முருகன் ... 
தீபம்

விசாகத்துக்கும், தாமிரபரணிக்கும் உள்ள தொடர்பு!

கல்கி டெஸ்க்

-தா. சரவணா

வைகாசி விசாகத் திருநாள், முருகன் கோயில்களில் விசேஷம். இது தமிழ் கடவுள் முருகன் அவதரித்த நாள் என்பர். கந்தன், கடம்பன், கதிர்வேலன், கார்த்திகேயன் என பல பெயர்கள் முருகனுக்கு உண்டு. அவற்றுள் ஒன்று விசாகன். இதற்கு விசாக நாளில் அவதரித்தவன் என்று பொருள்.

விசாகம் என்பதற்கு வேறு ஒரு பொருளும் உண்டு. அதாவது,  வி என்றால் பறவை. சாகன் என்றால், சஞ்சரிப்பவன். மயில் முருகனின் வாகனம். மயிலில் சஞ்சரிக்கும் மயில் வாகனனே, விசாகன்.

முருகனுடன் தொடர்புடைய நட்சத்திரங்களில், கார்த்திகையும் ஒன்று. கார்த்திகை பெண்களால் வளர்க்கப் பெற்றவர் என்ற காரணத்தினால், முருகப் பெருமானுக்கு கார்த்திகை செல்வன், கார்த்திகேயன் என்ற பெயர்களும் உண்டு. நடராஜ பெருமானுக்கு ஆதிரையும்,  விஷ்ணுவுக்கு திருவோணத்தையும் கூறுவதுபோல, முருகனுக்குரிய நட்சத்திரம் விசாகம் ஆகும்.  

மற்ற தமிழ் மாதங்களைவிட வைகாசி மாதத்தில் பவுர்ணமியும், விசாக நட்சத்திரமும் பெரும்பாலும் இணைந்துவரும். அந்த வகையில், வரும்
23ம் தேதி (23.05.2024)  வைகாசி விசாகத்தை இறுதி நாளாகக் கொண்டு, எடுக்கப்படும் விழா, வைகாசி விசாகப் பெருவிழா. அன்றைய தினம் முருகஸ்தலங்களில்,  விழா நடந்து தீர்த்தவாரியும் நடக்கும்.

தமிழகத்தில் உற்பத்தியாகி, வங்கக் கடலில் கலக்கும் நதி, தாமிரபரணி. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் புண்ணிய நதி இது. இந்நதியின் வரலாற்றை விரிவாக விவரிக்கும் தாமிரபரணி மகாத்மியம் புத்தகத்தில், இந்தப் புண்ணிய நதி, வைகாசி விசாக நாளில் உற்பத்தியானது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நதி உருவான கதையில், சில சுவாரஸ்ய தகவல்கள் உள்ளது. தாமிரபரணி்க்கு, சமுத்திர ராஜனுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்னர் தாமிரபரணி தேவி தீர்த்த ரூபம் பெற்று, வெளிப்பட கருணைகொண்டாள். இதைத் தெரிந்துகொண்ட ரிஷிகள், முனிவர்கள் மகிழ்ந்தனர். பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலானவர்களும், தேவர்களும் ஆகாயத்தில் விமானத்தில் வந்து கூட்டம், கூட்டமாக தென்பட்டனர். கந்தர்வர்கள், வீணை உட்பட மங்கல கருவிகளை வாசித்து, பாடல்களைப் பாடினர். இன்னும் சிலர் புண்ணிய கதைகளைக் கூறலானார்கள். இந்தத் தருணத்தில், ஆதி பராசக்தி, தாமிரபரணியை நோக்கி, நீ நதியாகி மாறி பிரவாகிக்கலாம் என அருள்புரிந்தாள். அப்போது தாமிரபரணி என்ற பெயரில் இந்நதி உற்பத்தியானது என்கிறது தாமிரபரணி மகாத்மியம். தாமிரபரணி உற்பத்தியான நாளான வைகாசி விசாகத்தன்று இங்கு வந்து நீராடினால் பல புண்ணியங்கள் கிட்டும்.

திருவிழாக்களில் கொடியேற்றம் மற்றும் வாகன பவனியின் தத்துவம் தெரியுமா?

வெற்றிக்கு உதவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கற்க வேண்டிய 7 பழக்கங்கள்!

அத்திப்பழம் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிடேரியன் ஃபுரூட்டா?

ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வாழைப்பூ!

'வித்யாலட்சுமி திட்டம்' - உயர்கல்வி நிறுவனங்களில் பயில மாணவர்களுக்கு கல்விக் கடன் உதவி!

SCROLL FOR NEXT