mcmorabad
தீபம்

நட்பின் இலக்கணம் ஸ்ரீகிருஷ்ணர்!

ஆர்.ஜெயலட்சுமி

ட்புக்கு மிகச் சிறந்த உதாரணம் வேண்டும் என்றால் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே இருந்த நட்பை விட, வேறு சிறந்த உதாரணம் இருக்க முடியாது. பாண்டவர்கள் செய்த ராஜசூய யாகத்தைப் பார்த்து பொறாமைப்பட்டு ஊர் திரும்பிய துரியோதனன் இதைப் பற்றி சொல்கிறான்...

‘ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுடைய ஆத்மாவை போல இருக்கிறார். அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணனுடைய ஆத்மா போல இருக்கிறான். அர்ஜுனன் என்ன சொன்னாலும் ஸ்ரீகிருஷ்ணர் கேட்கிறார். ஸ்ரீகிருஷ்ணர் என்ன சொன்னாலும் அர்ஜுனன் கேட்கிறான். அர்ஜுனனுக்காக ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டத்தையும் தியாகம் செய்யக்கூடியவர். ஸ்ரீகிருஷ்ணருக்காக அர்ஜுனனோ, தனது உயிரையே தியாகம் செய்யக்கூடியவன்.

காண்டவ வனத்தை அர்ஜுனன் எரித்தபோது இந்திரன் வந்து அர்ஜுனனுக்கு எத்தனையோ வரங்கள் கொடுத்தான். அப்போது ஸ்ரீகிருஷ்ணர் இந்திரனிடம் ஒரு வரம் கேட்டார். அந்த வரம், ‘அர்ஜுனன் மீது எனக்குள்ள நட்பு அதிகரித்துக்கொண்டே போக வேண்டும்’ என்பதுதான். அர்ஜுனனுக்காக ஸ்ரீகிருஷ்ணர் எந்த வேலையையும் செய்யத் தயாராக இருந்தார். ராஜசூய யாகத்தின் முதல் மரியாதை ஸ்ரீகிருஷ்ணருக்குத்தான் அளிக்கப்படுகிறது. இருந்தும் அவர் ராஜசூய யாகத்தில் அதிதிகளின் கால்களை கழுவும் வேலையை தாமே ஏற்றுக்கொண்டார்.

மகாபாரத யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன், ‘தாம் ஒரு பக்கமும் தனது சேனைகள் ஒரு பக்கமும் இருக்கும்’ என்று சொன்னபோது, ‘சேனைகள் வேண்டாம். நீங்கள் எங்கள் பக்கம் இருந்தால் போதும்’ என்று அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரை தேர்ந்தெடுத்தான். யுத்தத்தில் அர்ஜுனனை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று கர்ணன் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தான். அதற்காக இந்திரனிடமிருந்து  சக்தி என்கிற ஆயுதத்தையும் பெற்றிருந்தான்.

கடைசியின் கர்ணன் அந்த சக்தி ஆயுதத்தை கடோத்கஜன் மீது பிரயோகித்து அவனைக் கொன்றபோது ஸ்ரீகிருஷ்ணர் சந்தோஷப்பட்டார். கிருஷ்ணரின் தேரோட்டி சாத்யகி இதைக் கண்டு ஆச்சரியப்பட்டு கண்ணனிடம், ‘பீமனின் மகன் கடோத்கஜன் கொல்லப்பட்டிருக்கிறான். அதைப் பார்த்து சந்தோஷப்படுகிறீர்களே’ என்று கேட்டான். அதற்கு ஸ்ரீகிருஷ்ணர், ‘சாத்யகி, இந்திரன் கொடுத்த சக்தி ஆயுதத்தை ஒரே ஒருமுறைதான் பிரயோகிக்க முடியும். அதை கர்ணன் அர்ஜுனனுக்கு என்றே வைத்திருந்தான். ஆகவே கர்ணன், அர்ஜுனனை எதிர்க்க வந்த போதெல்லாம் நான் கர்ணனை மோகித்து, அந்த சக்தி ஆயுதத்தை மறக்கச் செய்திருந்தேன்.

அந்த சக்தி ஆயுதம் இருந்தவரை அதுவே, அர்ஜுனனின் யமன் என்று தீர்மானித்து நான் இரவெல்லாம் தூங்காமல் இருந்தேன். எல்லாவற்றையும் விட அர்ஜுனனின் உயிர்தான் மிகவும் மேலானது என்று நான் கருதுகிறேன். அர்ஜுனனை விட்டுவிட்டு என்னை மூன்று உலகங்களை ஆளச் சொன்னாலும் நான் சம்மதியேன். ஆகவே, கடோத்கஜன் மீது சக்தி ஆயுதம் பிரயோகமாகி விட்டதால் இனி அர்ஜுனன் பிழைத்தான் என்று நான் சந்தோஷப்படுகிறேன்’  என்று கூறினார். இதிலிருந்து ஸ்ரீகிருஷ்ணனுக்கும்  அர்ஜுனனுக்கும் இடையே இருந்த நட்பின் ஆழத்தை அறியலாம்.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT