Madura, South India... 
தீபம்

தென்னிந்தியாவின் மதுரா என அழைக்கப்படும் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

கிருஷ்ணரை வழிபடுபவர்களுக்கும், அவன் கோவில் கொண்டிருக்கும் தலங்களை தரிசிப்பவர்களுக்கும் நிறைவான ஞானமும், வாழ்வில் யோகங்களும் கிடைக்கும்.

கர்நாடக மாநிலத்தில் உள்ளது உடுப்பி திருத்தலம். இங்கு அருள்புரியும் கிருஷ்ணர் விக்ரஹம் ருக்மணியால் பூஜிக்கப்பட்ட சாளக்கிராமத்தாலான திருமேனி என்ற சிறப்பு பெற்றது.  கண்ணனின் குழந்தை வடிவத்தை காணவேண்டும் என்று ருக்மணி ஆசைப்பட அதற்காக விஸ்வகர்மா உருவாக்கிய விக்ரஹம்தான் இது என்று கூறப்படுகிறது. 

வலது கையில் தயிர் மத்தும், இடது கையில் வெண்ணையும் வைத்த நிலையில் பாலகிருஷ்ணராக காட்சி தரும் கிருஷ்ணரை ருக்மணிக்கு பின் பாண்டவர்களுள் ஒருவரான அர்ஜுனன் இவரை பூஜித்தார்.  இவருக்கு பின் இந்த விக்கிரகம் கோபி சந்தனத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. துவாரகை கடலில் மூழ்கியபோது, மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்கு கிடைத்து மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட கிருஷ்ணர்தான் இந்த உடுப்பி கோவில் ஸ்ரீகிருஷ்ணர்.

கோவிலின் கிழக்கே மத்வாச்சாரியார் உண்டாக்கிய "மத்வ புஷ்கரிணி" என்ற தீர்த்தக் குளம் உள்ளது. இங்குள்ள மத்வ தீர்த்தத்தின் பெயரைச் சொன்னாலே பெரும் புண்ணியம் கிடைக்கும்.  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இங்கு சிறுவனாக பாலகிருஷ்ணனாக காட்சியளிக்கிறார். உடுப்பி "தென்னிந்தியாவின் மதுரா" என்று அழைக்கப்படுகிறது.

பெயர் காரணம்:

'உடு' என்றால் சந்திரன் 'பா' என்றால் அதிபதி (தலைவன்). உடுபா என்பதே உடுப்பியானது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட தோஷத்திற்காக சாப விமோசனம் பெரும் பொருட்டு 27 நட்சத்திரங்களுடன் சேர்ந்து கிருஷ்ணரை வழிபட்டு சாபம் நீங்க பெற்றான். எனவே இங்குள்ள கிருஷ்ணர் நட்சத்திரங்களின் தலைவனாகவும் கிரகங்களின் நாயகனாகவும் போற்றப்படுகிறார்.

ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ள இக்கோவிலில் கிருஷ்ணர் மேற்கு பார்த்து அருளுகிறார். இவரை தரிசிக்க பக்தர்கள் தெற்கு பார்த்த வாசல் வழியாக செல்கின்றனர். இக்கோவிலில் விடியற்காலை 4:30 மணிக்கு நடத்தப்படும் "நிர்மால்ய பூஜை" மிகவும் சிறப்பு வாய்ந்தது.

உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோவிலின் சிறப்பு அம்சங்கள்:

கனகனா கிண்டி:

ஒரு சிறிய ஜன்னல் வழியாக கிருஷ்ணர் தனது பக்தரான கனகதாசருக்கு தரிசனம் அளித்தருளினார். கனகதாசர் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அக்காலத்தில் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க வில்லை. கோவிலின் பின்புறம் உள்ள விரிசல் விழுந்த சுவர் வழியாக இறைவனை தரிசிக்க ஸ்ரீ கிருஷ்ணர் திரும்பி அவருக்காக தரிசனம் அளித்தார்.

மூலஸ்தானத்தின் கிழக்கு கதவு பூட்டியே இருக்கும். விஜயதசமி போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே கதவு திறக்கப்படுகிறது. இதன் அருகே உள்ள மற்றொரு வாசல் வழியாகத்தான் பூஜை செய்யும் மடாதிபதிகள் செல்கின்றனர்.

ஸ்ரீ கிருஷ்ணரை ஒன்பது துவாரங்கள் உள்ள பலகணி வழியாகத்தான் தரிசிக்க முடியும். வெள்ளியால் ஆன இந்த துவாரத்தை "நவகிரக துவாரம்" என்று அழைக்கின்றனர். இதில் கிருஷ்ணரின் 24 வகையான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

மத்வாச்சாரியார் தனக்குப்பின் கிருஷ்ணருக்கு பூஜை செய்ய 8 மடங்களை ஸ்தாபித்தார். இந்த மடத்தை சேர்ந்தவர்கள்தான் கிருஷ்ணருக்கு பூஜை செய்து வருகின்றனர்.

பர்யாய வைபவம்:

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் ஒரு பிரபலமான திருவிழாவாகும். உடுப்பியின் எட்டு மடங்களில் கோயில் நிர்வாகத்தை ஒரு மடத்திலிருந்து மற்றொரு மடத்திற்கு ஒப்படைப்பதை அதாவது புதிய சுவாமி மடத்தின் பொறுப்பை ஏற்கும் விழா "பர்யாய வைபவம்" எனப்படுகிறது. 

இவ்விழாவின்போது விறகுத்தேர் அமைக்கப்படுகின்றது. இத்தேர் விறகு தான் கோவில் சமையலுக்கு பயன் படுகின்றது. இங்கு பூஜைக்கு தேவைப்படும் 4 டன் சந்தனத்தை ஆண்டுதோறும் கர்நாடக அரசு கொடுத்து வருகிறது.

இங்கு நேர்த்திக்கடனாக துலாபாரம், கோதானம், ரத உற்சவம் போன்றவை செய்யப்படுகிறது. உடுப்பி கிருஷ்ணரை திருமணத்தடை, குழந்தை பாக்கியம், பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க பிரார்த்திக்க பலன் உண்டாகும்.

நவராத்திரியில் பெண் தெய்வங்களை ஏன் வழிபடுகிறோம் தெரியுமா?

குவா குவா வாத்துகள்... சுவாரஸ்ய குறிப்புகள்!

வாழ்வியல் தத்துவத்தை உணர்த்தும் மகிஷாசுர வதம்!

மதுரை ஸ்பெஷல் பால்பன்னும், பட்டணம் பக்கோடாவும் செய்யலாம் வாங்க!

வாழ்வின் எதார்த்தம் கூறும் அயல்நாட்டு பழமொழிகள்..!

SCROLL FOR NEXT