* கோட்டி (Coati) என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு.
* இந்த விலங்கு பல மணி நேரங்களை இரை தேடிச் செல்வதிலேயே செலவிடும்.
* இரவில் நடமாடும் ஊனுண்ணியான (Carnivore) ரக்கூன் குடும்பத்தைச் சேர்ந்த இந்த விலங்கு, புழுக்கள், பல்லிகள், சிலந்திகள், எலிகள், பழங்கள், பறவைகளின் முட்டைகள் என்று பல வகையான உணவு வகைகளை உண்ணும்.
* இந்தக் கோட்டிகளின் உடலும் வாலும் கொஞ்சம் நீளம். இதன் மூக்கு நீளமாக இருந்தாலும், வளைந்து கொடுக்கும் தன்மையுடையது.
* இதன் உடல் சுமார் 66 சென்டிமீட்டர் நீளம் என்றால், அதன் வால் இன்னொரு 66 சென்டிமீட்டர் நீளமுடையது.
* இது ஒரு வெப்பமண்டலப் பாலூட்டி இனமாகும். பொதுவாக, தென்மேற்கு அமெரிக்காவிலிருந்து வட அர்ஜென்டினா வரையுள்ள பகுதிகளில் காணப்படுகிறது.
* பெண் கோட்டிகள் கூட்டம் கூட்டமாகச் செல்லும். ஒவ்வொரு கூட்டத்திலும் சுமார் 20 கோட்டிகள் இருக்கும்.
* ஆண் கோட்டிகளோ தனிமையாகத் திரியும். இனப்பெருக்கக் காலத்தின்போது, ஓர் ஆண் கோட்டி பெண் கூட்டத்திற்குள் புகுந்து பெண் கோட்டிகளுடன் இணையும்.
* கருவுற்றக் கோட்டிகளெல்லாம் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, மரங்களில் கூடு கட்டக் கிளம்பிவிடும். ஒவ்வொரு பெண் கோட்டிக்கும் மூன்று அல்லது நான்கு குட்டிகள் வரை பிறக்கும்.
* குட்டிகளைப் பெற்று ஆறு வாரங்களுக்குப்பிறகு, அம்மா கோட்டிகள் குட்டிகளைக் கூட்டிக்கொண்டு பழையக் கூட்டத்துடன் சேர்ந்துகொள்ளும். புசுபுசுவென்று இருக்கும் இந்தக் குட்டிக் கோட்டிகள் பார்ப்பதற்குப் பந்து உருண்டு வருவதுபோல் காட்சியளிக்கும்.
* காடுகளில் உணவு தேடித் திரியும்போது இந்தக் கோட்டிகள் எப்போதும் மோப்பம் பிடித்துக்கொண்டும் மண்ணை தோண்டிக்கொண்டும் இருக்கும்.
* இதனால் விவசாயிகளுக்கு இவற்றால் மிகவும் இடையூறு நேரும். சோளக் காடுகளும் கோழிப் பண்ணைகளும் இவற்றினால் எளிதில் அழிக்கப்பட்டு விடும்.
* வேட்டைக்காரர்களையும் இவை எளிதில் ஏமாற்றிவிடும். இந்தத் தந்திரமான பிராணிகள் வேட்டைக்காரர்களைப் பார்த்தவுடன் மரப்பொந்துகளில் புகுந்துவிடும்.
* அப்படி முடியாவிட்டால் துப்பாக்கி சத்தம் அல்லது கை தட்டும் சத்தம் கேட்டவுடன் கீழே விழுந்து செத்து விட்டதுபோல் நடிக்கும். அதை எடுத்துச் செல்ல வேட்டைக்காரன் அருகில் வருவதற்குள் ஓடிவிடும்!