கும்பகோணம் – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சுந்தர பெருமாள் கோவில் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ளது திருநல்லூர். திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், ஏழுநிலை ராஜகோபுரம், நான்கு ராஜவீதிகள் கொண்டது. கோபுர வாயிலினுள் நுழைந்தால், இடப்பக்கத்தில் அமர்நீதி நாயனார், அருகில், கைக்குழந்தையை ஏந்தியபடி அவருடைய மனைவி இருவரையும் சிற்பமாகக் காணலாம். சிவனடியார்களுக்கு ஆடை அளித்து, இன்னமுதும் படைத்திட்ட இந்த அடியாரை சிவபெருமான் வேதியர் வடிவில் வந்து சோதித்தது இந்தத் தலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பலிபீட வடிவில் விநாயகர் காட்சியளிப்பது இந்தக் கோவிலில் மட்டும்தான். மேற்கு கோபுர வாயிலில் காணப்படும் இந்த கணநாதருக்கு ஆண்டுக்கு ஒருமுறை மிகப் பெரிய பூஜை நடத்தப்படுகிறது. அன்று திருநல்லூர் மக்கள் மற்றும் அடுத்த ஊர்களில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கள் வீட்டுப் பசு கறக்கும் ஒருவேளை பாலைக் கொண்டுவந்து கணநாதரை அபிஷேகித்து மகிழ்கிறார்கள்.
மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் என்று வணங்கப்படுகிறார். அம்பிகை, திரிபுரசுந்தரி. கயிலாயத்தில் சிவன் – பார்வதி திருமண வைபவத்திற்காக பிரபஞ்சமே அங்கே திரண்டு வந்தபோது உலகை சமன்படுத்துவதற்காக, ஈசன், அகத்திய முனிவரை தென்திசைக்குச் செல்லுமாறு பணித்தார். இறைவனின் திருமணத் திருக்காட்சியைத் தான் காண முடியாத ஏக்கத்தை முனிவர் வெளிப்படுத்தியபோது, அக்காட்சியைத் தானே அவருக்கு தென்பகுதியில் காண்பிப்பதாக வாக்களித்தார் ஐயன். அதன்படி திருநல்லூருக்கு வந்த அகத்தியருக்குத் திருமணக் கோலத்தைக் காண்பித்து அருளிய ஈசன், கல்யாண சுந்தரேஸ்வரர் என்றழைக்கப்பட்டார். அகத்தியர் கண்ட அந்தக் காட்சியை நாமும் இன்றும் காணலாம். ஆமாம், மூலஸ்தானத்தில் லிங்கத்துக்குப் பின்னால் அக்காட்சி சுதை சிற்பமாக அமைந்துள்ளது. அருகிலேயே அகத்தியர் ஸ்தாபித்த லிங்கத்தையும் தரிசிக்கலாம்.
கல்யாண சுந்தரேஸ்வரர் கருவறை முன் நின்றால் உள்ளத்தோடு, உடலும் சிலிர்ப்பதை உணர முடியும். இந்த லிங்கத்தில் ஏழு கடல்களும் ஒடுங்கியதை நிரூபிப்பதுபோல ஏழு துளைகளைக் காணலாம். இவர் பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் காரணப் பெயரால் அழைக்கப்படுகிறார். ஆமாம், ஆறு நாழிகைக்கு ஒருமுறை தாமிரம், இளம் சிவப்பு, தங்கம், நவரத்தின வர்ணங்களோடு, இன்னதென்று பகுத்தறிய இயலாத ஐந்தாவது வர்ணத்தோடும் அடுத்தடுத்து அருட்காட்சி நல்குகிறார்.
இவருக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால், திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானுக்கு, இறைவன் தன் ‘திருவடியைத் தலைமேல் வைத்தார். அதனலேயே இத்திருக்கோவிலில், வைணவக் கோவில்களில் செய்வதுபோல, சுவாமி சந்நதியில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தலைமீது இறைவன் திருப்பாதம் (சடாரி) சாத்தப்படுகிறது.
மூலவர் விமானத்தின் பின்புறம் நரசிம்மர் காட்சியளிப்பது வித்தியாசமாக இருக்கிறது. இதற்கும் ஒரு புராண சம்பவம் உண்டு. அதாவது இரண்யனை வதம் செய்வதற்காக மஹாவிஷ்ணு எந்த வடிவம் எடுப்பது என்று இந்த தலத்து ஈசனிடம் யோசனை கேட்டாராம். அதற்கு அவர், நரசிம்ம அவதாரம் எடுத்துச் செல்லுமாறு யோசனை தெரிவித்தாராம்.
இறைவனுக்கு அருகிலேயே அன்னை திரிபுரசுந்தரி என்ற கிரி சுந்தரி, அருளாட்சி புரிகிறாள்.
இந்தக் கோவில் வளாகத்திலுள்ள சப்த சாகரம் என்ற தீர்த்தம் மிகவும் புண்ணியமானது. அதாவது ஏழு கடல்கள் சங்கமிக்கும் திருக்குளம் இது. ஒரு பிரளய காலத்தில் ஏழு கடல்களும் ஆர்ப்பரித்தபோது இறைவன் அவற்றை ஒடுக்கித் தம்முள் அடக்கிக் கொண்டு பிறகு மென்மையான திருக்குளமாக வெளிக் கொணர்ந்தார் என்று சொல்லப்படுகிறது. மாசி மாதத்தில் கும்பகோணத்திலுள்ள மகாமகக் குளத்தில் நீராடினால் என்ன புண்ணியம் கிட்டுமோ, அதனை இந்தக் குளத்தில் நீராடினால் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவிலின் இன்னொரு சிறப்பம்சம், இங்கு அருள்பாலிக்கும் அஷ்டபுஜ மாகாளி. பொதுவாகவே காளி என்றால் கோரமான முகம்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் இந்தக் காளி மிகவும் சாந்த சொரூபி. மஞ்சள் பூசிய முகத்துடன் கருணை பொங்கும் விழிகளுடன் நல்லருள் புரிகிறாள். கர்ப்பிணிகள், தம் சுகப்பிரசவத்திற்காக இந்த காளியிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அவள் முன்னிலையிலேயே வளைகாப்பு விழாவையும் செய்து கொள்கிறார்கள். பிறகு காளியின் கரங்களிலும் இரு வளையல்களைப் பூட்டி அழகு பார்க்கிறார்கள்.
வில்வ மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகத் திகழ்கிறது. இங்குள்ள சோமஸ்கந்த மூர்த்தியை திருவாரூர் தியாகராஜருக்குச் சமமாக பாவிக்கிறார்கள். மாசிமக விழாவின்போது இவர் கோவிலுக்குள் பிராகாரங்களில் உலா வருவார். மாடக்கோவில் படிவழியாக இவர் இறங்கும்போது இவருக்கு வியர்வை பொங்கும் அதிசயம் நிகழ்கிறது. பக்தர்கள் இவருக்கு வெண்சாமரம் வீசியும், விசிறியால் விசிறியபடியும் வருவதையும் காணலாம். அவற்றையும் மீறி இவருக்கு வியர்ப்பது தெய்வீக வியப்புதான்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தோர் இக்கோவிலில் வழிபாடு நடத்தித் தம் துயர் களைகிறார்கள்.