் என்ற பாணலிங்கம், ஆத்ம லிங்கமாகப் போற்றப்படுகிறது. இந்த லிங்கத்துக்கு ஜாதி, மத, பேதமின்றி  யாரும் அபிஷேகம், வஸ்திரம், புஷ்பம் சாத்தி அலங்காரம், தீபாராதனை செய்யலாம். செய்யும் முறை அங்கு எழுதப்பட்டுள்ளது. அதற்கான பால், சந்தனம், விபூதி, கங்கை நீர், வில்வம் போன்றவை ஆலயத்தில் கிடைக்கிறது. நாமே நம் கையால் அபிஷேகம் செய்வது மன சாந்தியைத் தருகிறது. திங்கட்கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு நீண்ட வரிசையில் நின்றே அபிஷேகம் செய்ய முடியுமாம்.

விசாலாட்சி அன்னை ...

கீழுள்ள சுற்றுச் சுவர்களில் ஈசனின் தாண்டவக் கோலங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. கீழ்ப் பிராகாரத்தின் இடப்பக்கம் சூரிய பகவான், சந்திரன், சனீஸ்வரர், காலபைரவரின் சன்னிதிகள் உள்ளன.

இங்கு நவராத்திரி, வசந்த நவராத்திரி, சிவராத்திரி, ஸ்கந்த சஷ்டி, திருவாதிரை போன்ற உற்சவங்கள் கொண்டாடப் படுகின்றன. வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் பிரம்மோத்சவம் நடத்தப்படுகிறது.

மேலே ஏறிச் செல்ல முடியாதவர்களுக்காக லிஃப்ட் வசதி உள்ளது. இவ்வாலயத்தில் இலவச தேவார வகுப்புகளும், இலவச ஹோமியோபதி மருத்துவமும் செய்யப்படுகிறது. கல்யாணம், காது குத்து, அன்னபிராசனம், சிரார்த்தம் போன்றவைகளும் செய்து வைக்கப்படுகின்றன. ஊழியர்களுக்கான வீடுகளும் ஆலயத்தினுள்ளேயே அமைந்துள்ளது.

ஆலயம் கெய்லாங்க் ஈஸ்ட் அவென்யூ 2ல் உள்ளது. பாயா லேபர் (Paya Laber MRT) ஸ்டேஷனில் இருந்து நடந்து செல்லலாம். சிங்கப்பூர் செல்பவர்கள் அவசியம் கண்டு தரிசிக்க வேண்டிய ஆலயம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT