நமது முன்னோர்கள் நவகிரகங்களில் ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரகங்களின் தொடர்போடு, வார தினங்களுக்கு (ஞாயிறு முதல் சனி வரை) பெயர் வைத்தனர்.
அந்த வகையில் செவ்வாய் கிரகத்தின் தொடர்புடன் செவ்வாய்க் கிழமை உண்டாயிற்று. கிரகங்களில் மங்களகரமான கிரகம் செவ்வாய். அதனால்தான் குடும்பத்தில் மங்களகரமான விசேஷங்கள் நடைபெறுவதற்கு செவ்வாய்க்கிழமை விரதத்தை மேற்கொள்கிறோம்.
முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமையாக செவ்வாய் இருக்கிறது. ஆனால், நாம் விசேஷங்களை செய்வதற்கும், பொருட்களை வாங்குவதற்கும், புதிய செயல்களை துவங்குவதற்கும், புத்தாடை அணிவதற்கும் என பல விஷயங்களுக்கு செவ்வாய்க்கிழமையை தவிர்த்து விடுகிறோம்.
பெயரிலேயே மங்களம் இருப்பதால் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் செயல்களில் நிச்சயம் வெற்றி உண்டாகும். அதேபோல் மங்களகாரகன் என்கிற பெயர் மட்டுமல்லாமல், செவ்வாய்க்கு பூமிகாரகன் என்கிற பெயரும் உண்டு.
நவகிரகங்களில் ஒரு மனிதனின் ரத்தம், நோய் எதிர்ப்பு சக்தி, தைரியம், பூமி சம்பந்தமான சொத்துக்கள், செவ்வாய் தோஷம், சொந்த வீடு ஆகியவற்றிற்கு காரகனாக செவ்வாய் பகவான் இருக்கிறார்.
ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் நிலை சரி வர அமைய பெறாதவர்கள் செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து வழிபட நன்மை உண்டாகும்.
விரதம் இருக்கும் முறை:
செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையில் நீராடி, அருகில் இருக்கும் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்றுவழிபட வேண்டும்.
பிறகு வீட்டிற்கு திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.
மாலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்து முருகனை உளமார வழிபடுவதால், உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பின் அதன் தீவிரம் குறைந்து நன்மையான பலன்கள் உண்டாகும்.
விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்.
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும்.
பய உணர்வுகள் நீங்கி, தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பிறக்கும்.
செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடம் வைத்தாலும் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றி கொடுக்கும்.
முருகனை ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் வணங்கி வர, வாழ்வில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். நிலம் வாங்கி, வீடு கட்டும் கனவு நிஜமாகும்.
ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து கோவிலுக்கு சென்று, முருகனை வணங்குவதால் ஜாதக ரீதியான கோளாறுகள் தணிந்து, கட்டுப்பாட்டுக்குள் வரும்.
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனின் அருளைப் பெறுவோம்.