Vinayagar Chaturthi 
தீபம்

07-09-2024 - விநாயகர் சதுர்த்தி – திலகரின் ஆன்மிகப் புரட்சி - நெற்றிக்கண் கொண்ட மும்பை சித்தி விநாயக்!

பிரபு சங்கர்

விநாயகர் சதுர்த்திக்கு பத்து நாட்களுக்கு முன்னாலேயே ‘கணபதி பாப்பா மோரியா‘ என்ற உற்சாகக் குரல் மகாராஷ்டிர மாநிலத்தில் ஒலிக்கக் கேட்கலாம். இதற்கு முக்கிய காரணமானவர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான பால கங்காதர திலகர்தான்.

மக்களிடையே சுதந்திர வேட்கையை வளர்க்க வேண்டும் என்ற வைராக்கியத்தில், அதுவரை ஒவ்வொரு வீட்டின் தனி பூஜையாக விளங்கி வந்த விநாயகர் சதுர்த்தியை சமுதாயப் பண்டிகையாகக் கொண்டு வந்தவர் அவர். இந்தக் கொண்டாட்டத்தில் சாதி, இனம், மதம் எதுவும் குறுக்கே நிற்காது. அதாவது ஆன்மிக உணர்வு கொண்டவர்களால்தான் தேசிய உணர்வும் கொள்ள முடியும் என்ற அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடுதான் அது. 1897 வாக்கிலேயே இப்படி ஆன்மிகத்தை மாநிலம் முழுவதுக்கும் பொதுவாக்கினார் அவர்.

Shree Siddhivinayak of Mumbai

மகாராஷ்டிர மாநிலத்தின் பிரதானமான இந்த விழாவில் மும்பை முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கே ‘சித்தி விநாயகர்‘தான் ஹீரோ. பெயர்தான் சித்தி விநாயகரே தவிர, இவர் சித்தி – புத்தி ஆகிய இரு மனைவியருடன் தரிசனம் அருள்கிறார். மும்பை, தாதருக்கு அருகே உள்ள பிரபாதேவி பகுதியில் கோயில் கொண்டிருக்கிறார் இவர். இங்கே ‘புத்தி‘யை ‘ரித்தி‘ என்று அழைக்கிறார்கள்.

பெரும்பாலும், மும்பைவாசிகள் அனைவருமே கொண்டாடும் விநாயகர் இவர். சாதி, இனம், மதம், ஏழை, பணக்காரர் என்ற எந்தப் பாகுபாடும் இன்றி, அனைவரும் ஒன்றுபட்ட மனத்துடன் இவரை வணங்குவதை நாள்தோறும் பார்க்கலாம். ஆமாம், விநாயக சதுர்த்தி விழா சமயத்தில் மட்டும்தான் என்றில்லாமல், இந்தக் கோயிலில் அனைத்து நாட்களிலும் இந்த சமத்துவம் கடைபிடிக்கப்படுகிறது. 

இருநூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்தவர் இந்த விநாயகர். 1801ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி வியாழக்கிழமை இவருக்கு முதன் முதலாக இங்கே ஒரு கோயில் அமைந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், முழுமையான கோயிலாக உருப்பெற்றது 1901ம் ஆண்டில்தான். 

ஞானம் (சித்தி), கிரியை (புத்தி) என இரு சக்திகளையும் உடனிருத்திக் கொண்டு அருள்பாலிக்கும் இந்த விநாயகர் எல்லா பக்தர்களுக்கும் எல்லா வளங்களையும், நலன்களையும் அள்ளி அள்ளி வழங்குகிறார். குறிப்பாக குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இவரைப் பிரார்த்தித்துக் கொண்டால், விரைவில் அந்த பாக்கியத்தை அவர்கள் அடைகிறார்கள்.

இந்த விநாயகர் கோயிலைப் புனரமைப்பதில் தியு பாய் பாடீல் என்ற பெண்மணி பிரதானமானவராக விளங்கினார். மாதுங்கா பகுதியில் வசித்து வந்த இவர், மக்கட் செல்வம் அருளும் இந்த விநாயகரை பலரும் தரிசித்து நன்மையடைய வேண்டும் என்று விரும்பினார்.

ஆகவே, கட்டட காண்டிராக்டரும், தன் கணவருமான லக்ஷ்மண் விது பாடீல் உதவியுடன் அரியதோர் கோயிலை உருவாக்கினார். இத்தனைக்கும் தியு பாய் பாடீலுக்கு மழலைச் செல்வம் கிட்டவில்லை! ஆனால் தனக்குக் கிடைக்காமல் போனாலும், அந்த பாக்யத்துக்காகக் காத்திருக்கும் பல பெண்களின் ஏக்கம் தீர வேண்டும் என்பதற்காக அந்தக் கோயிலை முழுமனதுடன் பூரணமாக நிர்மாணித்தார்.

சித்தி விநாயகர் கோயில் கருவறை மூன்று வாசல்களைக் கொண்டது. மூலவரான இவருக்கு நான்கு கரங்கள். வலது மேல் கரத்தில் தாமரை, இடது மேல் கரத்தில் அங்குசம், வலது கீழ் கரத்தில் அக்க மாலை, இடது கீழ் கரத்தில் கொழுக்கட்டை என்று தாங்கியிருக்கிறார். இருவிழி கருணை இத்தனை பக்தர்களுக்குப் போதுமா என்று கருதினார் போலிருக்கிறது, இவரது நெற்றியிலும் ஒரு கண் அமைந்திருக்கிறது – சிவபெருமான் அம்சமாக! அபூர்வமான வலம்புரி விநாயகர் இவர் – தும்பிக்கை வலது பக்கமாகத் திரும்பியிருக்கிறது. மார்பின் குறுக்கே பாம்பு பூணூல்.

செவ்வாய்க்கிழமை இந்த சித்தி விநாயகருக்கு மிகவும் உகந்த நாள். அன்று லட்சக்கணக்கில் பக்தர்கள் குழுமுகிறார்கள். சங்கடஹர சதுர்த்தி, செவ்வாய்க் கிழமை அன்றே அமையுமானால், அன்று பக்தர்களின் எண்ணிக்கை மேலும் கூடும். ‘சங்கஷ்டி‘, ‘அங்காரிகை‘ என்றும் இந்நாளைக் கொண்டாடுகிறார்கள். 

‘பிள்ளையாரில் ஆரம்பித்து ஆஞ்சநேயரில் முடிப்பது‘ என்று சொல்வார்கள். அதற்கிணங்க, இந்தக் கோயிலில் அனுமனுக்கும் தனி சந்நிதி உள்ளது. இவருக்கு சனிக்கிழமை விசேஷமான நாள். 

மகாராஷ்டிர மக்களின் ஏகோபித்த கடவுளாக விளங்குகிறார் இந்த சித்தி விநாயகர்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT