- அழ. வள்ளியப்பா
மாலையில் ஒருநாள் நேருவை வீட்டில்
காணோம், காணோமே!
மாளிகை முழுதும் தேடிப் பார்த்தும்
காணோம், காணோமே!
சோலைகள் எங்கும் சுற்றிப் பார்த்தும்
காணோம், காணோமே!
சுறுசுறுப் பாகத் தேடிப் பார்த்தும்
நேருவைக் காணோமே!
காவலர் எங்கும் தேடிப் பார்த்தும்
காணோம், காணோமே!
கலக்கினர் டில்லி நகரம் முழுவதும்
காணோம், காணோமே!
தீவிர மாகப் பற்பலர் தேடியும்
காணோம், காணோமே!
தெரிந்தவர்க் கெல்லாம் டெலிபோன் செய்தும்
நேருவைக் காணோமே!
எந்த நிகழ்ச்சியும் அந்தச் சமயம்
இல்லை. ஆதலினால்,
'எங்கே சென்றார்? எங்கே சென்றார்?
என்றே கேட்டனரே.
வந்தவர் போனவர் காதில் இந்தச்
செய்தி விழுந்திடவே,
மாநகர் எங்கும் காட்டுத் தீபோல்
பரவிட லானதுவே!
காவலர் பலரும் நகரம் முழுவதும்
தேடிப் பார்த்திடவே
கடைசியில் நேருவைக் கண்டு பிடித்தனர்
கண்டு பிடித்தனரே!
ஆவல் பொங்கப் பூங்கா ஒன்றில்
குழந்தைகள் மத்தியிலே
அடடா, நேரு இருந்தது கண்டு
அசந்தே போயினரே!
குழந்தைகள் அந்தப் பூங்கா நடுவில்
கூடிப் பாடிடவே,
குஷியாய் நேருவும் குழந்தை போலவே
ஆடிப் பாடினரே.
மழலை மொழியைக் கேட்டுக் கேட்டு
மகிழ்ச்சியில் மூழ்கினரே.
மறந்தனர் இந்த உலகம் யாவையும்
மறந்தே போயினரே!
கோடை வெய்யிலைப் போன்றது அரசியல்
உலகம் என்றாலோ
குளுகுளு தென்றல் காற்றைப் போன்றது.
குழந்தைகள் உலகம்தான்!
தேடியேவந்தார் குழந்தைகள் உலகைத்
திருட்டுத் தனமாக!
தெரிந்தது நேருவின் குழந்தை உள்ளம்
தெள்ளத் தெளிவாக!
(திரு கே.என்.மேனன் அவர்கள் எழுதியுள்ள ‘சில்ட்ரன்ஸ் நேரு’ என்ற புத்தகத்தில் 1957 மே மாதம் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைச் சம்பவம்)
நன்றி : கல்கி