இந்தியாவின் தேசிய விலங்கு புலி. சோழர்களின் கொடியில் புலிச்சின்னம் இடம் பெற்றிருக்கும். ஸ்வாமி ஐயப்பனின் வாகனம் என்ற பெருமையும் புலிக்கு உண்டு. புலியின் விலங்கியல் பெயர் Panthera tigers.
புலிகளின் தோலுக்காகவும் நகங்கள் மற்றும் பற்களுக்காகவும் இவை பெருமளவு வேட்டையாடப் பட்டதால் எண்ணிக்கை மிகவும் குறையும் நிலை ஏற்பட்டது.
தற்போது உலகமெங்கும் சுமார் 3500 புலிகளே காடுகளில் எஞ்சி இருக்கின்றன. மிருகக்காட்சிசாலைகளில் இருப்பனவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் சுமார் 8000 வரை இருக்கலாம்.
புலிகள் அதிகப்படியாக 13 அடி நீளமும் 320 கிலோ வரை எடையும் கொண்டவை. சராசரியாக நாளொன்றுக்கு 30 கி.மீ. தூரம் நீந்தும் திறன்கொண்டவை. மணிக்கு 60 கி.மீ. வேகம் வரையிலும் ஓடக்கூடிய ஆற்றலும் உண்டு. 6 மீட்டர் நீளம் தாவிப் பாயும்.
செங்குத்தாக 5 மீட்டர் உயரத்துக்கு எட்டிக் குதிக்கும். சுமார் 25 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.
மிருகக்காட்சிசாலைகளில், ஆண் சிங்கத்துக்கும் பெண் புலிக்கும் பிறந்த குட்டி ‘லைகர்’ எனப்படுகிறது. பெண் சிங்கத்துக்கும், ஆண்புலியும் பிறந்த குட்டி ‘டைக்லான்’ என்பார்கள். காட்டில் சிறுத்தைகளுடன் சேர்ந்தும் குட்டிபோடுவதுண்டு. வரிகளும் புள்ளிகளும் அந்தக்குட்டிகளின் உடலில் தென்படும்.
புலிகள் காலையிலும் மாலையிலும் வேட்டையாடும் இயல்பு கொண்டவை.
மனிதர்களை விட ஆறு மடங்கு கூர்மையான கண்பார்வை படைத்தவை. ஒவ்வொரு புலியின் மீதுள்ள கோடுகளும், மனிதரின் கைரேகை போல தனித்துவம் வாய்ந்தவை.
தங்களுக்கு என எல்லைகளை வகுத்துக்கொண்டு அதற்குள்ளேதான் வசிக்கும். எல்லைகளை அடையாளப் படுத்த அங்குள்ள மரங்களின் பட்டைகளை நகங்களால் கீறி வைக்கும்.
இரை கிடைத்தால் பெண் புலிகள் மற்றும் குட்டிகள் சாப்பிடும் வரை பொறுமையாக இருந்து பின்னர்தான் ஆண் புலி சாப்பிடும். (ஆனால் ஆண் சிங்கங்கள் முதலில் தாங்கள் சாப்பிட ஆரம்பிக்கும்.)
பெண் புலி, ஒரு பிரசவத்தில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈன்றெடுக்கும்.
புலிகள் மறைவில் இருந்து திடீரெனெத் தாக்கும் இயல்புடையவை. வழக்கமான இரை கிடைக்காத போதுமட்டும்தான் ஆட்கொல்லியாக மாறும். இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை ஆகாரம் இன்றி உயிர்வாழும். இதர மிருகங்களின் குரல் போலவே ஒலி எழுப்பி, அவற்றை அருகில் வரவழைத்து வேட்டையாடும். இரையின் கழுத்தைக் குதறிச் சாகடிக்கும். ஆனால் கழுத்துப் பக்கத்தில் கெட்டியான தசைகள் உள்ள முதலையைத் தாக்கும்போது அதன் வயிற்றைக் கிழித்துக் கொல்லும். பற்களைப் போலவே நகங்களும் கொல்லும் ஆயுதங்களாகப் பயன்படும்.