Picasa
தீபம்

தமிழக அமைப்பில் அயோத்தியில் ஒரு ஸ்ரீராமர் கோயில்!

லதானந்த்

ழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட வைணவ ஆலயங்களை, ‘திவ்ய க்ஷேத்ரம்’ என்பர். இவை மொத்தம் 108. இவற்றுள் பரமபதமும் பாற்கடலும் இந்தப் பூலகில் தரிசிக்க இயலாதன. ஏனைய 106 திவ்ய ஸ்தலங்களில் அயோத்தி முக்கியமானது. பலரும் அயோத்தியில் இருக்கும் ராம ஜன்ம பூமிதான் ஆழ்வார்களால் பாடப்பட்டது என நினைப்பர். ஆனால், உண்மையில் திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற, 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுவது அம்மாஜி மந்திர். ‘மதறாஸ் மந்திர்’ என்றும் இது அழைக்கப்படுகிறது. அயோத்தியில் வசிப்பவர்கள் பலருக்குமே இந்த ஆலயத்தைக் குறித்து சரியாகத் தெரியவில்லை. அயோத்திக்குச் செல்லும் பக்தர்கள் அவசியம் காணவேண்டிய திருத்தலம் இது.

அம்மாஜி மந்திர், நிர்மோச்சன் செள ரஸ்தா அருகில், கொத்வாலி அயோத்தியா காவல் நிலையத்துக்கு எதிர்ப்புற சாலையில் அமைந்துள்ளது. அச்சு அசலாகத் தமிழ்நாட்டு வைணவ ஆலயம் போலவே இது தோற்றம் தருகிறது. மூலவர் ஸ்ரீராமர், தாயார் சீதா தேவி. புஷ்கல விமானத்தின் கீழ் அமைந்த கருவறையில்
ஸ்ரீ ராமபிரானின் ஒருபுறம் சீதாபிராட்டியும், இன்னொரு புறம் லட்சுமணரும் காட்சி தருகின்றனர். ஸ்ரீராமபிரான் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலுக்கு பரமபத புஷ்கரிணி மற்றும் சரயு நதி ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன.

யோகி ஸ்ரீ பார்த்தசாரதி அய்யங்கார் என்பவரால் நிறுவப்பட்டது இந்தக் கோயில். இவர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஆழ்ந்த புலமை கொண்டவர். வேத இதிகாசங்களில் விற்பன்னராகவும் இருந்தவர். இவர்,
‘ஸ்ரீ சரஸ்வதி பண்டார்’ என்ற ட்ரஸ்ட் ஒன்றை ஏற்படுத்தி, தனது சொத்துக்கள் முழுவதையும் அதற்கே தந்துவிட்டார். அதில் கிடைக்கும் வருவாயிலேயே இந்த ஆலயம் நிர்வகிக்கப்படுகிறது. அம்மாஜி மந்திர் இருக்கும் இடத்தில்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆழ்வார்கள் பாடிய ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் இருந்ததாம்.
ஸ்ரீ ரங்கநாதர், அனுமன் மற்றும் ஆழ்வார்களுக்கான தனி சன்னிதிகளும் இந்தக் கோயிலில் உண்டு. ஸ்ரீ சடகோபர், ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீ மணவாள மாமுனி ஆகியோரும் காட்சி தருகின்றனர். கோயிலில் பாஞ்சராத்ர ஆகமம் கடைபிடிக்கப்படுகிறது.

கோயில் அமைந்ததற்கான சுவாரசிய வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது. யோகி ஸ்ரீ பார்த்தசாரதி அவர்களின் மனைவி சிங்காரம்மா என்பவரது கனவில் ஸ்ரீராமர் மற்றும் சீதாபிராட்டியாரின் உத்ஸவ விக்ரஹங்கள் தோன்றினவாம். அவை தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் திருப்புல்லாணி தலத்தில் அமைந்த ஒரு பாழடைந்த கோயிலில் புதைந்திருப்பதாகக் கனவில் அறியப்பட்டது. அந்தத் தம்பதியினர் உடனே சென்று அங்கே பார்க்க, கனவில் கண்டபடியே கோயிலும் மூர்த்திகளின் திருவுருவங்களும் தென்பட்டிருக்கின்றன.

உறவினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் ராமநாதபுரம் மன்னரின் அனுமதியோடு அந்த விக்ரஹங்களை எடுத்து வந்து ஆராதிக்க அயோத்தியில் கோயில் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர். கோயில் திருப்பணிகள் முடிவதற்கு முன்னரே பார்த்தசாரதி அய்யங்கார் இறந்து விட, அவரது மனைவியே கோயில் பணிகளை நிறைவு செய்து, நித்ய ஆராதனை சேவைகளையும் உத்ஸவங்களையும் நடத்தும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அவரது முனைப்பான திருப்பணியால் ஆலயம் உருவானதால், ‘அம்மாஜி மந்திர்’ என்ற பெயரிலேயே இந்த ஆலயம் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் ஒரு கல்வெட்டு, இந்த ஆலயத்தை, ‘சேது ராம மந்திர்’ என்று தெரிவிப்பதையும் கவனிக்கலாம்.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி உத்ஸவம் ஐந்து நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கெனவே அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், வேத பாராயண விற்பன்னர்கள் ஆகியோர் திருவல்லிக்கேணியில் இருந்து அயோத்தி செல்கிறார்கள். ஆலயத்தில் தங்கும் வசதிகளும் உண்டு.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT