ஒரு நாள் நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. ஆபீஸ் வேலை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சுப்பு ஒரு நாய் குட்டி கத்தும் சத்தம் கேட்டு அருகில் சென்றார். அது மழையில் நன்கு நனைந்து குளிர் தாங்காமல் கத்திக் கொண்டிருந்தது. பரிதாபப்பட்டவர் அதனை வீட்டிற்கு எடுத்து வந்தார். புசுபுசுவென்று பார்ப்பதற்கு அழகாக இருந்த அந்த குட்டிக்கு அப்பு என்று பெயர் வைத்து, வளர்க்க ஆசைப்பட்டு அதற்கு தினமும் பால், பிஸ்கட், உணவுகள் கொடுத்து வந்தார்.
குட்டி அப்பு ரொம்ப அழகு. புசுபுசுவென்று வெள்ளை முடியுடன், அழகான கண்கள், குட்டிக் காதுகள், வளைந்த நீண்ட வால் என அழகாக இருக்கும் அப்புவை யார் தொட்டாலும் அதற்கு பிடிக்காது. சுப்புவின் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள், நண்பர்கள் ஆசையாக அதைத் தூக்க வந்தால் விரட்டி விரட்டி கடிக்கச் செல்லும்.
தினமும் அலுவலகத்திலிருந்து வந்ததும் அதனுடன் பாசமாக விளையாடிக் கொஞ்சி மகிழ ஓடிவந்தால் அவர் கொடுக்கும் பிஸ்கட்டுகளை கவ்விக் கொண்டு பிடிப்படாமல் ஓடிவிடும்.
நாட்கள் செல்ல செல்ல அப்பு வளர ஆரம்பித்தது. முன்பு ஓரளவிற்கு சாதுவாக இருந்த அப்புவின் குணாதிசயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. முரட்டுத்தனத்துடன் நடந்து கொண்டது. யாரைப் பார்த்தாலும் பின்னால் விரட்டிச் சென்று கடிக்க ஆரம்பித்தது. இதனால் அப்புவைக் கண்டால் எல்லோரும் ஒதுங்கிச் சென்றார்கள். யாரேனும் ஆசையுடன் தூக்க நெருங்கினால் உர்ரென்று உறுமிக் கொண்டு ஓடிப்போய் சோஃபாவில் சொகுசாக சாய்ந்து கொள்ளும்.
அதனை வளர்க்கும் சுப்பு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அது தன் முரட்டுத்தனத்தை விடவில்லை. இதனால் சுப்பு அதனுடன் விளையாட ஆசைப் படுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டார். எஜமானர் தன்னைத் தேடி வராமல் ஒதுங்கிச் செல்வதை கண்டு எஜமானரின் பாசம் கிடைக்காமல் போய்விட்டதே என்று மனம் கலங்கிய அப்பு ஒருநாள் வீட்டை விட்டு கால் போன போக்கில் சென்றது.
நடந்து நடந்து ஒரு பெரிய கிராமத்தை வந்தடைந்தது. பசியால் வாடிய அப்பு ஒரு வீட்டின் முன் நின்று தனக்கு உணவு வேண்டுமென்று கேட்டது. ஆனால் வீட்டில் உள்ளவர்களோ உணவு கொடுக்காததுடன் அதனை அடித்தும் விரட்டினர்.
அப்பொழுதுதான் அதற்கு தன் எஜமானன் சுப்புவின் நல்ல குணம் புரிந்தது. மழையில் நனைந்து கதறிக் கொண்டிருந்த தன்னை வீட்டிற்கு அழைத்து வந்து சொகுசாக வளர்த்தவரை நாம் ரொம்பவே தொல்லை கொடுத்து விட்டோம். ஆசையுடன் விளையாட வருபவர்களை கடித்து துன்புறுத்தினோம். நம் தொல்லைக்கு பயந்து எஜமானர் வீட்டுக்கு யாரும் வராமல் போனார்கள் என்று மனம் வருந்திய அப்பு குட்டிக்கு ஒரு உண்மை புரிந்தது. அழகு மட்டும் இருந்தால் போதாது, அன்புடன் பழகவும் வேண்டும் என்ற உண்மை புரிந்தது.
நேராகத் தன் எஜமானன் வீட்டிற்கு ஓடிச்சென்றது. அங்கு அவர் மடியில் போய் படுத்துக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்தது. அத்துடன் எஜமானன் வீட்டிற்கு வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் விளையாடி அன்பை பெற்றது. அதிலிருந்து யாரிடமும் வம்புக்கு போகாமல் பாசமாகப் பழகியது.