Rubik’s Cube 
கோகுலம் / Gokulam

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

மணிமேகலை பெரியசாமி

ரூபிக்ஸ் க்யூப் என்பது வண்ணமயமான 3D புதிர் விளையாட்டுப் பொருளாகும். இது கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை உலகெங்கிலும் வாழும் பல்வேறு மக்களை கவர்ந்துகொண்டு வருகிறது.  இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. நம் அறிவு, பொறுமை, சாமர்த்தியம், மனசுறுசுறுப்புக்கு சவால் விடும் புதிராக உள்ளது.  சிக்கலைத் தீர்ப்பது, விடாமுயற்சி மற்றும் சவால்களைத் தழுவுதல் போன்ற பண்புகளின் உருவகமாக ரூபிக்ஸ் க்யூப் விளங்குகிறது. ரூபிக்ஸ் க்யூப் அனைத்து வயதினராலும் விரும்பி விளையாடப்படும் பொழுதுபோக்கு மட்டுமின்றி படைப்பாற்றல் மற்றும் புத்தி கூர்மை போன்றவற்றை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:

  • 1974 ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரைச்  சேர்ந்த கட்டிடக்கலை கலைஞரும் பேராசிரியருமான 'எர்னோ ரூபிக்' என்பவரால் ரூபிக்ஸ் க்யூப் கண்டுபிடிக்கப்பட்டது.

  • ஆரம்ப காலகட்டத்தில், எர்னோ ரூபிக் தனது மாணவர்களுக்கு முப்பரிமாண சிக்கல்கள் மற்றும் இடஞ்சார்ந்த உறவுகளைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாகதான் இந்த ரூபிக்ஸ் க்யூப்பை வடிவமைத்தார்.

  • 1975 ஆம் ஆண்டு புடாபெஸ்ட் நகரில் 'மேஜிக் க்யூப்' என்ற பெயரில் சிறுவர்கள் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைகளில் 26 பகுதிகள் கொண்ட ரூபிக்ஸ்  க்யூப் விற்பனைக்கு வந்தது.

  • 1980 ஆம் ஆண்டில், ஐடியல் டாய் கார்ப்பரேஷன் என்ற பொம்மை உற்பத்தியாளரின் கவனத்தை ஈர்த்தது. இதன் விளைவாகத்தான், இந்த க்யூப் சர்வதேச சந்தையில் ’ரூபிக்ஸ் கியூப்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • அதே ஆண்டில், ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் ரூபிக்ஸ் கியூப் Toy of the Year-ஆக தேர்வு செய்யப்பட்டது.

  • அதன்பிறகு, 1981ஆம் ஆண்டு பின்லாந்து, ஸ்வீடன், இத்தாலி நாடுகளும் Toy of the Year-ஆக அங்கீகரித்தது.  

  • ரூபிக்ஸ் க்யூப் புதிரை தீர்க்க அதை கண்டுபிடித்த எர்னோ ரூபிக் அவருக்கே 1 மாத காலம் தேவைப்பட்டதாம்.

  • இதுவரை, உலகெங்கும் 40 கோடி எண்ணிக்கைக்கு மேல்  ரூபிக்ஸ் க்யூப்கள் விற்பனை ஆகியுள்ளது.

  • சர்வதேச ரூபிக்ஸ் க்யூப் போட்டிகள் முதன்முதலாக 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது, Minh Thai என்ற அமெரிக்க வீரர்  22.95 வினாடிகளில் ரூபிக்ஸ் க்யூப் புதிரை விடுவித்து வெற்றி பெற்றார்.

  • உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் அமெரிக்க நாட்டில் Knoxville என்ற இடத்தில் உள்ளது. இந்த ரூபிக்ஸ்  க்யூப்பின் எடை 500 கிலோ.

  • உலகிலேயே மிக சிறிய ரூபிக்ஸ் க்யூப் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த Evgeniy Grigoriev என்பவரால் உருவாக்கப்பட்டது. சாதாரண க்யூப் போலவே செயல்படும் இதன் அளவு 10மி.மீ ஆகும்.

  • ‘Masterpiece Cube' என்றழைக்கப்படும் க்யூப் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ரூபிக்ஸ் கியூப்பாக்கும். 1995 ஆம் ஆண்டு 'Diamond Cutters International' என்ற நிறுவனத்தால் இது உருவாக்கப்பட்ட து. இதில் மாணிக்கம், மரகதம்,  செவ்வந்தி கல் ஆகியவை தங்கத்தால் ஆன க்யூப்பில் பதிக்கப்பட்டுள்ளது.

  •  ரூபிக்ஸ் க்யூப் மீது தீராத மோகம் உள்ளவர்களை 'Cubaholics' என்று அழைக்கும் சொல்வழக்கும் உள்ளதாம்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

SCROLL FOR NEXT