stories in tamil... 
கோகுலம் / Gokulam

உக்ரேனிய நாடோடிக்கதை - ஆடுகளின் சாமர்த்தியம்!

ஆர்.வி.பதி

க்ரேனிய நாட்டின் கிராமம் ஒன்றில் ஒரு கிழவனும் கிழவியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இரண்டு ஆடுகளை வளர்த்து வந்தார்கள். இரண்டு ஆடுகளும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தார்கள்.

இரண்டு ஆடுகளுக்கும் வயதாகிவிட்டது. மேலும் அவை தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை சாப்பிட்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தன. எனவே கிழவனும் கிழவியும் இரண்டு ஆடுகளையும் வீட்டை விட்டு துரத்த முடிவு செய்தனர்.

ஒருநாள் கிழவன் இரண்டு ஆடுகளையும் அழைத்தான்.

“ஆடுகளே. உங்களால் எங்களுக்கு ஒரு பயனும் இல்லை. ஆனால் நஷ்டம் ஏராளம். எனவே நீங்கள் இருவரும் இப்போதே இந்த வீட்டை விட்டு வெளியேறி ஆக வேண்டும்”

இதைக் கேட்ட இரண்டு ஆடுகளும் திடுக்கிட்டன.

தனது எஜமானன் இவ்வாறு சொல்லுவார் என்று அவை எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அவைகளுக்கு வேறு வழியில்லை. அடுத்தநாள் காலை இரண்டும் வீட்டைவிட்டு புறப்பட்டன.

இரண்டு ஆடுகளும் வயல்வெளிகளில் நடந்து சென்றன. வழியில் ஒரு ஓநாயின் தலை கிடந்தது. அதை எடுத்து தங்களுடன் கொண்டு வந்திருந்த ஒரு கோணிப்பைக்குள் போட்டுக் கொண்டன. பின்னர் இரண்டும் வேகமாக நடக்க ஆரம்பித்தன.

சற்று தொலைவில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அந்த இடத்தை நோக்கி நடந்தன. அந்த இடத்தை நெருங்கியதும்தான் அவைகளுக்கு பயம் ஏற்பட்டது. காரணம் அந்த தீயின் அருகே மூன்று நரிகள் அமர்ந்து கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தன. அவைகளுக்கு நல்ல பசி.

இரண்டு ஆடுகளும் நரிகளை வணங்கின.

“வணக்கம் நரிகளே”

“வாருங்கள். நல்ல சமயத்தில் வந்தீர்கள்”

இப்போது இரண்டு ஆடுகளும் சட்டென்று ஒரு திட்டம் தீட்டின. இல்லையென்றால் நரிகளிடமிருந்து தப்பித்து உயிரோடு திரும்ப முடியாது.

“அந்த கோணிப்பைக்குள் இருந்து ஓநாயின் தலை ஒன்றை எடு”

மற்றொரு ஆடு உடனே கோணிப்பைக்குள் கையை விட்டு ஓநாயின் தலையை எடுத்தது.

“இது இல்லை. இதைவிட பெரிய தலை இருக்கிறது”

இதைக் கேட்ட மற்றொரு ஆடு உடனே அந்த ஓநாயின் தலையை கோணிப்பைக்குள் போட்டு விட்டு மீண்டும் அதே தலையை எடுத்துக் காண்பித்தது.

“இதுவும் இல்லை. இதைவிட மிகப்பெரிய ஓநாயின் தலை ஒன்று இருக்கிறது. அதை எடு”

மீண்டும் அந்த ஆடானது எடுத்த அதோ தலையை பைக்குள் போட்டு மீண்டும் அதே தலையை வெளியில் எடுத்தது.

இதன் மூலம் நரிகள் கோணிக்குள் ஏராளமான ஓநாய்த்தலைகள் இருக்கின்றன என்று நினைத்துக் கொண்டன. ஆடுகளும் இதைத்தான் எதிர்பார்த்தன.

நரிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டன.

“இந்த ஆடுகள் இரண்டும் ஓநாய்களையே கொல்லும் அளவிற்கு சக்தி மிக்கவையாக உள்ளன. இவைகள் நினைத்தால் நம்மை மிகச் சுலபமாகக் கொன்றுவிடும். எனவே நாம் மூவரும் ஒருவர் பின் ஒருவராக இங்கிருந்து தப்பியாக வேண்டும்”

இதை மற்ற இரண்டு நரிகளும் ஒப்புக்கொண்டன.

முதல் நரியானது இவ்வாறு பேசியது.

“நண்பர்களே. கூழுக்கு தண்ணீர் அதிக அளவில் தேவைப்படுகிறது. நான் போய் எடுத்துக் கொண்டு வருகிறேன்”

ஒரு நரி இவ்வாறு சொல்லி தப்பித்துக்கொண்டது.

இரண்டாவது நரி ஒரு திட்டம் தீட்டியது.

“அந்த நரி சுத்த சோம்பேறி. அது நான் போனால்தான் உடனே தண்ணீர் கொண்டு வரும்”

இரண்டாவது நரியும் இவ்வாறாக தப்பித்துச் சென்றது.

மீதம் இருந்தது ஒரே ஒரு நரி.

“போன இரண்டு நரிகளும் முழு சோம்பேறிகள். நான் போய் அவைகளை உடனேயே அழைத்து வருகிறேன்”

மூன்றாவது நரியும் இப்படிச் சொல்லி அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டது.

இப்போது இரண்டு ஆடுகளும் நிம்மதி அடைந்தன. அவைகள் தங்களது சாதுர்யத்தினால் கொலைகார நரிகளிடம் இருந்து தப்பித்துக் கொண்டன. தயாராகி இருந்த கூழை இரண்டு ஆடுகளும் சுவைத்து சாப்பிட்டு அந்த பகுதியிலேயே சந்தோஷமாக வாழ ஆரம்பித்தன.

நைனாமலை பெருமாளை அறிவீர்களா?

உணவு அருந்திய பின் இனிப்பு சாப்பிடுவது சரியா? 

சிறுகதை – முகம்!

வீடுகளின் அடையாளம் BHK குறியீட்டு என்பது தெரியும்... 1RK என்றால் என்ன தெரியுமா?

“நான் ரொம்ப குண்டா இருக்கேன்னு பலர் என்னை கேலி செய்கிறார்கள்” – உலக அழகியே வேதனை!

SCROLL FOR NEXT