தீபம்

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

ம.வசந்தி

திருமாலின் திருவிளையாடல்கள் ஏராளம். பக்தர்களுக்கு அருளும் பெருமாளின் திருவிளையாடல் ஒன்றை இந்தப் பதிவில் காண்போம்.

குடகுமலைச் சாரலில், நிர்மலன் என்ற ஒரு அரசன் தொழு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு சமயம் அவர் வனப் பகுதிக்குச் சென்றபோது, நாரதரைச் சந்தித்து தனது குறைகளைச் சொன்னார்.

‘இளம் வயதில் வனத்தில் பதுங்கி வழிப்போக்கர்களை வழிமறித்து, கொலை செய்து கொள்ளையடித்து வாழ்ந்ததன் விளைவே தனக்கு இந்த வியாதி' என்று நிர்மலன் சொன்னபோது, மனம் இறங்கிய நாரதர், ஒரு மந்திரத்தை உபதேசித்தார். அந்த மந்திரத்தை தினமும் மனமுருகி ஓதி வேண்டினார் நிர்மலன்.

ஒரு நாள் அசரீரி ஒன்று ஒலித்து, "காவிரிக்கரையில் உள்ள குளங்களில் நீராடு. உனது நோய் எங்கு குணமாகிறதோ, அங்கே நீ பாவ விமோசனம் அடைவாய்'' என்றது.

அதைக்கேட்டு மனம் மகிழ்ந்த நிர்மலன், காவிரிக்கரை குளங்களில் நீராடியபோது, மூவலூர் திருத்தலம் வந்து மாணிக்க சகாயேஸ்வரரை வணங்கினார். அப்போது, "பக்தா! உனது துயர் நீங்கும் காலம் வந்துவிட்டது. வடக்கே சற்று தொலைவில் ஒரு திருக்குளம் தென்படும். அதில் நீராடு. உனது நோய் நீங்கும். அங்கேயே தங்கி விடு''என்று அசரீரி ஒலித்தது. அதன்படி, ‘கோடி ஹத்தி' என்ற இடத்தில் நிர்மலனின் தொழு நோய் குணமானது.

தனக்கு மறு வாழ்வு அளித்த கடவுளைத் தரிசித்து கடும் தவம் செய்த நிர்மலனுக்கு அங்கிருந்த பெரிய அத்தி மரத்தில் பெருமாள் காட்சி அளித்தார். "நீ இனி, ‘பிப்பிலர்' என அழைக்கப்படுவாய். நீ நீராடிய தீர்த்தம் இனி ‘பிப்பில மகரிஷி தீர்த்தம்' என அழைக்கப்படும். இங்கு நீராடுபவர்களின் பிறவிப் பிணி, மெய்ப் பிணி அனைத்தும் நீங்கும்'' என பெருமாள் அருளி மறைந்தார். ஏராளமானோரின் தோஷங்களையும் பாவங்களையும் இந்தத் தல தரிசனம் போக்கியதால், ‘கோடி ஹத்தி' எனவும் ‘பாப விமோசனபுரம்' எனவும் அழைக்கப்பட்டது.

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட  தல வரலாறு கொண்டதாக இங்குள்ள ஏழு மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில்  கிரந்த மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. மூன்றாம் குலோத்துங்க சோழன் கோயிலுக்கு மானியங்கள், திருப்பணிகள் செய்ததாகஅறியப்படுவதோடு தஞ்சை சரபோஜி மன்னரும் இங்கு தரிசித்து  யுத்த தோஷம் நீங்கப் பெற்றார்.

பின்னர், அவர் அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் சிலையாக பெருமாளை வடித்து, மூலவராய் கொண்டு கோயிலை எழுப்பிய, மர வேரே இறைவன் திருவடிகளைத் தாங்கி நிற்கும் அதிசயம் இங்குள்ளது. மூலவருக்கு ஸ்ரீ வானமுட்டி பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீ பக்தப்ரியன், ஸ்ரீ வரதராஜன் என்ற பெயரும், தாயார் ஸ்ரீ லட்சுமி எனவும் உத்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் எனவும் வணங்கப்படுகிறார்.

ஐந்து அடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கியிருக்கும் கோயில் முன்புறம் விஸ்வ புஷ்கரணி எனப்படும் குளம் உள்ளது.  மூலவர் நான்கு திருக்கரங்களுடன் 14 அடி உயரம் கொண்டவர். மேல் கரங்களில் சங்கு சக்கரம் கீழ் இடது கரம் அபய கரமாகவும் உள்ளது. மார்பில் ஸ்ரீ தயா லட்சுமியும், இடதுபுறம் பூதேவியும் உள்ளனர்.

முக மண்டபத்தில்  கருடன், கொடிமரம், பலி பீடங்களும், அர்த்த மண்டபத்தில் சக்கரத்தாழ்வார், நர்த்தன கிருஷ்ணர், யோக நரசிம்மர் ஆகியோரும், பிராகாரம், மண்டபத்தில் சப்த ஸ்வர விஸ்வரூப ஆஞ்சனேயர், விஷ்வக்ஸேனர், ராமானுஜர், பிப்பல மகரிஷி, கருவறை சுவரில் ஸ்ரீ வரதராஜப் பெருமாளும் அருளுகின்றனர். அனுமன் சப்தஸ்வர அனுமன் எனப் போற்றப்படுகிறார்.

இத்தல பெருமாளை வழிபட்டால் காஞ்சிபுரம் அத்தி வரதர், திருப்பதி ஏழுமலையான், நரசிம்மர் ஆகிய மூவரையும் ஒருசேர வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ. தொலைவில்  அமைந்துள்ளது.

இத்தனை சிறப்பு வாய்ந்த பெருமாளை புரட்டாசி மாதத்தில் ஒரு நாள் சென்று வழிபட்டு அருள் பெறுவோம்!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT