குழந்தைகள் சற்று வளர்ந்தவுடனே ஒரு நோட்டில் நாம் A போட்டுத்தந்து, அதை உடனே போட வேண்டும் என்று அவர்களிடம் சொல்வோமல்லவா? இனி அனைத்தையும் ஒரு திட்டத்துடன் சொல்லிக்கொடுப்போம்.
பொதுவாக குழந்தைகளுக்கு எடுத்தவுடனே ஒரு எழுத்தை கற்றுத்தருவது, அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக தோன்றும். அனைத்து விஷயங்களையும் ஆரம்பத்தில் சிரமமின்றி கற்றுத்தந்தால்தான் அவர்களுக்கு படிப்பைப் பார்த்து எந்த பயமும் ஏற்படாது.
ABCD மட்டுமல்ல தமிழ் எழுத்துக்கள் உட்பட அனைத்து மொழி எழுத்துக்களையும் எழுத கற்றுக்கொள்ள, இந்த ஸ்டெப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஸ்டெப் 1:
முதலில் ஒரு காகிதத்தைக் கொடுத்து கிறுக்க சொல்லுங்கள். தோன்றுவதையும் கைப் போகும் பக்கத்திலும் கிறுக்க சொல்லுங்கள்.
ஸ்டெப்: 2
ஒரு காகிதத்தில் வடிவம் ஒன்றை வரைந்துக் கொடுங்கள். அதாவது வட்டம், சதுரம் ஆகியவற்றிலிருந்து ஆரம்பித்து ஏதாவது பழம், மிருகம் வரை வரைந்துக் கொடுங்கள். அந்த வடிவத்திற்கு வெளியே வராமல் கிறுக்க சொல்லுங்கள்.
ஸ்டெப் 3:
அதேபோல் ஒரு காகிதத்தில் விதவிதமான கோடுகள் போடக் கற்றுத்தாருங்கள். அந்தக் கோடுகள் வளையாமல் நேராக போடும் வரை கோடு போடச் சொல்லுங்கள். இது எழுதுவதற்கு மட்டுமல்ல, வரும்காலத்தில் வரைவதற்கும் உதவியாக இருக்கும்.
ஸ்டெப் 4:
ஒரு காகிதத்தில் இரண்டுப் புள்ளிகள் வைத்துக்கொடுத்து, அதனை சரியாக இணைக்க கற்றுக்கொடுங்கள். சரியாக இணைக்கும் வரை புள்ளிகள் வைத்துக்கொடுங்கள்.
ஸ்டெப் 5:
இப்போது ஒரு உருவத்தின் வடிவில் புள்ளிகளை வைத்துக் கொடுத்து, அதனை இணைக்கச் சொல்லுங்கள். அது நீங்கள் வரைந்து கொடுத்த வடிவமாக சரியாக வரும்வரை பயிற்சி அளியுங்கள்.
ஸ்டெப் 6:
கடைசியாக, எழுத்துக்களின் வடிவில் புள்ளிகளை வைத்துக்கொடுத்து அந்த எழுத்துக்களை எழுத கற்றுக்கொடுங்கள்.
இவையனைத்திற்கும் பின்னரே புள்ளிகள், கோடுகள் என எதுவும் இல்லாமல், எழுத்துக்களின் பெயர்களைச் சொல்லி எழுதக் கூறுங்கள்.
இந்த ஸ்டெப்ஸின் அடிப்படையில் குழந்தைகளுக்கு கற்றுத்தந்தால், எளிதாக அவர்கள் கற்றுக்கொள்வார்கள். மேலும், கற்றல் முறையையும் அவர்கள் விரும்புவார்கள். உங்களுக்கும் வேலை எளிதாகிவிடும்.