Türkiye friends 
கோகுலம் / Gokulam

உலக சிறுவர் கதைகள்: 3 - முட்டாள் என அறியப்படுகிறவன் (துருக்கி நாட்டுப்புறக் கதை)!

ஷாராஜ்

தென்கிழக்கு பெர்ஷியாவில், கெர்மன் என்ற நகரத்தில், இரு நண்பர்கள் வசித்து வந்தனர்.

அதில் எர்ஸ்லான் மிகவும் எளிமையான மனிதன். உயரமானவன், நீண்ட மூக்கு உடையவன். அவனுக்குக் காது சற்று மந்தம். சற்று மந்த புத்தி உடையவனும் கூட. ஆனால், அவன் மிகவும் நேர்மையான, நல்ல மனிதன். ஏமாற்றுதல், துரோகம், தந்திரம் போன்ற குணங்கள் எதுவும் அவனிடம் கிடையாது.

எர்ஸ்லான் முட்டாள் என்று மற்றவர்களால் அவனது முதுகுக்கு பின் சொல்லப்பட்டான். யாராவது அவனது முகத்துக்கு நேராகவே அதைச் சொன்னாலும் கூட அதற்காக அவர்களிடம் சண்டை பிடிக்கவோ, கோபப்படவோ, வருத்தப்படவோ மாட்டான்.

ரோஸ்தம் முரடன். உயரக் குறைவும், காளையைப் போலக் கட்டுறுதியான உடல் வாகும் கொண்டவன். ரோஸ்தம் என்ற பெயருக்கு உறுதியான மனிதன் என்றுதான் பொருள். சுருட்டைத் தலை முடி. கருத்த, பெரிய கண்களில் எப்போதும் ஆவேசம் இருக்கும்.

அவர்கள் இருவரும் கடைவீதியில் பெர்ஷியன் தரைவிரிப்புகளைத் தயாரித்து விற்கும் கடைகளை வைத்திருந்தனர். சொந்தமாக நெசவு எந்திரங்களும், பணியாளர்களும், ஓவியர்களும் இருந்தனர். இருவரின் கடைகளிலும் மரபார்ந்த முறையில் பெர்ஷியன் வரைகலைகள் செய்யப்பட்ட தரை விரிப்புகள் தயாரிக்கப்படும்.

அவற்றின் வரைகலைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், வண்ணங்களைத் தேர்வு செய்வதில் நண்பர்கள் இருவரும் மாறுபட்ட ரசனை கொண்டவர்களாக இருந்தனர். எர்ஸ்லான் நீலம், ஊதா, பச்சை போன்ற குளிர்மை வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பான். இடைவெளி மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில், மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்களைப் பயன்படுத்துவான். அவனது வண்ணத் தேர்வு பார்ப்பதற்கு இதமாக இருக்கும்.

ஆனால் ரோஸ்தமோ சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பழுப்பு போன்ற வெதுமை வண்ணங்களையே அதிகம் பயன்படுத்துவான். அவை கண்ணைப் பறிக்கும் விதமாகவும், உறுத்தலாகவும் இருக்கும்.

இவர்கள் இருவரும் இந்த வண்ணத் தெரிவுகள் பற்றி தமக்குள் விவாதம் செய்வது வழக்கம். விவாதத்தின் முடிவில் இருவருக்குமிடையே சண்டை வந்து, அவர்களுக்குள் பேச்சு வார்த்தை முறிந்துவிடும். சில நாட்களில் சமாதானமாகி, ஒருவருக்கொருவர் கன்னத்தில் முத்தமிட்டு, மீண்டும் பழையபடி நட்பைத் தொடர்வார்கள்.

பிறகு வேறு ஏதாவது காரணமாக அவர்களுக்குள் இது போல விவாதம் வரும். உதாரணமாக, ரூமி கவிதைகளை எர்ஸ்லான் வாசித்திருப்பான். அதற்கு அவன் ஒரு விதமாகப் பொருள் சொல்ல, ரோஸ்தம் முற்றிலும் மாறான வேறு ஒரு பொருளைக் கூறி, "இதுதான் சரியானது. நீ கூறிய பொருள் தவறு" என்று பிடிவாதம் செய்வான். மீண்டும் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை முறிந்துவிடும்.

சில நாட்கள் கழித்து பழையபடியே சமாதானமாகி, ஒருவர் கன்னத்தில் மற்றவர் முத்தமிட்டு, நட்பைத் தொடர்வார்கள்.

வருடங்கள் கழிந்தன. எர்ஸ்லானின் காது முற்றிலுமாகவே கேட்காதபடி ஆகிவிட்டது. அவன் சைகைகள் மற்றும் தலையாட்டுவதன் மூலமாக மற்றவர்களுடன் உரையாடி வியாபாரத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தான்.

ஒரு முறை ரோஸ்தம் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தான். அதனால் தொடர்ந்து சில நாட்களுக்கு கடைக்குச் செல்லவில்லை. எனவே, அவனை நலம் விசாரித்து வருவதற்காக அவனது வீட்டிற்குச் செல்லலாம் என்று எர்ஸ்லான் தீர்மானித்தான். ரோஸ்தமுக்குக் கொடுப்பதற்காக கடைத் தெருவில் இருந்து சிறந்த செர்ரி ஜாம் பாட்டில் ஒன்றையும் வாங்கிக்கொண்டான்.

ரோஸ்தமுடன் என்ன பேச வேண்டும் என்பது பற்றி அவன் தனக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டான்.

"நான் அவனிடம், 'எப்படி இருக்கிறாய்?' என்று கேட்பேன். அவன், 'இப்போது பரவாயில்லை!' என்று சொல்வான். நான், 'கடவுளுக்கு நன்றி!' என்பேன்..."

இப்படியாக, நிகழவிருக்கும் உரையாடல் பற்றித் தனது கேள்விகளையும், அதற்கு ரோஸ்தம் என்ன சொல்வான் என்று எதிர்பார்க்கக்கூடிய பதில்களையும் பேசி, மறக்காது இருப்பதற்காகப் பல முறை ஒத்திகை பார்த்துக்கொண்டான்.

அதன் பிறகு அவனைச் சந்திக்க அவனது வீட்டுக்குச் சென்றான். வீட்டிற்குள் செல்லும்போதே அவனது மனதில் நண்பனை சந்திக்கவிருக்கும் மகிழ்ச்சியும், முகத்தில் புன்னகையும் இருந்தது.

ரோஸ்தம் படுக்கையில் படுத்திருந்தான். மகிழ்ச்சியும் புன்னகையுமாக எர்ஸ்லான் வருவதைப் பார்த்ததுமே அவனுக்குக் கடுப்பாகிவிட்டது.

எர்ஸ்லான் அவனிடம், "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டான்.

"வலியில் உயிர் போய்விடும் போலிருக்கிறது" என்றான் ரோஸ்தம்.

எர்ஸ்லான் உடனே, ஒத்திகை பார்த்தபடியே, "கடவுளுக்கு நன்றி!" என்றான்.

ரோஸ்தம் கோபத்தில் உதட்டைக் கடித்து கோபத்தை அடக்கிக்கொண்டான்.

எர்ஸ்லான் அடுத்ததாக, "இனி எப்போது மீண்டும் கடைக்கு வரத் தொடங்குவாய்?" என்று கேட்டான்.

"நான் கடைக்கு வருவது எங்கே? விரைவில் மரணத்தின் தேவதையைப் பார்த்துவிடுவேன் போலிருக்கிறது!" என்றான் ரோஸ்தம்.

ஒத்திகை பார்த்திருந்தபடியே, "அது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதற்காக கடவுளிடம் நானும் வேண்டிக்கொள்வேன்!" என்றான் எர்ஸ்லான்.

ரோஸ்தம் அவனைக் குரோதத்தோடு முறைத்துப் பார்த்தான். எர்ஸ்லானின் கையில் இருந்த பாட்டிலைக் கண்டதும், "நீ எனக்கு விஷம் வாங்கி வந்திருக்கிறாயா?" என்று கேட்டான்.

எர்ஸ்லான் ஒத்திகையில் இந்தக் கேள்வி இல்லை என்றாலும், ரோஸ்தம் தன் கையில் உள்ள பாட்டிலைப் பார்த்துவிட்டு ஏதோ கேட்பதை கவனித்து, "ஆம், சந்தையில் இருப்பதிலேயே சிறப்பான ஒன்றைத் தேடிப்பிடித்து வாங்கி வந்தேன்!" என்றான்.

அதைக் கேட்டதும் ரோஸ்தம் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து, ஒரு மிருகம் பாய்வது போல எர்ஸ்லான் மீது பாய்ந்தான். அவனைத் தனது முரட்டுக் கரங்களால் கவ்விப் பிடித்து, அந்த அறைக்குள்ளிருந்து வெளியே தூக்கி வீசினான்.

"முட்டாளே! இங்கிருந்து போய்விடு!" என்று அவனைப் பார்த்து கர்ஜிக்கவும் செய்தான்.

ஏன் அவன் அவ்வாறு செய்தான் என்பது எர்ஸ்லானுக்கு கடைசிவரை புரியவே இல்லை.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவும் 5 Stoic கொள்கைகள்! 

சருமப் பராமரிப்பில் இந்தத் தவறுகள் மட்டும் வேண்டாமே! 

சாளக்கிராம கல் உருவான வரலாறு தெரியுமா?

புகைப்பழக்கத்தை விட்டதும் இதய ஆரோக்கியம் சீராக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?

மருதாணியில் மறைந்திருக்கும் மருத்துவ உண்மைகள்!

SCROLL FOR NEXT