தனித்தனி கொள்கையுடைய சமய பிரிவினர் கூறும் ஒவ்வொரு தேவதையும் நுனின் வெவ்வேறு அம்சமும், இயல்பும் தான். இந்த தேவதைகள் எல்லாமே ஈஸ்வனிடத்தில்தான் சென்று முடிகின்றன.
ஈஸ்வரனே தனது மூன்று இயல்புகளுக்கு ஏற்ப பிரமன், விஷ்ணு, சிவபெருமான் என மும்மூர்த்தியாக இந்த உலகின் ஒன்றேயான முழுமுதற் காரணம் ஆகின்றான். இந்த மூர்த்திகளில் எதை வழிபட்டாலும், குறிக்கோளின் அருகே செல்லலாம். ஈர நெஞ்சோடு பிறருக்கு தொண்டாற்றுவதாலும், இறைவனிடத்தில் பக்தி செய்வதாலும், எந்த வடிவத்தில் கடவுளை வழிபட்டாலும் , உள்ளன்போடு பக்தி செய்தாலும் , மனதை அடக்கி ஒடுக்கும யோக பயிற்சியாலும், மனிதன் ஞானமார்க்கத்தில் ஈடுபடத் தகுதி பெற்று விடுகிறான்.
ஞானமார்க்கமாவது மூன்று வகைகளில் பயிலக் கூடியது.
கேட்டல்-தத்துவங்களைக் கேட்டு உணர்தல்-"சிரவணம்" எனப்படும். கேட்டல் தத்துவத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பது மனனம் எனப்படும். அதையே தொடர்ந்து தியானம் செய்வது நித்யாசனம் எனப்படும். இந்த மூன்றும் பிரம்மத்தை உணர்ந்து அனுபவிக்கும் நிலையைப் பயக்கும். இதுவே மோட்சம் - வீடுபேறு எனப்படுவது.
சங்கரர் சிறு சிறு பிரிவினராய் சமயத்துக்கு ஆடிய அனைவரையும் அவர்களுடைய குறுகிய மனப்பான்மையையும், சமயநெறியையும், பிடிவாதத்தையும் விட்டு ஒழிக்குமாறும், தங்கள் உடம்புகளை தம் தம் சமயப் பிரிவுக்குரிய அடையாளங்களில் பறை சாற்றிக் கொள்வதை அறவே கைவிடுமாறும், வழிபாடுகளில் உயர்ந்த வகையான பாணிகளைக் கைக்கொள்ளுமாறும், சீரிய நெறியுடன் வாழும்படியும் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.
மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்ட மூன்று புனித க்ஷேத்திரங்கள் சிவ வழிபாட்டு இடங்களாகக் கருதப்பட்டன. அவை திருப்புடைமருதூர், திருவிடைமருதூர், மல்லிகார்ஜூனம் (ஸ்ரீசைலம்).
திருவிடைமருதூருக்கு சங்கரர் வந்தபோது ஒரு தெய்வீக அதிசயம் நடந்தது. அத்தலத்தில் உள்ள மகாலிங்கம் என்ற சிவபெருமானது லிங்கமே. அத்வைதம் உண்மையா, பொய்யா என்று கூற வேண்டும் என சங்கரர் விரும்பினார். அப்போது சிவபெருமானே லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு நின்று தனது வலது கையினை உயர்த்தி"ஸத்யம் அத்வைதம்" (அத்வைதம் உண்மையானது) என மும்முறை அறிவித்தார். இப்படி சிவனே வந்து உரைத்தது கேட்டு பலர் மகிழ்ச்சியுடன் சங்கரரை குருவாக ஏற்றனர்.
மல்லிகார்ஜூனத்தில் வேறு ஒரு அதிசயம் நடந்தது. அந்நாளில் ‘காபாலகர்’ என்ற சைவ உட்பிரிவினரின் கோட்டையாய் இருந்தது அவ்வூர். அவர்கள் வாதம் செய்து சங்கரரை வெல்ல முடியாமல், எப்படியாவது அவரை கொலை செய்துவிடுவது என திட்டமிட்டனர். சங்கரர் தனிமையில் இருந்த நேரத்தில், ஒரு காபாலிகன் அவரிடம் வந்து "ஐயா... பிறருக்கு உதவி செய்வது உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் அல்லவா? எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். நான் நீண்ட காலமாக சிவனை வணங்கி வருகிறேன். அவரை திருப்திப்படுத்த நான் ஒரு பலி கொடுத்தேயாக வேண்டும். அந்த பலி ஒரு சக்கரவர்த்தியாகவோ அல்லது ஒரு சந்நியாசியாகவோ இருக்க வேண்டும். எனக்கு சக்கரவர்த்தி யாரும் கிடைக்கவில்லை. நீர் ஒரு சந்நியாசி... எனக்கு உமது தலை வேண்டும்" என்றான்.
சங்கரரும் புன்முறுவலுடன்... "உன் விருப்பப்படியே என் தலையை எடுத்துக்கொள். ஆனால், ஒரு நிபந்தனை. நான் ஆழ்ந்த தியான சமாதியில் இருக்கும்போது, என் சீடர்கள் யாரும் என் அருகில் இல்லாத நேரம் பார்த்து வந்து இதைச் செய்ய வேண்டும்" என்றார்.
அந்த காபாளிகனும் அவ்வாறே செய்தான். ஆனால், அவன் இந்த பயங்கரமான செயலைச் செய்யத் தொடரும் நேரம் நரசிங்க வடிவத்தில் வந்த ஒருவன் அந்த காபாலிகனை கொன்று விட்டான். அது வேறு யாரும் இல்லை. சங்கரரின் முதல் சீடரான பத்மபாதரே இதைச் செய்தார்.
நீராடப் போயிருந்த பத்மபாதர் காபாலிகன் செய்ய இருந்த கொடுமையை சூசகமாக உணர்ந்தார். அவரது வழிபாடு தெய்வமான நரசிங்கப் பெருமான்தான் பத்மபாதருக்குள் புகுந்து விட்டிருக்க வேண்டும். பத்மபாதர் சரியான நேரத்தில் அங்கே வந்து சங்கரருக்கு நேர இருந்த ஆபத்தை விலக்கினார். கண் விழித்த சங்கரர்... காபாலிகன் இறந்து கிடப்பதையும், தன் எதிரே நரசிங்கப்பெருமான் நிற்பதையும் கண்டார், சிறிது நேரத்தில் அந்த இடத்தில் பத்மபாதர் வணக்கத்துடன் நடந்தது ஏதும் அறியாமல் நின்றிருந்தார்.
பத்மபாதர், தன் இளமைப் பருவத்தில் நரசிங்கப்பெருமானை மிகவும் பக்தியுடன் வணங்கி வழிபட்டு வந்தார். அவருக்கு யாரோ நரசிங்க மந்திரத்தை உபதேசித்து, அந்த வழிபாட்டைக் கைக்கொள்ள செய்திருந்தனர்.
விஷ்ணுசர்மா என்பது பத்மபாதரின் இளமைக்காலப் பெயர். அவர் அந்த இளமைப் பருவத்திலேயே ஒரு மலையடிவாரக் காட்டிற்குச் சென்று அந்த மந்திரத்தை லட்சக்கணக்கில் உருவேற்றிக் கடும் தவம் செய்தார்.
அந்த வேளையில் அவரைக் கண்ட ஒரு வேடன் "இங்கு என்ன செய்கிறீர்?" என்று கேட்டான்.
அவனைத் தட்டிக் கழிக்கும் நோக்குடன், "இந்தக் காட்டில் நான் நரசிங்கம் வசிக்கும். அதைக் காண்பதற்காகவே நான் வந்து இருக்கிறேன்" என்றார் பத்மபாதர்.
அந்த வேடனின் ஆர்வம் அதிகமாகி, மேலும் அறிய விரும்பி... "அது என்ன? அப்படி ஒரு சிங்கமா? அது எப்படி இருக்கும்?" என்று கேட்டான்.
"அந்தச் சிங்கத்தின் கீழ் பாதி மனித உடல் போலவும்... மேல் பாதி சிங்கம் போலவும் இருக்கும்" என்றார் பத்மபாதர்.
இதைக் கேட்ட வேடன் "மறுநாள் முடியும் முன் அதை உமக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்துவேன்"என்று உறுதிமொழி அளித்து நரசிங்கத்தைத் தேடி அலைந்தான்.
வேறு நினைவின்றி நரசிங்கத்தையே நினைத்துக்கொண்டு காடு முழுதும் தேடினான். ஆனால், நரசிங்கம் கிடைக்கவில்லை. மறுநாள் முடியும் நேரம் தான் சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாததால் தன்னை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்தான்.
அப்போது நரசிங்கம் அவனுக்கு முன் தோன்றியது. ஒரு காட்டுக் கொடியால் அதைக் கட்டி அழைத்து வந்து பத்மபாதரிடம் "இதோ பாருங்கள் நரசிங்கத்தைக் கொண்டு வந்து இருக்கிறேன்"என சந்தோஷத்துடன் கூச்சலிட்டான்.
ஆனால், பத்மபாதரால் அதைப் பார்க்க முடியவில்லை."நான் என் வேஷத்தை இந்த வேடனுக்குக் காட்டினேன். ஏனெனில் அவன் அத்தனை ஆழமாகவும், அழுத்தமாகவும் நினைத்துக்கொண்டு தேடினான். நீ இப்போது என் குரலை மட்டுமே கேட்க முடியும். எப்போது அவசியம் நேரிடுமோ அப்போது நான் உன்னுடன் இருப்பேன்" என நரசிங்கப்பெருமான் சொன்னது மட்டுமே பத்மபாதர் கேட்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் விஷ்ணு சர்மா காசிக்குச் சென்று சங்கரரின் சீடராகி பத்மபாதர் எனும் பெயரினைப் பெற்றார். அதனால்தான் நரசிங்கப்பெருமானின் அருளால் அவரால் சங்கரரின் உயிரையும் பாதுகாக்க முடிந்தது.
(தொடரும்)