Poison Dart Frog and Talipot Palm 
கோகுலம் / Gokulam

நச்சு அம்புத் தவளைகள் (Poison Dart Frog) பெயர் காரணம் தெரியுமா? - Talipot Palm என்பது என்ன?

தேனி மு.சுப்பிரமணி

நச்சு அம்புத் தவளைகள் (Poison Dart Frog)

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் இருக்கும் 2.5 அங்குல நீளமுள்ள ஒரு வகையான தவளைகள், நச்சு அம்புத் தவளைகள் (Poison Dart Frog) எனப்படுகின்றன. இதன் அறிவியல் பெயர் Bilateria என்பதாகும். கரையான்கள், எறும்பு, பூச்சிகளை உணவாகப் பெறும் இத்தவளைகள் நீர் நில வாழ்வன வகுப்பையும், முதுகுநாணி தொகுப்பு விலங்குகளின் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

170-க்கும் அதிகமான தவளை இனங்களில் 13 தவளை இனங்கள் விசத்தன்மையுடையதாக இருக்கின்றன. அவற்றுள் 4 தவளை இனங்கள் மிகுந்த விசத்தன்மை கொண்டவை. அவற்றில் ஒன்றாக, இந்த நச்சு அம்புத் தவளைகள் இருக்கின்றன.

கண்கவரும் ஒளிமயமான நிறங்களில் காணப்படும் இத்தவளைகளின் முதுகுப் பகுதியில் ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய விஷம் சுரக்கின்றது. இந்த விசத்தை எதிரிகளைத் தாக்கப் பயன்படுத்துகிறது. இத்தவளை சுரக்கின்ற விஷம் கிட்டத்தட்ட 10 மனிதர்களையோ அல்லது 20 ஆயிரத்துக்கும் அதிகமான எலிகளையோக் கொல்லக்கூடியதாக இருக்கின்றன.

முந்தையக் காலத்தில் இத்தவளைகளின் மேல் தோலில் அம்புகளைத் தடவி வேட்டையாடப் பயன்படுத்தினர். அதனால், இந்தத் தவளைகளை நச்சு அம்புத் தவளைகள் என்று அழைக்கின்றனர்.

பாம்புகளின் முக்கிய உணவாக தவளை இருந்தாலும், இவ்வகை நச்சுத் தவளைகளைக் கண்டால் பாம்புகள் ஒதுங்கிப் போய்விடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தாளியா? தாலியா? விசிறியா? குடையா? காலியா?

உலகிலிருக்கும் பனைமர வகைகளில், தாளிப் பனை (Talipot Palm) மிகவும் பெரியது என்று சொல்லலாம். கேரளாவிலுள்ள மலபார் கடற்கரை மற்றும் இலங்கையில் அதிகமாகவும், தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டும் காணப்படும் இப்பனை மரம், நன்றாக வளர்ந்த நிலையில் 25 மீ உயரமும், 1.3 மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இது ஒரு விசிறி வகைப் பனையாகும். இதன் இலைகள் 5 மீட்டர் விட்டமும், கிட்டத்தட்ட 130 சிற்றிலைகளையும் கொண்டிருக்கும்.

இப்பனை மரங்கள் ஒரு முறை மட்டுமே பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தவை என்பதால் 30 முதல் 80 ஆண்டுகள் வயதான பின்பே பூக்கின்றன. இப்பூக்கள் 6 முதல் 8 மீ உயரத்தில் பல்லாயிரக்கணக்கான தனி மலர்களைக் கொண்டிருக்கும். அதன் பிறகு, இம்மரம் காய்ப்பதற்கு ஓராண்டு காலம் வரை ஆகும். அந்தக் காய்கள், சிறு சிறு ஒற்றை விதை கொண்ட பழங்களான பின்பு, இம்மரம் பட்டுப் போய்விடுகின்றன.

இந்தப் பனையினை தாளிப் பனை என்று எழுதுவதேச் சரியானது என்றும், தாலிப் பனை என்று எழுதுவதேச் சரியானது என்றும் இரு வேறு கருத்துகள் இருக்கின்றன.

குழந்தைகளின் விளையாட்டுப் பாடல் ஒன்றிலும், திவாகர நிகண்டு பாடல் ஒன்றிலும் இதனை தாளிப் பனை என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் 'தாளிப் பனை' என்று சொல்வதே சரியானது என்று சிலர் சொல்கின்றனர்.

முந்தையக் காலத் திருமணத்தில் மணமகன் வீட்டுச் சிறப்புகளை (குலச் சிறப்புகளை) தாலம் எனப்படும் இப்பனை ஓலைகளில் எழுதிச் சுருட்டி, மணமகளின் கழுத்தில் தாலியாக, மணமகன் அணிவிக்கும் நடைமுறை இருந்தது. எனவே, இதனை 'தாலிப் பனை' என்று சொல்வதேச் சரியானது என்று சிலர் சொல்கின்றனர்.

மன்னர்கள் காலத்தில், இந்தப் பனையின் மென்மையான ஓலைகளைக் கொண்டு ‘பங்கா’ எனும் விசிறிகளைச் செய்து பயன்படுத்தி வந்தனர். எனவே, இதனை ‘விசிறிப் பனை’ என்றும் சிலர் அழைக்கின்றனர்.

கேரளப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கும் வேளையில், இப்பனை ஓலைகளைக் கொண்டு குடை போன்ற தொப்பிகள் செய்து தலையில் அணிந்து கொண்டு விவசாயப் பணிகளைச் செய்து வந்தனர். எனவே, அவர்கள் 'குடைப் பனை' என்று அழைத்தனர்.

இப்பனைகள் ஒரு முறை மட்டுமேப் பூத்து, காய்த்துப் பழங்களைத் தந்தவுடன் அழிந்து போய் விடுகின்றன. பூத்துக் காய்த்தவுடன் காலியாகி விடுவதால், 'காலிப் பனை' என்றும் சிலர் அழைப்பதுண்டு.

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT