பொதுவாக குழந்தை பருவத்தில் நம் எல்லோருக்கும் தோன்றும் ஒரு கேள்வி என்னவென்றால், ஏன் பிப்ரவலி மாதத்தில் மட்டும் 28 நாட்கள் என்பதுதான். அதற்கான விடையை நாம் பெரியவர்களாகி தெரிந்துக்கொண்டாலும், இன்றைய தலைமுறை குழந்தைகளும் இந்த கேள்வியை கேட்க தவறுவதில்லை.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் வருடத்தில் உள்ள 12 மாதங்களும் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தன. அப்போது மாதங்களில் குறைவான நாட்களை கொண்டிருந்த பிப்ரவரி மாதம் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தது.
பிப்ரவரி: உங்களுக்கெல்லாம் 30 அல்லது 31 நாட்கள். எனக்கு மட்டும் 28 நாட்கள். போனால் போகட்டும் என்று நான்கு ஆண்டுகளுக்கு ஒரே ஒரு முறை மட்டும் ஒரு கொசுறு நாள். ஏன் இந்த வஞ்சனை? என வருத்தத்துடன் கூறியது. இதனை கேட்டுக்கொண்டிருந்த மார்ச் மாதம் ”என்ன செய்வது? ஆண்டுகள் என்ற இந்த குடும்பத்தில் நீ தான் கடைக் குட்டி. கடைக் குட்டிக்கு மற்றவர்களை விட குறைவாகக் கிடைப்பது இயற்கை தானே? என சாதாரணமாக கூறியது.
இதைகேட்ட பிப்ரவரி மாதத்திற்கு ஒரே கோபம்,”என்ன உளறுகிறாய்? வருடத்தில் நான் இரண்டாவது குழந்தை. உனக்கும் மூத்தவள். டிசம்பர் தான் கடைக்குட்டி என காட்டமாக சொன்னது. இவர்கள் இருவர் பேசுவதையும் கேட்டுக்கொண்டிருந்த டிசம்பர் மாதம், ” அச்சோ பாவம், உனக்கு நம்முடைய குடும்பத்தின் சரித்திரம் தெரியாது. மார்ச் முதல் டிசம்பர் வரை நாங்கள் பத்து பேரும் ஒன்றாகப் பிறந்தோம். மார்ச் முதல் குழந்தை. நான் டிசம்பர், பத்தாவது குழந்தை என்றது.
உடனடியாக மார்ச் பிப்ரவரியிடம், ”உனக்கு மாதங்கள் எப்படி பிறந்த கதை தெரியாது அல்லவா? நான் சொல்கிறேன் கேள் என்றது. ரோமானியர்கள்தான் நாட்காட்டியை உருவாக்கினார்கள். அதில் வருடத்தில் மொத்தம் 10 மாதங்களை உருவாக்கினார்கள். இவ்வாறு மாதங்கள் உருவாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், விவசாயத்திற்கான பருவநிலை மாற்றம் பற்றி அறியவே உருவாக்கப்பட்டது.
முதலில் உருவாக்கிய ஒரு வருடத்தில் 304 நாட்கள் மட்டும் தான் இருந்தது. அதில் மொத்தம் பத்து மாதங்கள். அவற்றில் ஆறு மாதங்கள் முப்பது நாட்களாகவும், மீதி நான்கு மாதங்கள் முப்பத்து ஒன்று நாட்களாகவும் வடிவமைக்கப்பட்டது.
இதனைகேட்டுக்கொண்டிருந்த ஏப்ரல் மாதம், மார்ச் மாதம் சொல்லிக்கொண்டிருந்த கதையில், தனக்கு தெரிந்த விஷயங்களையும் சொல்லத் தொடங்கியது.”ஒன்றிலிருந்து பத்து வரையான ரோமானிய எண்களின் பெயர்கள் எங்களுக்கு சூட்டப்பட்டன. முதல் மாதம்-மார்ஷியஸ், இரண்டு-ஏப்ரலியஸ், மூன்று-மையஸ், நான்கு-ஜூனியஸ், ஐந்து-க்வின்டிலிஸ், ஆறு-செக்ஸிடிலிஸ், ஏழு-செப்டம்பர், எட்டு-அக்டோபர், ஒன்பது-நவம்பர், பத்தாவது மாதம்-டிசம்பர் என சொல்லி முடித்தது.
அப்போது அங்கே வந்த மே மாதம், ”பூமி தன்னை தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரமும், சூரியனை சுற்றிவர சரியாக 365.25 நாட்கள் ஆகிறது என்றது. ஆனால் நாட்காட்டியில் 304 நாட்களை மட்டுமே ரோமானியர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள். ஆக, நுமா பாம்ப்லியஸ் என்ற ரோம நாட்டு அரசர் ஜனவரி, பிப்ரவரி என்ற இரு மாதங்களை முறையே பதினொன்றாவது, பன்னிரெண்டாவது மாதங்களாகச் சேர்த்து வருடத்தில் 355 நாட்கள் கொண்ட நாட்காட்டியாக மாற்றினார்.
அந்தசமயம் தற்செயலாக வந்த ஜூன் மாதம்,” நுமா பாம்ப்லியஸ் இரண்டு மாதங்களை சேர்த்த பிறகும், பூமி சுற்றுகைக்கும், நாட்காட்டிக்கும் பத்து நாட்கள் வித்தியாசம் இருந்தது என குறிப்பிட்டது. பின்னர் அதுவே அதற்கான விடையும் சொல்லியது,” கிறிஸ்து பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்னால் ஜூலியஸ் சீசர் என்ற ரோம அரசர் இந்த 10 நாட்களைச் சேர்த்து புதிய நாட்காட்டியை வடிவமைத்தார். இதில் ஜனவரி 31 நாட்கள், பிப்ரவரி 30 நாட்களாகியது என்றது.
இவ்வாறு மற்ற மாதங்கள் நாட்காட்டி பிறந்த கதை பற்றி பேசி கொண்டு இருக்கையில், உலகளவு பெயர்பெற்ற அரசர் ஜூலியஸ் சீசரின் பெயரை தாங்கிக்கொண்டிருக்கும் ஜூலை மாதம், இந்த கதை சொல்லி கூட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, நாட்காட்டி பிறந்த வரலாற்றில் தனக்கு தெரிந்த விஷயத்தையும் சொல்ல தொடங்கியது. ” அரசர், ஜூலியஸ் சீசர் ஐந்தாவது மாதத்தில் பிறந்தவர். ஆகவே என்னுடைய க்வின்டிலிஸ் என்ற ரோம பெயரை ஜூலை என்று மாற்றினார். தான் பிறந்த மாதத்தில் மற்ற மாதங்களை விட குறைவான நாட்கள் இருக்கக் கூடாது என்று, பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் எடுத்து எனக்குக் கொடுத்தார். எனக்கு 31 நாட்கள் ஆக, உனக்கு 29 நாட்களாகக் குறைந்தது” என்றது.
அப்போது அந்த பக்கம் வந்த ஆகஸ்ட் மாதம், ஜூலியஸ் சீசர் பிறகு ஆட்சிக்கு வந்த அகஸ்டஸ் சீசர் ஆறாவது மாதமான செக்ஸிலிடிஸ் மாதத்தில் பிறந்தவர். அதனால் என்னுடைய பெயரை ஆகஸ்ட் என்று நாமகரணம் செய்தார். நான் என்ன ஜூலியஸூக்கு சளைத்தவனா என்று மீண்டும் பிப்ரவரியான உன்னிடமிருந்து ஒரு நாளைப் பிடுங்கி எனக்கும் 31 நாள் கொடுத்தார். நீ பாவம், 28 நாளாக இளைத்து விட்டாய்.
இப்படி எவ்வாறு தனக்கு 28 நாட்கள் வந்தது என மன வருத்தத்துடன் கேட்டுக்கொண்டிருந்த பிப்ரவரி மாதம், அதெல்லாம் சரி, நான் எப்படி வருடத்தின் இரண்டாவது மாதமாக மாறினேன்? என கேள்வி எழுப்பியது. இந்த சந்தர்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஜனவரி மாதம், ”ஏன்னுடைய பெயர் ‘ஜேனஸ்” என்ற ரோம கடவுளின் பெயரிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த கடவுள் ஆரம்பத்திற்கும், முடிவிற்கும் அதிபதி. ஆகவே வருடத்தின் ஆரம்பத்திற்குத் தள்ளப்பட்டேன். நீ என்னுடன் பிறந்ததால் இரண்டாவது மாதமாக மாறினாய் என்றது.
உடனே பிப்ரவரி, “ உங்களைபோல் என்னுடைய பெயருக்கும் எதாவது காரணம் உண்டா? என்றது. அதற்கு பதில் அளித்த ஜனவரி,”ஏன் இல்லாமல்,ரோமானியர்கள் இறைவனை வெறும் தரையில் அமர்ந்து தொழுவதில்லை. ஒரு விரிப்பில் அமர்ந்து தொழுவார்கள். அந்த விருப்பின் பெயர் “பிப்ருவா”. அதுவே உனது பெயராகியது என்றதும் பிப்ரவரி மாதத்திற்கு ஒரே மகிழ்ச்சி.
ஆனால், அப்போதும் பிப்ரவரிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது, அதுதான் ஏன் நான்கு வருடத்திற்கு ஒரு முறை எனக்கு 29 நாட்கள் வருகிறது? இந்த 2024ம் ஆண்டில் எனக்கு 29 நாட்கள் உள்ளதே? இது எதனால் இது ஏற்பட்டது? என்றது.
பிப்ரவரியின் சந்தேகத்திற்கு பதில் அளித்த டிசம்பர்,”பூமி சூரியனை சுற்றிவரும் சுழற்சிக்கும், நாட்காட்டிக்கும், நான்கு ஆண்டுகளில், ஒரு நாள் இடைவெளி ஏற்படுகிறது. அதனை சரி செய்ய, நான்கு ஆண்டுகளில், ஒரு நாள் கூட்ட வேண்டி நேர்ந்தது. பாவம், உனக்கு 28 நாட்கள் மட்டுமே இருந்ததால், அந்த ஒரு நாள் பிப்ரவரியில் சேர்க்கப்பட்டது. ஆம், ஒரு முக்கியமான விஷயம் தற்போது மனிதர்கள் பயன்படும் நாட்காட்டிக்கு கிரிகோரியன் என்று பெயர். இது 1582 ஆம் ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது என்றது.
இவ்வாறு ஒரு வருடத்தில் மாதங்களுக்கு பெயர் வந்த கதையும், பிப்ரவரிக்கு ஏன் குறைவான நாட்கள் இருக்கிறது என மனவருத்தத்தையும் அனைத்து மாதங்களும் ஒன்றாக சேர்த்து கதை சொல்லி தங்களை பற்றிய வரலாற்றி தெரிந்துக்கொண்டன.