Sri Nimishambal 
தீபம்

நிமிஷத்தில் வரம் அருளும் ஸ்ரீ நிமிஷாம்பாள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

நிமிடங்களில் நம் கஷ்டத்தை போக்கும் நிமிஷாம்பாள் ஆலயம் சென்னை பிராட்வேயில் காசிச்செட்டி தெருவில் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாதம் முழுவதும் சிறப்பு விழாக்களும், அலங்காரங்களும் வெகு விமர்சையாக நடைபெறும். இக்கோவில் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டு அமைந்துள்ள இக்கோவிலில் ஸ்ரீநிமிஷாம்பாள் மூலவராக அருளாட்சி புரிகிறாள்.

கருவறை வெளிப்பிரகாரத்தில் முக்தீஸ்வரர் என்ற சிவலிங்கம், விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள், ஆஞ்சநேயர், சுப்ரமணியர் போன்ற உபசன்னதிகளும் உள்ளன. நிமிஷாம்பாள் கருவறையின் பின்புறம் நவகிரக சந்நிதி உள்ளது.

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள இக்கோவிலில் காமிகாகம முறைப்படி இரண்டு கால பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. துர்கையின் அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால் ராகு காலம், அஷ்டமி நாட்களில் பாலபிஷேகம் செய்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

நிமிஷாம்பா என்பது பார்வதி தேவியின் மற்றொரு பெயர். இவள் பக்தர்களின் பிரச்னைகளை ஒரு நிமிடத்தில் நீக்கி விடுவதால் 'நிமிஷாம்பா' என்று அழைக்கப்படுகிறாள். நிமிஷா என்றால் நிமிடம் என்று பொருள்.

சென்னையில் சவுகார்பேட்டை பகுதியில் நெரிசல் மிகுந்த காசிச்செட்டி தெருவில் இக்கோவில் அமைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியான சௌகார் பேட்டையில் தெருக்களில் நடப்பது கூட சிரமமாக இருக்கும். இவ்வளவு பரபரப்பான பகுதியில் இந்த அமைதி தரும் மிகவும் பழமையான கோவில் இருப்பது பலருக்கு தெரிவதில்லை.

பிரதான சன்னிதியில் நிமிஷாம்பாள் நின்ற கோலத்தில் அருள் புரிகிறாள். இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்தியின் சிலைகள் பிரதான சன்னிதியின் சுவர்களில் அமைந்துள்ளன. மிகச் சிறிய கோவில் தான்; ஆனால் அவள் தரும் வரமோ மிகப்பெரியது.

கோவிலுக்குள் நுழைந்தவுடன் முதலில் தென்படுவது கருவறை தான். அதில் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் அம்பாளுக்கு தலைக்கு மேல் தர்ம சக்கரமே குடையாய் அமைக்கப்பட்டுள்ளது. மேல் இரு கரங்களிலும் சூலமும், உடுக்கையும் உள்ளன. கீழ் இரு கரங்களிலும் அபய, வரத ஹஸ்தங்கள். அம்மனுக்கு எதிரில் சிம்ம வாகனமும், சூலமும் காணப்படுகிறது. 

இவளுக்கு 5 நெய் தீபம் ஏற்றி, மரிக்கொழுந்து மலர் சாற்றி வழிபட்டு வர திருமண தடைகள் நீங்கும். வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இக்கோவிலில் நிமிஷாம்பாள் ஜெயந்தி அன்று 108 கலச அபிஷேகமும், துர்கா ஹோமமும் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. நிமிஷாம்பாள் ஜெயந்தி ஆண்டு தோறும் வைகாசி மாதம் வளர்பிறை தசமி நாளில் கொண்டாடப்படுகின்றன. ‌‌‌‌‌

நிமிஷத்தில் வரம் அருளும் இந்த நிமிஷாம்பாளை வணங்கி வாழ்வில் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெறுவோம்!

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

ஸ்கிசோஃப்ரினியா காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்!

நீங்கள் சாப்பிடுவது தூய்மையான கோதுமையே இல்லை… உண்மைய முதலில் தெரிஞ்சுக்கோங்க!

SCROLL FOR NEXT