childrens image... Image credit - pixabay.com
கோகுலம் / Gokulam

குழந்தைகளின் தனித்திறமையை வளர்த்தெடுப்பது எப்படி?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

வ்வொரு குழந்தையுமே தனித்துவமான திறமைகள் கொண்டவர்கள்தான். அதில் அவர்கள் சிறந்து விளங்க முடியும். எப்பொழுதுமே ஒரு குழந்தையுடன் மற்றொரு குழந்தையை ஒப்பிடக் கூடாது. அவர்கள் தங்கள் சொந்த தனித்திறமையுடன் வளர்வதுதான் சிறந்தது. 

பெரும்பாலும் பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளின் திறன்களை அடையாளம் காணத் தவறிவிடுகிறோம். அவர்களுக்கு எதில் ஆர்வம் இல்லையோ அதனை நோக்கி அவர்களை தள்ளுகிறோம். நம் குழந்தைகளின் நலனில் நாம் அதிக அக்கறை கொள்ளவேண்டும். அவர்களுக்கு எது பிடித்தது என்பதை அறிந்து அந்த வழியில் அவர்களை சிறந்தவர்களாக ஆக்க முயற்சிக்கலாம். 

அவர்களை பந்தயக் குதிரை போல் விரட்டிக்கொண்டே இருக்கக் கூடாது. நம் குழந்தை ஒரு டாக்டராகவோ, பொறியாளராகவோ, வங்கி மேலாளராகவோ இருக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோமே தவிர அவர்களின் விருப்பத்தை நாம் தெரிந்து கொள்வதில்லை.

நம் விருப்பத்தை அவர்கள் மீது திணிக்காமல் அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்களோ, எதில் ஆற்றல் மிகுந்தவர்களாக இருக்கின்றார்களோ அதனை அறிந்து அவர்களின் திறன்களை அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் போக்கை  உன்னிப்பாக கவனித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொணர உதவ வேண்டும். 

சில குழந்தைகள் பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். சிலர் இசைக்கருவிகளை இசைப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். சிலருக்கு விளையாட்டில் அதிக ஆர்வம்  இருக்கும். அவர்களை அந்தந்த துறையில் பயிற்சி கொடுத்து வளர்க்கலாம். 

இளம் வயதிலேயே அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அதற்கான நேரமும், வாய்ப்பும் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.

திறமைகளைக் கண்டறிந்து...

அதைவிட முக்கியம் முதலில் குழந்தைகளுக்கு அவர்களின் விருப்பு வெறுப்புகளையும், எதில் ஆர்வம் அதிகம் உள்ளது என்பதை பற்றியும் அவர்கள் உணர்ந்து வெளிப்படுத்த பெற்றோராகிய நாம் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் எதிர்காலத்தில் நன்கு பிரகாசிக்க முடியும். 

பெற்றோர்கள் முதலில் குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். அவர்கள் செய்யும் சிறு சிறு செயல்களையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட உந்துதலாக இருக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் ஓய்வு நேரத்தை டிவி பார்க்கவோ, வீடியோ கேம் விளையாடவோ செலவழிப்பதை விட அவர்களை ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வைக்கலாம். 

உங்கள் பிள்ளைக்கு இசையில் ஆர்வம் இருந்தால் இசைக்கருவியை இசைக்கவும், பாட்டு படிக்கவும்,  விளையாட்டில் ஆர்வம் இருந்தால் அதற்கான வகுப்பில் சேர்த்து விட்டும் அவர்களின் பொழுதுபோக்குகளை ஆக்கப்பூர்வமாக அவர்களின் திறனை வளர்க்கும் வழியாக சிந்தித்து அவர்களை அதில் ஈடுபடுத்த வேண்டும். 

அதேபோல் படிப்பில் அவர்கள் விரும்பியதை படிக்க அனுமதிக்கலாம். அவர்களின் பலத்தை அறிந்து அதில் அவர்கள் பின் தொடர ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கலாம். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்போதும் விமர்சனம் செய்து கொண்டே இருப்பார்கள். குழந்தை களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் விமர்சனம் என்பது கடுமையானதாகவோ, அவர்களின் ஊக்கத்தை குறைப்பதாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  இல்லையெனில் அவர்கள் தங்கள் மேல் நம்பிக்கை அற்றவர்களாக இது நம்மால் முடியாது, இது நமக்கு சரி படாது என்று எண்ணி ஒதுங்கி விடுவார்கள். 

எனவே குழந்தைகளின் ஆர்வங்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் அவர்களை அதிகம் விமர்சிக்காமல் இருப்பதும் நல்லது.  நம் குழந்தைகள் அவர்களின் முழு திறனையும் வெளிப்படுத்த வேண்டுமானால் அவர்களைப் புரிந்து கொண்டு அதிகம் கட்டாயப்படுத்தாமல் அவர்கள் போக்கில் விடுவதே சிறந்தது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT