தீபம்

ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்!

கவிதா பாலாஜிகணேஷ்

வைகுண்ட ஏகாதசி என்று கூறியவுடன் நம் நினைவுக்கு வருவது விரதம் இருப்பதும் பெருமாளின் திருநாமத்தை கூறிக்கொண்டு கண்விழிப்பதும்தான். ஆனால். நம் வாழ்க்கையில் ஏகாதசி விரதம் மேற்கொண்டால் என்னென்ன சிறப்புகள் கிடைக்கும் என்பதைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரை இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்தராயணம் என்றும், லோகத்தின் இரவை தட்சிணாயணம் என்றும் அழைப்பார்கள். இதை நோக்கும்போது மார்கழி மாதம், தேவலோகத்தில் விடியற்காலையாகும். அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் என்கிறோம். மார்கழி மாதம் தேவர்களின் உஷத்காலம் எனப்படும் அதிகாலை நேரமாக இருப்பதால் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பதால் பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாள் வைகுண்ட ஏகாதசி. வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை, ’மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பர்.

விரத முறை: பூஜைக்கான துளசியை முதல் நாளே பறித்து விட வேண்டும். ஏகாதசி விரதத்தின்போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமியில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். மறுநாள் ஏகாதசியன்று முழுமையாக சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். இரவில் கண் விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், பெருமாளின் பாடல்களை ஓதுவதுமாக பொழுது போக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று காலையில் 21 வகை காய்கறிகள் உணவில் இடம் பெற வேண்டும். இதில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும். துவாதசியில் அதிகாலையில் உணவு சாப்பிட்ட பிறகு, அன்று பகலிலும் உறங்கக் கூடாது.

ஏகாதசி விரத மகிமை: ஒருமுறை பார்வதி தேவி, “மிகச்சிறந்த விரதம் எது?” என பரமேஸ்வரனிடம் கேட்டாள்.  அதற்கு ஈசன், “தேவி! ஏகாதசி விரதமே விரதங்களில் சிறந்தது. இவ்விரதம் பாவங்களைப் போக்கும் விரதமாகும். இவ்விரத்தை அனுஷ்டிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த விரதத்தை அனுசரித்து, விஷ்ணுவின் அருளைப் பெறுவதால் இந்த விரதத்துக்கு, ’வைகுண்ட முக்கோடி ஏகாதசி’ என்ற சிறப்புப் பெயருண்டு. ஏகாதசி நாளில் உணவு இல்லாமல் உபவாசம் இருப்பவர், எல்லாப் பாவங்களில் இருந்தும் முக்தி பெற்று மோட்சம் கதியை பெறுவர்” என்றார்.

வைகுண்ட ஏகாதசி அன்று அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படும். இந்த விழா அதிகாலை வேளையில் நடைபெறும். இதில் மக்கள் பலரும் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து சொர்க்க வாசல் வழியாக வெளியே வருவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் நீங்குவார்கள். மேலும், முக்திக்கான வழியை அடைவீர்கள். ஏகாதசி விரதமிருப்பவர்கள் சகல சௌபாக்கியங்களையும் பெறுவர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இந்த விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. வரும் புத்தாண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி விரதம் அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

SCROLL FOR NEXT