Sri Airavatesvara Temple, Dharasuram  
தீபம்

50,000 சிற்பங்களைக் கொண்டு காலம் கடந்து நிற்கும் கற்கோவில்!

ராதா ரமேஷ்

நம்முடைய வாழ்க்கையும் வரலாற்றையும் விளக்குவதில் எப்போதும் சிற்பக் கலைகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு! ஏனெனில் மற்ற கலைகளை போல் சிற்பக் கலைகளை அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது. கருங்கற்களை குடைந்து உருவாக்கப்பட்ட இத்தகைய சிற்பக் கலைகள் தமிழர்களின் வாழ்வியலை எடுத்துரைப்பதில் மாபெரும் பங்காற்றுகின்றன! அத்தகைய சிற்பக் கலையில் ஒன்றாக 50,000 சிற்பங்களைக் கொண்டு சிற்பக் கூடமாக காட்சியளிக்கும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் தாராசுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது ஐராவதேஸ்வரர் கோவில். கிபி 12-ம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜராஜ சோழனால் முழுக்க முழுக்க கருங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்ட சிவன் கோயில் தான் இந்த ஐராவதேஸ்வரர் கோவில்.

இந்தக் கோவிலின் நுழைவு வாயிலில் மூன்று மொழிகளில் கோவிலின் வரலாறு தொல்லியல் துறையால் பொறிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இங்குள்ள சிற்ப கலைகளை அறிந்து கொள்வதற்காக வெளிநாட்டினர் பலரும் இக்கோவிலுக்கு வருகை தருவதால் அவர்களும் வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமாக இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேர் வடிவ திருக்கோவில்:

ஐராவதேஸ்வரர் கோவில் தேர் போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் முன்புறத்தில் உள்ள மண்டபம் தேரினை இழுத்துச் செல்வது போல கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. தேரின் இரு புறமும் யானைகளும் குதிரைகளும் சக்கரம் பூட்டப்பட்டு தேரினை இழுத்துச் செல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

108 தூண்கள்:

இக்கோவிலில் உள்ள ராஜ கம்பீரன் திருமண மண்டபத்தில் அமைந்துள்ள 108 தூண்களில் ஏராளமான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நுண்ணிய சிற்பங்கள் ஆகும். சுண்டு விரல் அளவுக்கு அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளும் லட்சுமி, சரஸ்வதி என தெய்வங்களின் சிலைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள 108 தூண்களிலும் 63 நாயன்மார்களின் வரலாறு சிற்பமாக பொறிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தாண்டி மண்டபத்தின் மேற்கூறையிலும் ஏராளமான சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சிற்பங்களை எல்லாம் கணக்கிட்டால் அதன் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50,000 யிரத்தைத் தாண்டும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த மண்டபத்தில் பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தில் உள்ள முத்திரைகளை விளக்கும் வகையிலும் சிற்பங்கள் வடிக்கப்பட்டு உள்ளன.

கருவறையும் சாளரமும்:

ஐந்து விமானங்களுடன் 80 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இதன் கருவறையின் இருபுறமும் துவார பாலகர்கள் வீற்றிருக்க மையப்பகுதியில் சிவபெருமான் காட்சியளிக்கிறார். இதற்கு அருகில் தாயார் பெரிய நாயகிக்கென்று தனியாக சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று கருங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களில் பல்வேறு வடிவங்களில் கற்களை குடைந்து சாளரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சுத்தமான காற்றோட்டத்திற்கும், ஆபத்துக் காலங்களில் எதிரிகளை கண்டறிவதற்கும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தனித்துவமான சிற்பங்கள்:

தானங்களில் சிறந்த தானமான அன்னதானத்தை வெளிப்படுத்தும் வகையில் காசியில் அன்னபூரணிக்கு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தாற் போல் இந்த கோவிலில் அன்னபூரணிக்கு என்று தனியாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புல்லாங்குழலோடு அமர்ந்திருக்கும் சிவபெருமான், வீணை இல்லாத சரஸ்வதி என பல தனித்துவமான சிற்பங்களும் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.

இசை படிக்கட்டுகளும் இலக்கியச் செறிவும்:

பொதுவாக இசைத்தூண்கள் பல்வேறு கோவில்களில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவிலில் ஏழு ஸ்வரங்களை போற்றும் வகையில் இசை படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் வாழ்ந்த ஒட்டக்கூத்தர் என்ற புலவர் தான் எழுதிய தக்கையாகப் பரணி என்ற நூலை இந்த கோவில் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் செய்ததாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

மேலும் இந்த கோவிலின் மேற்கூரையில் 108 சிவனடியார்களின் உருவங்கள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவில் முழுக்க முழுக்க தமிழர்களின் கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்ட கோவிலாகும். கோவிலில் அதிகமாக தமிழ் மொழியில் கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. திரும்பும் திசையெல்லாம் சிற்பங்களால் நிறைந்த இக்கோவிலின் மேன்மையை போற்றியே யுனஸ்கோ இக்கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

கட்டிடக்கலையை முழுமையாக அறிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு தாராளமாக சென்று வரலாம்!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT