லக்ஷ்மி நரசிம்மர் 
தீபம்

மென்மையான தேகம் கொண்ட அற்புத ஸ்ரீ ஹேமாச்சல நரசிம்மர்!

நான்சி மலர்

ஸ்ரீ ஹேமாச்சல லக்ஷ்மிநரசிம்மர் கோவில் தெலுங்கானாவில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் மல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவில் 4000 வருடம் பழமையான கோவிலாகும். இக்கோவில் கடல் மட்டத்திலிருந்து 1500அடி உயரத்தில் அமைந்துள்ளது. நரசிம்மரை தரிசிப்பதற்கு பக்தர்கள் 150 படிகள் ஏறிச்செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் பச்சை பசேலேன்று இயற்கை அழகு கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ளதால், பக்தர்கள் தியானம் செய்ய வசதியாகவும், ஏற்ற இடமாகவும் இருக்கும்.

இக்கோவிலில் உள்ள நரசிம்மர் அதிசயமும், மர்மமும் நிறைந்தவர் என்று கூறுகிறார்கள். மற்ற நரசிம்மர் சிலைகளை ஒப்பிடுகையில் இந்த நரசிம்மருக்கு மிகவும் மென்மையான தோல்கள் இருப்பதாகவும், இந்த நரசிம்மரின் சிலையை மேலே கை வைத்து அழுத்தினால் நாம் கை வைத்த தடம் அப்படியே சிலையின் மேல் பதிந்து விடுமாம். சற்றே அழுத்தி கிள்ளினால், ரத்தம் வர ஆரம்பித்துவிடும் என்று கூறுகிறார்கள். கோவில் பூசாரி அடிக்கடி ரத்தம் வரும் இடத்தில் சந்தனத்தை தடவி விடுவார் என்று கூறப்படுகிறது. இவர் சுயம்புவாக உருவான நரசிம்மர் என்று நம்பப்படுகிறது.

இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தருகிறார்கள். மனநிம்மதி, செல்வம், குழந்தை வரம் வேண்டி இங்கே வருகிறார்கள். இங்கே அமைந்துள்ள 150 படிகளையும் பக்தியுடன் ஏறி வந்து நரசிம்மரிடம் வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

சந்தனம் கரைந்து தொப்புளில் இருந்து வரும் தண்ணீருடன் சேர்ந்து வருவதை பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள். இது கிரக தோஷத்தை போக்கும், பிள்ளை பேறு கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

நரசிம்மரின் பாதத்திற்கு கீழிலிருந்து உருவாகும் நீரூற்று இக்கோவிலில் உள்ளது. அந்த நீரூற்றின் பெயர் சிந்தாமணி ஜெலப்பாதம். இந்த நீரூற்றிற்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக மக்களால் நம்பப்படுகிறது.

எனவே இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீரூற்றில் நீராடுவது மட்டுமில்லாமல் அந்நீரை பாட்டில்களில் பிடித்து எடுத்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்ஷ்மி நரசிம்மர்

இந்த ஹேமாச்சல லக்ஷ்மி நரசிம்மர் 4000 வருடம் பழமையானவர். அகத்திய முனிவரே இம்மலைக்கு ஹேமாச்சலா என்று பெயர் வைத்தார் என்று கூறப்படுகிறது. ராவணண் தன்னுடைய தங்கையான சூர்ப்பனகைக்கு இவ்விடத்தை பரிசளித்தார் என்று கூறுகிறார்கள். ராமர் 14,000 அரக்கர்களை இவ்விடத்தில் தான் வதம் செய்தார் என்று புராணங்கள் கூறுகிறது.

விஜயநகர பேரரசர் காலங்களிலும், காகட்டியா வம்சமும் இக்கோவிலை செழிப்பாக பார்த்து கொண்டனர். நிலங்கள் இக்கோவிலுக்கு வழங்கபட்டதாகவும், கோவிலை பராமரிக்கவும் உதவினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நரசிம்ம ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, பிரம்மோத்சவம் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. அதில் நரசிம்ம ஜெயந்தியும், வைகுண்ட ஏகாதசியும் எல்லோரும் கொண்டாடப்படும் பொழுதே கொண்டாடப்படுகிறது. பிரம்மோத்சவம் மட்டும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சுத்த பௌர்ணிமி திதி அன்று கொண்டாடப்படுகிறது.

எனவே இந்த அதிசய லக்ஷ்மி நரசிம்மரை வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT