Bakery shop... 
கோகுலம் / Gokulam

சிறுகதை - நூறு ரூபா நோட்டு!

கல்கி டெஸ்க்

-பாரதிமணியன்

ந்த பேக்கரியில் கூட்டம் நிறைய இருந்தது. பேக்கரி கடைக்காரர் மிகவும் பரபரப்பாக பிசியாக இருந்தார்.

மகள் ரம்யா ஆசையாக கேட்டதால், அவளுக்கு ஒரு குளிர் பானமும், மனைவிக்கு பிடிக்குமே என்று இரண்டு பிஸ்கட் பாக்கெட்களும் வாங்கி கொண்டு …

"எவ்வளவு ஆச்சு" என்று மாணிக்கம் கேட்டான்.

பேக்கரி கடைக்காரர், மாணிக்கம் வாங்கிய பொருள்களின் விலையை கூட்டி பார்த்து விட்டு, "எழுபது ரூபா கொடுங்க" என்றார். மாணிக்கம் அப்போதுதான், அரிசி மண்டியில், அரிசி மூட்டைகளை இறக்கிய கூலியை வாங்கிக்கொண்டு வந்திருந்தான்.

அந்த மண்டியில் அரிசி மூட்டைகளை இறக்கி வைத்ததற்காக, அவனுக்கு சில புத்தம் புது நூறு ரூபாய் தாள்களை கூலியாக கொடுத்து இருந்தனர். அந்த ரூபாய் தாள்கள் மிகவும் விறைப்பாக மடமடவென்று இருந்தது.

அதில் ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து அவன் கொடுக்கும் பொழுது, இன்னொருவர் முந்திக்கொண்டு, அவரும் பணத்தை கொடுக்க குறுக்கே கையை நீட்டினார்.

அவருடைய மீதி சில்லறையை வாங்கிக் கொண்டு, அந்த மனிதர் நகரும் வரையிலும்... மாணிக்கம் பணத்துடன் கையை நீட்டிகொண்டே இருந்தான்.

ம்யா… அம்மா அப்பா இருவருக்குமே பிடித்தமான செல்ல மகள், ஆறாவது படிக்கிறாள். அன்று ரம்யா படிக்கும் பள்ளிக்கூடத்தில் நடந்த பெற்றோர் ஆசிரியர் சந்திப்பை முன்னிட்டு, மாணிக்கம் பள்ளிக்கு வந்து ஆசிரியரை சந்தித்து விட்டு, அவளை சைக்கிளில் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகிறான்.

வீட்டுக்கு போகும் வழியில், மகளை பேக்கரிக்கு கூட்டி வந்திருந்தான்.

"இந்தாங்க…. இந்த பணத்தை வாங்கிக்கங்க " என்று மாணிக்கம் குரல் கொடுக்க….

"ஸ்ஸ்… ப்பா, குடுங்க. இன்னக்கி வெயிலும் சாஸ்தி, கடையில கூட்டமும் அதிகமாக இருக்கு. கல்லாவையும் பார்த்துகிட்டு, பொருளையும் நானே கொடுக்கிறதால சட்டுனு கவனித்து காசு வாங்க முடியலை" என்று புலம்பியபடியே, அவர் மாணிக்கத்திடம் பணத்தை வாங்கி கல்லாவில் போட்டார்.

அவர் மீதி பணம் எடுப்பதற்குள், மீண்டும் ஒருவர் வந்து...

"அண்ணே, அந்த சிப்ஸ் பாக்கெட்ட எடுங்க” என்று அவசரமாக கேட்டார்.

"இருங்க …. இருங்க…. எடுத்து தரேன். ஒவ்வொருத்தரா தானே கவனிக்க முடியும்" என்று சலிப்போடு பேசியபடி, மாணிக்கம் கையில் மீதி பணத்தை திணித்தார்.

"ஸ்கூல் விடற நேரத்தில மட்டும் கடையில கூட்டம் அதிகம் ஆயிடுது. அப்புறம் காத்து வாங்குது. இல்லன்னா கூட இன்னொரு ஆளையாவது போட்டுக்கலாம்."

கடைக்காரர் முணுமுணுத்தபடி, சிப்ஸ் பாக்கெட்டை எடுக்க உள்ளே திரும்பினார்.

அப்போது, அவர் கொடுத்த மீதி பணத்தை பார்த்த மாணிக்கம், குழம்பி போய் நின்றான். அவன் கையில் நான்கு நூறு ரூபாய் தாள்களும், மூன்று பத்து ரூபாய் நோட்டுகளும் திணிக்கப்பட்டு இருந்தது. பேக்கரியில் கூட்டம் அதிகமாக இருந்ததால்…. மாணிக்கம் கொடுத்தது ஐநூறு ரூபாய் என்று நினைத்து அந்த பேக்கரி கடைக்காரர், எழுபது ரூபாய் போக, மீதி நானூற்றி முப்பது ரூபாயை அவனுக்கு கொடுத்திருந்தார்.

மாணிக்கம் எட்டாவது வரைதான் படித்து இருக்கிறான் என்றாலும் அனுபவ ரீதியில், பணம் கொடுக்கல் வாங்கலில் தெளிவாக தெரிந்து வைத்திருந்தான். அதனால் அவன் கையில் வாங்கிய பணத்தையும், பேக்கரி கடைக்காரரையும் மாறி மாறி பார்த்தான்.

‘பாவம் அவர். கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், கவனமில்லாமல் அதிக பணத்தை மீதியாக கொடுத்து விட்டார். எதிர்பாராமல் கிடைத்த இந்த பணம், அவனுடைய வீட்டு செலவுக்கு ரொம்பவும் உபயோகமாக இருக்கும்’ என்று மனதில் நினைத்தான்.

மாதாமாதம் கொடுக்க வேண்டிய வீட்டு வாடகை, வீட்டில் இருக்கிற மூன்று பேரும் இரண்டு வேளையாவது வயிறார சாப்பிட, குடித்தனம் நடத்த, ரம்யாவை படிக்க வைக்க என்று இப்படி ஆகுகின்ற அனைத்து செலவுகளையும் ….. அவனுக்கும், அவன் மனைவிக்கும் வருகிற வருமானத்தில் சமாளிப்பது மிகவும் சிரமாக இருக்கிறது.

‘இந்த நானூறு ரூபாய், அடுத்த மாதம் மகளோட பிறந்த நாளுக்கு துணி எடுப்பதற்கும் உபயோகப்படும்’ - இப்படி பல சிந்தனைகள் அவன் மனதில் ஓடின.

கையில் வாங்கிய பணத்தையே பார்த்துக்கொண்டிருந்த அப்பாவின் குழப்பமான முகத்தை, ரம்யா கவனித்தாள்.

'ஏன் இந்த அப்பா இப்படி யோசிக்கிறார் " என்று நினைத்தவள்,

"ஏம்பா? மீதி காசு வாங்கிட்டிங்க தானே.! வாங்க போலாம்" என்று அவன் கையை பிடித்து இழுத்தாள்.

"இரும்மா வரேன் "என்று மகளிடம் சொல்லி விட்டு,

"ஏங்க… மீதி பணம் சாஸ்தியா கொடுத்திட்டிங்க போல" என்று பேக்கரி கடைக்காரரிடம் தயக்கமாக சொன்னான்.

"ஓ…ஒ... அப்படியா! எங்கே காண்பிங்க ... " என்றவர், அவன் கையில் இருந்த பணத்தை கவனித்து பார்த்து விட்டு,

"ஐநூறு ரூபா கொடுத்தீங்க... எழுவது ரூபா போக மீதி சரியாத்தானே கொடுத்திருக்கேன்" என்று மீண்டும் சொன்னார்.

'அப்படிங்களா... அப்ப சரி ' என்று சொல்லிவிட்டு போய் விடலாம். நம்ம கை செலவுக்கு ஆகும்’ என்று மீண்டும் மாணிக்கத்துக்கு தோன்றினாலும்…. மனசு கேட்காமல்,

"இல்லீங்க… நான் நூறு ரூபா தான் கொடுத்தேன். அது கூட புது தாளா இருக்கும் பாருங்க" என்றான்.

கடைக்காரர், அவனை வியப்புடன் பார்த்து விட்டு ... அவருடைய கல்லாவை ஆராய்ந்தார். பிறகு, "சரி கொடுங்க..." என்று அவனிடமிருந்து நானூறு ரூபாயை திரும்ப வாங்கி கொண்டு, அவனை பார்த்து புன்னகைத்தார்.

அந்த பரபரப்பான வேலை மும்முரத்தில்… இறுக்கமாக இருந்த அவருடைய முகத்தில் அப்போதுதான் மலர்ச்சி தெரிந்தது.

பின்பு அவர் மீண்டும் கூட்டத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

நடந்ததை எல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த ரம்யாவுக்கு, அப்பாவை பார்த்து பெருமையாக இருந்தது.

‘அடுத்தவர் காசுக்கு ஆசை படக்கூடாது. உழைச்சு சாப்பிட்டாதான் உடம்பில ஓட்டும்’ என்று அவளிடம் சொல்லுகின்ற அப்பா, அவர் வாக்குபடியே நடந்து கொண்டதை பார்த்து சந்தோஷப்பட்டாள்.

கடையை விட்டு வெளியே வரும்போது அப்பாவை அவள் மகிழ்ச்சியோடு இறுக கட்டிக்கொண்டாள்.

"அப்பா… நீங்க ரொம்ப நல்லவங்க, நாம யாரையும் ஏமாத்தக்கூடாதுன்னு நெனைச்சு அந்த பணத்தை திருப்பி கொடுத்திட்டிங்கதானே… " என்று சந்தோசமாக அவள் சொல்ல… மகள் ரம்யாவை, மாணிக்கம் அதிர்ச்சியாக பார்த்தான்.

‘நல்ல வேளை! எனக்கு இருக்கும் பண கஷ்டத்துக்காக, அந்த பணத்தை திரும்ப கொடுக்காம விட்டிருந்தா... இப்படி மகள் பெருமை படற அப்பாவா இருக்கும் மகிழ்ச்சி எனக்கு கிடைத்திருக்காதே! பணத்தை எப்படியும் சம்பாரிக்கலாம்!. ஆனா இப்படி ஒரு நல்ல அப்பாங்கிற பெயரை சம்பாரிக்க முடியாதே ...’ என்று நினைத்த மாணிக்கம், மகளின் கன்னத்தில் குனிந்து முத்தமிட்டான்.

'பெற்றோர்கள் நடந்து கொள்வதை பார்த்துதான் குழந்தைகள் வளருது. பெற்றோர்கள், அவர்களுக்கு தவறான முன் உதாரணமாக இருந்தால் குழந்தைகளும் தவறான சிந்தனையோடு வளருவார்கள்’ என்கிற எண்ணம் அவனுக்குள் தோன்றியது.

முற்றும்.

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

SCROLL FOR NEXT